தமிழ்நாட்டின் கிராமீய நாட்டார் நாடகக்கலையும் இன்று தர்மபுரி, வட,தென் ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் என்று தொணடைமண்டலம் சார்ந்த அண்மைப்பகுதிகளுக்குள் உட்பட்டுள்ள கலையான தெருக்கூத்து தனித்தன்மை வாய்ந்த ஒன்று, இதற்கு இணையானது நம் உபகண்டத்தில் வேறெங்கிலும் இல்லை. அப்படி இன்னொன்று இருந்தாலும், அதைப்பற்றி நாம் கேள்விப்படவில்லை. இப்படிச் சொல்வது தமிழ் மீதுள்ள அதீத பற்றின் வெளிப்பாடு எனத் தோன்றக்கூடும். இதை நம்புவது கடினமாக இருப்பதற்கு சில காரணங்கள் உண்டு.
இக்கலையின் பல பரிமாண விஸ்தாரமும், அந்த விஸ்தாரம் இயங்கும் பல தளங்களும் இன்னும் தமிழர்களாலேயே அறியப்படவில்லை, அல்லது அவர்களுக்கே பரிச்சயப் படுத்தப்படவில்லை, வெளி உலகத்துக்கோ, இதைப் பற்றிய பரிச்சயம் இன்னும் குறைவானது. அதன் மண்ணைவிட்டு, அது இயங்கும் சூழலைவிட்டு இக்கலை வெளியே எடுத்துச்செல்லப்பட்ட அரிய தருணங்களிலும், இதர பிராந்தீயங்களின் வெகுவாய் விளம்பரப் படுத்தப்பட்ட நாட்டார் நாடக வடிவங்களோடு ஒப்பிடுகையில், தலைநகர் தில்லியில் நிகழ்த்தப்படும் நாட்டார்கலை விழாக்களிலாகட்டும், பாரிஸில் ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியாவிலாகட்டும், அது நிகழ்த்தப்படும் ஒரு மணிநேர நிகழ்வில், தெருக்கூத்து பரிதாபகரமாய் ஏற்றுமதிக்கான ஒரு தயாரிப்பாய், ப்ரயாகையில் சிலர் குளிப்பதைக் காட்டி இதுதான் கும்பமேளா என்று சொல்லும் விடியோ துணுக்குகளைப் போன்று குறுகிச் சிறுத்துவிடும் பரிதாபகரம் தான். இதனால் இயற்கையாகவே தெருக்கூத்தின் பலவண்ணக் கோலம் பற்றிய அதன் பரந்த வீச்சைப் பற்றிய விவரம் அறியாத வாசகர்களிடம் (கவலையற்று அறியாமையில் திளைக்கும் தமிழ் பண்பாட்டுச் சூழலும், நகர்புற மக்கள்திரளும் இதில் அடங்குவர்) நான் பேசுகையில் என் நம்பகத்தன்மையும் பலத்த அடி வாங்கும்.