நேற்று குணா கவியழகனின் ‘விடமேறிய கனவு’ நூல் வெளியீடு நிகழ்வுக்குத். தவிர்க்க முடியாத காரணங்களினால் செல்ல முடியவில்லை. நண்பரும் எழுத்தாளருமான தேவகாந்தன் சென்றிருந்தார். எனக்கும் ஒரு பிரதி வாங்கி வருமபடி கூறியிருந்தேன். அதனைப்பெற்றுக்கொள்ள நேற்றிரவு அவர் இருப்பிடம் சென்றிருந்தேன். சிறிது நேரம் பல்வேறு விடயங்களைப்பற்றி உரையாடினோம். நூல் வெளியீடு, முகநூல், தமிழகத்தில் அவரது அனுபவங்கள் என்று பல்வேறு விடயங்கள் உரையாடலில் வந்து போயின.
நா.பா.வின் மணிபல்லவம் நாவலைச் சுருக்கி வைத்திருப்பதாகக் கூறினார். தனக்கு ஒரு காலத்தில் பிடித்த நாவலது என்றார். இப்பொழுது வாசிக்கும்போது அன்றிருந்த பிடிப்பு ஏற்படுவதில்லை என்றார். சிலப்பதிகாரம் போல் மணிபல்லவம் நாவலுக்கு ஒரு சிறப்புண்டு. அக்காலத்து மக்களை மையமாக வைத்து உருவான நாவலது. எனக்கு நா.பா.வின் தமிழ் பிடிக்கும். அக்காலகட்டத்தில் அவரது பொன்விலங்கு நாவலின் ‘பைண்டு’ செய்யப்பட்ட பிரதியொன்று என்னிடமிருந்தது. இலட்சிய வேட்கை கொண்ட நாயகனான சத்தியமூர்த்தி மல்லிகைப்பந்தல் கிராமத்து ஆசிரியர் வேலைக்கான நேர்முகப்பரீட்சைக்காகச் செல்வதுடன் ஆரம்பமாகும் நாவலின் இடையில் வரும் கருத்தாழம் மிக்க வசனங்களை அப்போது விரும்பி வாசிப்பதுண்டு. இன்று அக்காலகட்டத்தில் வாழ்வில் இன்பமேற்றிய நினைவுச்சின்னங்களாக அன்று வாசிப்பில் இன்பம் தந்த நூல்கள் விளங்குகின்றன.