மொழி என்பது காலந்தோறும் மாறிக்கொண்டே வரும். மாற்றத்தைப் படைப்பாளிகள் தமது படைப்பில் பதிந்து படைப்பாக்குவர். தமிழ் மொழி பற்றியச் சிந்தனை தொல்காப்பியர் காலம் முதல் தொடங்கி வந்துள்ளது. தொல்காப்பியர் காலத்தில் தமிழ் மொழி மூவழக்கு நிலையாக இருந்தது.
அதாவது செய்யுள் வழக்கு, உரைநடை வழக்கு, பேச்சு வழக்கு என்ற நிலையில் மொழி விளங்கியது. இந்த நிலை ஐரோப்பியர் காலத்திற்குப் பின் மாறிவிட்டது. காரணம் பா வகையும் (செய்யுள் வழக்கு) உரைநடையும் இலக்கியப் படைப்பிற்குரிய இருவகைகளாக மாறின. பொதுப் பேச்சு வழக்கும் தமக்குரிய எழுதும் சூழல்களைப் பெருக்கிக் கொண்டது. காலப்போக்கில் உயர் வழக்கு என்று ஒன்றும் பேச்சு வழக்கு என்று ஒன்றும் உரைநடையில் உருவாகி தனித்தனிச் சூழல்களைத் தத்தமது பயன்பாட்டிற்கு அமைத்துக் கொண்டன. இதன் பயனாய் தமிழில் இரட்டை வழக்கு நிலை உருவாகியது என்று ஆரோக்கியநாதன் கூறுகிறார்.