தொடங்கும் முன் சில வார்த்தைகள்……
எனக்கு பல விஷயங்களில் தொடர்பும் பிடிப்பும் பின் ரசனை உணர்வும் ஏற்பட்டது வேடிக்கையாக இருக்கும். தமிழ் நாட்டில் இருந்த வரை, எனது பதினெட்டாம் பிராயம் வரை நான் தெருக்கூத்து பார்த்தவனுமில்லை. அப்படி ஒன்று இருப்பதாக அறிந்தவனுமில்லை. தமிழ் நாட்டிலிருந்து ஒரிஸ்ஸா வுக்கும் பின்னர் தில்லிக்கும் சென்று பத்து வருடங்களுக்குப் பின் தான் தெருக்கூத்து என்ற சமாசாரத்தின் ஒர் சிறு சாம்பிள் முப்பது நாற்பது நிமிஷ துண்டுக் காட்சி அனுபவம் கிடைத்தது. அது 1966 அல்லது 1967- ஆக இருக்கக் கூடும் அது ஒரு குறுகிய நேரக் காட்சியே ஆனாலும், அது ஒரு மின் வெட்டாக இன்றும் மனதில் ஓடும் நிரந்தர பதிவாக ஆகிவிட்டது. அது பற்றி எழுதியதும் என் நினைவில் இருக்கிறது. எழுதியது அந்த வருடத்தின் பின் மாதங்களில் தீபம் இதழில் என்பதும் நினைவில் இருக்கிறது. ஆனால் இப்போது அது கைவசம் அகப்பட மறுக்கிறது. தில்லி ரவீந்திர பவன் புல்வெளியில் சங்கீத நாடக் அகாடமியின் அந்நாளைய செயலாளர், பெயர் சுரேஷ் அவஸ்தி என்று நினைக்கிறேன், அவருடைய நாடகம் என்ற கருத்தாக்கத்தில் இந்தியா முழுதும் பரவிக் கிளைத்துள்ள கிராமீய கலைகள், பூர்வீக குடிகளின் கலைகள் எல்லாமும் அடங்கும். வருடா வருடம் Folk Arts Festival ஒன்றை அவர் நடத்துவார். அவர் நடத்திய அந்த விழாக்களிலிருந்து தான் அவற்றை ஒன்று விடாமல் பார்த்து அனுபவித்தபின் தான் அந்த பார்வையை நானும் ஸ்வீகரித்துக் கொண்டேன். என் ரசனைக்கும் அது ஏற்புடையதாக இருந்தது. தெருக்கூத்து பார்த்த முதல் அனுபவமும் ரசனையும் அது பல தளங்களில் இயங்கும் ஒன்று என்ற அறிவும் அன்றைய சங்கீத் நாடக் அகாடமியின் செயலாளர் சுரேஷ் அவஸ்தியின் உபயம்.