இங்கே எதற்காக – ஜெயபாரதியின் திரையுலக வாழ்க்கைக் குறிப்புகள்

- வெங்கட் சாமிநாதன் -

இங்கே எதற்காக என்று ஒரு புத்தகம் திரைப்பட இயக்குனர் ஜெயபாரதியினது ஒரு புது வரவு சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது. மிகப் பழைய நினைவுகள் சில, அதிகம் இல்லை. எப்போதோ எழுபதுகளின் ஆரம்ப வருஷங்களில், நான் தஞ்சையில் விடுமுறையில் இருந்த போது ஒரு கடிதம் வந்தது. சினிமா பற்றி ஏதாவது எழுதும்படி. அது மாலனோ அல்லது ஜெயபாரதியோ அல்லது இருவருமே அடுத்தடுத்தோ, சரியாக நினைவில் இல்லை. என்ன எழுதினேன் என்று நினைவில் இல்லை. என்ன எழுதக்கூடும் நான் என்ற தயக்கத்தோடு தான் எழுதிய ஞாபகம். ஏதும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எதுவும் இல்லை. இதை நினைவு கூறக் காரணம், நான் என்ன எழுதினேன் என்பது அல்ல. இப்போது தனக்கு அறுபத்து மூன்று வயதாவதாகச் சொல்லும் ஜெயபாரதி அப்போது 22 வயதினராக இருக்க வேண்டும். ஒரு பத்திரிகை, சினிமா பற்றி, அதுவும் தமிழில் சினிமா பற்றி மிகவும் வித்தியாசமாக, சிந்திக்கும் மனதில் உருவாக்கிக் கொண்டிருக்கும் ஜெயபாரதி. சத்யஜித் ரே, மிருணால் சென், ரித்விக் காடக்,  என பலர் அகில இந்திய தளத்திலும் உலக சினிமா தளத்திலும் புதிய சரித்திரம் படைப்பவர்களாக, உலவத் தொடங்கிய பிறகு, தமிழ் நாட்டிலும் ஒரு ஜெயகாந்தன் ஒரு எளிய தொடக்கமாக உன்னைப் போல் ஒருவனைத் தந்து விட்ட பிறகு, ஒரு சில நூறு பேராவது, சரி ஒரு சில ஆயிரம் பேர்களாவது முற்றிலும் வேறு பாதையில் தமிழ் சினிமாவைப் பற்றி சிந்திக்கவாவது தொடங்கியிருந்திருக் கிறார்கள். இதனால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை ஆகிவிடவுமில்லை.

Continue Reading →

சிறுகதை: எதிர்காலச் சித்தன்!

man.jpg - 5.39 Kb[ ஈழத்துத் தமிழ் இலக்கிய வானில் பல்துறைகளிலும் சுடர்விட்டு அமரரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளில் ‘எதிர்காலச் சித்தன்’ என்னும் கவிதை என்னைக் கவர்ந்த அவரது கவிதைகளிலொன்று. ஈழத்துத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த கவிதைகளிலொன்று. எந்த ஒரு ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய தொகுப்பிலும் தவறாமல் இடம் பெற வேண்டிய கவிதைகளிலொன்று. அக்கவிதையைத் தழுவி இச்சிறுகதை எழுதப்பட்டுள்ளது.  மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மீராவின் ‘எனக்கும் உனக்கும் ஒரே ஊர். வாசுதேவ நல்லூர்’ என்பதையே முதலாவது தமிழில் வெளிவந்த அறிவியற் கவிதையாகக் குறிப்பிடுவார். ஆனால் அதற்கும் பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த அ.ந.க.வின் ‘எதிர்காலச் சித்தன்’ கவிதையினையே தமிழின் முதலாவது அறிவியற் கவிதையாக நான் கருதுகின்றேன். சுஜாதாவுக்கும் அ.ந.க.வின் மேற்படி கவிதை பற்றி தெரிந்திருந்தால் அவரும் அவ்விதமே கூறியிருப்பார். மேற்படி கவிதை நிகழ்கால மனிதன் எதிர்கால மனிதன் ஒருவனைச் சந்தித்து, உரையாடித் திரும்புவதைப் பற்றி விபரிக்கிறது.]

எதிர்காலத்திரை நீக்கி நான் காலத்தினூடு பயணித்தபொழுதுதான் அவனைக் கண்டேன். அவன் தான் எதிர்கால மனிதன். இரவியையொத்த ஒளிமுகத்தினைக் கொண்டிருந்த அந்த எதிர்கால மனிதனின் கண்களில் கருணை ஊறியிருந்தது. அவன் கூறினான்: “நிகழ்கால மனிதா! எதிர்கால உலகமிது. இங்கேன் நீ வந்தாய்? இங்கு நீ காணும் பலவும் உன்னை அதிர்வெடி போல் அலைக்கழிக்குமே. அப்பனே! அதனாலே நிகழ்காலம் நீ செல்க!”

