முன்னுரை
சங்ககால மக்களின் வாழ்க்கை முழுவதும் பண்பாட்டு மயமாக்கப்பட்டச் சூழல். அதனால் அவர்கள் பண்பாடு கருதியே குறிப்பால் நிறங்கள் வழி தங்களது பாலியல் செய்திகளை உணர்த்தி வந்தனர். சங்க இலக்கியத்தில் பாலியல் புனைவுகளை வெளிப்படையாகச் சுட்டும் மரபு இல்லை. அவற்றை நிறங்கள் வழிக் கூற முற்பட்டுள்ளனர். சமூகத்தில் படைக்கப்பட்ட நிறம் மொழியமைப்பில் ஓர் ஊடகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிறங்கள் சமூகக் கட்டமைப்பில் குறியீடாகவும், சமுதாயத்தினரின் எண்ணங்களை உள்ளடக்கியதாகவும் திகழ்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த வண்ணக்குறியீட்டின் வழியாக சங்க மகளிர் தம் பாலியல் உணர்வுகளை எவ்வாறு வெளிப்படுத்துகின்றனர் என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைந்துள்ளது.
நிறக்குறியீடு
மனிதன் தனது கருத்துகளைப் பிறரிடம் பரிமாறிக் கொள்ளும் கருவியாக மொழியைப் பயன்படுத்துகிறான். இம்மொழியினை நாம் இருவகையாகப் பகுக்கலாம். ஒன்று சைகைமொழி அல்லது குறியீட்டு மொழி, மற்றொன்று பேச்சுமொழி. மேற்கூறியவற்றுள் குறியீட்டு மொழியினை நோக்கும்பொழுது அதில் பலவகை உண்டு. அவற்றுள் ஒன்றாக நிறத்தைக் (வண்ணம்) குறிப்பிடலாம். நிறத்திற்கும் மனிதனுக்குமான உறவு ஆதிகாலம் முதல் இன்று வரை மிக நெருக்கமான ஒன்றாகத் திகழ்கிறது. இந்நிறங்களைக் குறியீடாகப் பயன்படுத்தும் பொழுது அதற்குரிய தன்மை அல்லது பொருண்மையின் அடிப்படையில் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.