கன்னட சினிமாவில் பி. சேஷாத்ரி என்று ஒரு இயக்குனர். அவரை அறிமுகம் செய்து வைத்துத் தான் ஆகவேண்டும். நம் தமிழரில் நல்ல சினிமாவை ரசிப்பவர்கள் ஒருசில ஆயிரமாவது இருப்பார்கள் என்று நம்ப விரும்புகிறேன். அது பற்றிப் பேசுபவர் தெரிந்ததாக சொல்லிக்கொள்பவர்கள் இதைவிட ஒன்றிரண்டு மடங்கு கூடவே இருக்கக் கூடும் தான். நான் ரசிப்பவர்களைப் பற்றி மாத்திரமே பேச விரும்பு கிறேன். நம்மூர் சிவாஜி கணேசன், சிம்பு வகையறா போன்று அங்கும் ராஜ்குமார் போன்றாரை விட்டு ஒதுங்கி தனிப்பாதையிட்டுச் செல்லத் தொடங்கியவர்கள், கிரீஷ் கர்நாட், காஸரவல்லி, பி.வி. காரந்த் போன்றாரைத் தெரிந்திருக்கலாம். எம்.எஸ் சத்யு, ஜி.வி. ஐயர் போன்றார், தெரிந்த பெயர்களாக இருக்குமா என்பது தெரியாது. அதிலும் கிரீஷ் கர்நாட் தெரிந்திருப்பது, அவர் நடித்த சம்ஸ்காரா ,எழுபதுகளில் பெரும் சச்சரவில் சிக்கியது காரணமாகவே இருக்கக் கூடும்.
கொஞ்சம் காட்டமாகவே நான் எழுதுவதாகத் தோன்றலாம். எனக்கான நியாயங்கள், சரியோ தவறோ இரண்டு மூன்று இருக்கத் தான் செய்கின்றன. நல்ல சினிமா பயிற்சி பட்டறைகள் ஒன்றிரண்டு, அதில் ஒன்றில் என் கன்னட நண்பர் ஒருவர், சினிமா ரசிகர் வகுப்பெடுக்கச் சென்றார். எடுத்த உடனேயே அந்த பயிற்சி மாணவர்கள் சொன்னது, “ஐயா நீங்கள் எல்லாம் உடனே இத்தாலி சினிமா, ப்ரெஞ்ச் சினிமா என்று பேச ஆரம்பித்து விடுகிறீர்கள். நீங்களும் உங்கள் நண்பர் சாமிநாதனும். நம்ம ஊரைப் பத்திப் பேசுங்க. இந்த மண்ணைப் பத்திப் பேசுங்க” என்பது அவர்களது ஏகோபித்த வேண்டுகோள். இவர்கள் ஏற்கனவே பயிற்சியில் இருப்பவர்கள். முதல் நாள் முதல் ஷோ பார்க்க சென்னை வெயிலில் டிக்கட் வாங்க நிற்பவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்கள் பயிற்சியில் என்ன எதிர்பார்த்தார்களோ தெரியாது.