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 96:குணா கவியழகனின் ‘விடமேறிய கனவு’ நூல் மற்றும் வாசிப்பு பற்றிய எண்ணங்கள்…

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

நேற்று குணா கவியழகனின் ‘விடமேறிய கனவு’ நூல் வெளியீடு நிகழ்வுக்குத். தவிர்க்க முடியாத காரணங்களினால் செல்ல முடியவில்லை. நண்பரும் எழுத்தாளருமான தேவகாந்தன் சென்றிருந்தார். எனக்கும் ஒரு பிரதி வாங்கி வருமபடி கூறியிருந்தேன். அதனைப்பெற்றுக்கொள்ள நேற்றிரவு அவர் இருப்பிடம் சென்றிருந்தேன். சிறிது நேரம் பல்வேறு விடயங்களைப்பற்றி உரையாடினோம். நூல் வெளியீடு, முகநூல், தமிழகத்தில் அவரது அனுபவங்கள் என்று பல்வேறு விடயங்கள் உரையாடலில் வந்து போயின.

நா.பா.வின் மணிபல்லவம் நாவலைச் சுருக்கி வைத்திருப்பதாகக் கூறினார். தனக்கு ஒரு காலத்தில் பிடித்த நாவலது என்றார். இப்பொழுது வாசிக்கும்போது அன்றிருந்த பிடிப்பு ஏற்படுவதில்லை என்றார். சிலப்பதிகாரம் போல் மணிபல்லவம் நாவலுக்கு ஒரு சிறப்புண்டு. அக்காலத்து மக்களை மையமாக வைத்து உருவான நாவலது. எனக்கு நா.பா.வின் தமிழ் பிடிக்கும். அக்காலகட்டத்தில் அவரது பொன்விலங்கு நாவலின் ‘பைண்டு’ செய்யப்பட்ட பிரதியொன்று என்னிடமிருந்தது. இலட்சிய வேட்கை கொண்ட நாயகனான சத்தியமூர்த்தி மல்லிகைப்பந்தல் கிராமத்து ஆசிரியர் வேலைக்கான நேர்முகப்பரீட்சைக்காகச் செல்வதுடன் ஆரம்பமாகும் நாவலின் இடையில் வரும் கருத்தாழம் மிக்க வசனங்களை அப்போது விரும்பி வாசிப்பதுண்டு. இன்று அக்காலகட்டத்தில் வாழ்வில் இன்பமேற்றிய நினைவுச்சின்னங்களாக அன்று வாசிப்பில் இன்பம் தந்த நூல்கள் விளங்குகின்றன.

Continue Reading →

சிறுகதை: இரண்டு கெட்டவார்த்தைகள் இல்லாமல் இனி என் வாழ்க்கை….

‘அநாமிகா’கற்றது கையளவு; கல்லாதது கடலளவு…. பழமொழி சரியா, தவறா – இந்தக் கேள்வி அவசியமா, அனாவசியமா – அவசியம் அனாவசியமெல்லாம் highly relative terms….. எனவே, இந்த ஆராய்ச்சிக்குள் இப்பொழுது நுழையவேண்டாம்….. பின், எப்பொழுது? எப்பொழுது இப்பொழுது….? இப்பொழுது எப்பொழுது…. இப்பொழுது இப்போது – எது ‘அதிக’ சரி….? எப்போது, எப்போதும்…. ஒரு ‘ம்’இல் எத்தனை அர்த்தமாற்றம்….

ஹா! நினைவுக்கு வந்துவிட்டது. ஒரு பிறவிகளிலான பல பிறவிகளாய் நீண்டுபோகும் வாழ்க்கையில் நாலாம் வயது நிகழ்வுகள் இந்த நாற்பத்திநாலாம் வயதின் நினைவில் மீண்டும் தட்டுப்படுவதேயில்லை என்றாலும் நேற்று முன் தினம் நடந்ததுகூட நினைவிலிருந்து நழுவப் பார்ப்பது உண்மையிலேயே கொடுமைதான். ‘கொடுமை’ என்ற வார்த்தையை விட ‘வன்முறை’ கூடுதல் சிறப்புவாய்ந்ததாக இருக்கக்கூடுமோ….. கூடலாம்…. ஆம் என்றால், எடைக்கல் எது? அளப்பவர் யார்? குறைவின், கூடுதலில் நிர்ணயகர்த்தா அல்லது அவர்களின் பன்மை யார் யார்….? சே, அங்கே நிர்ணயிக்கப்பட்டதுபோல், உண்மையிலேயே பேதையாக இருந்தால் ( மனதில் அடிக்கடி ஒரு ‘குதிரைவால்’ பின்னல் போட்ட குட்டிப்பெண் அரங்கேறியவாறு இருப்பதுண்டு என்றாலும்) அது நிச்சயம் ஒரு blessing in disguise ஆகத்தான் இருக்கும் என்று படுகிறது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 95: சமகால ஈழத்தமிழ் இலக்கியம் பற்றிய பென்குவின் (இந்தியா) தொகுப்பு பற்றி….

வாசிப்பும், யோசிப்பும் 95: சமகால ஈழத்தமிழ் இலக்கியம் பற்றிய பென்குவின் (இந்தியா) தொகுப்பு பற்றி....அண்மையில் French Insititute of pandicherry மற்றும் ‘பென்குவின் (இந்தியா) அமைப்புகள் இணைந்து வெளியிட்டிருந்த Time will write A SONG for you என்னும் ஈழத்தமிழ் இலக்கியத்தைப் பிரதிபலிக்கும் படைப்புகளை உள்ளடக்கிய நூலொன்றினை வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அந் நூலைப் பற்றி முன் அட்டையில் Contemporary Tamil Writing from Sri lanka  என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேற்படி தொகுப்பிலுள்ள படைப்புகளுக்குச் சொந்தக்காரர்களின் எழுத்துத்திறமை பற்றிய சந்தேகம் எதுவும் எனக்கில்லை. அவர்கள் அனைவரும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்குக் காத்திரமான பங்களிப்பு செய்தவர்கள். ஆனால் இத்தொகுப்பு தொகுக்கப்பட்ட விதம் மிகவும் ஆச்சரியத்தையும், தொகுப்பின் தரம் பற்றிய சந்தேகத்தினையும் எழுப்புகிறது.

தொகுப்பில் மொத்தம் 68 படைப்புகள் (கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என) உள்ளன. அவற்றில் கீழுள்ள எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டும் முப்பதுக்கும் அதிகமானவையாக இருக்கின்றன: வ.ஐ.ச. ஜெயபாலன், சிவரமணி, பா.அகிலன், கருணாகரன், சு.வில்வரத்தினம், எஸ்.விநோதினி, எஸ்.செழியன், கி.பி.அரவிந்தன், போஸ் நில்கலே, வி.கெளரிபாலன், நிலாந்தன், மஜீத், ஃபகீமா ஜகன், சண்முகம் சிவலிங்கன்

ஶ்ரீலங்காத்தமிழரின் சமகால எழுத்து என்று குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்ட ஒரு தொகுப்பிலுள்ள 68 படைப்புகளில் முப்பதுக்கும் அதிகமானவை மேலுள்ள எழுத்தாளர்களின் படைப்புகளே. இவர்களின் ஒன்றுக்கும் அதிகமான பல படைப்புகளைத் தொகுப்பு உள்ளடக்கியுள்ளது.

Continue Reading →

சிறுகதை: இருட்டடி

சிறுகதை: இருட்டடி

குமரனோடு படித்து,எ.லெவல் படிக்க வேறு பள்ளிக்கூடம் சென்று விட்ட செல்வனின் அக்கா, பஸ்ஸிற்கு நிற்கின்ற போது, மீன் சந்தைக்கு அம்மாவோடு போகின்ற போது,தெய்வம் கொழுப்பு மெத்திப் போச்சுது போல மோட்டர் சைக்கிள்ளை அவளுக்கு கிட்டவாக விட்டு எதையாவது சொல்லி தனகுகிறான். இதை கொஞ்ச நாளாய்க் குமரன் கவனித்துக் கொண்டே வருகிறான்.

தெய்வம்,ஒரு பிரபலமான சண்டியனின் தொகை வாரிசுகளில் ஒருத்தன்.ஏற்கனவே திருமணமாகி ஆசைக்கு என்றும் ,ஆஸ்திக்கு என்றும் பிள்ளைகள் இருக்கிற போதிலும், பக்கத்துக் கிராமத்திலிருந்து இன்னொருத்தி மேலும்  , காதல் வயப்பட்டு ,கிளப்பிக் கொண்டு வந்து மல்லிகை கிராமத்தின் ஒருவனாக வாழ்கிறவன். அவளும் காதல் வயப்பட்டு அவனோடு வந்வள் தான். இவன் ஒன்றும் பெரிய ரவுடி கிடையாது.சகோதரர் மத்தியிலே இவன் ஒருத்தன் தான் ஒ.லெவல் வரைக்கும் படித்தவன் கூட.அப்பன் வட்டிக்கு  காசு கொடுக்கிறவன்,வாகனம் பழக்குகிறவன் ..என பல தொழில்களை வைத்திருக்கிறவன்.அதில் ஒன்றிலே இவனும் வேலை பார்க்க காலையிலே மோட்டர் சைக்கிளிலில் நகரத்திற்குப் போய் விடுவான்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 94: நாவல்: ஒரு ஶ்ரீலங்கன் அகதியின் கதை.

வ.ந.கிரிதரனின் நாவல்: ஒரு ஶ்ரீலங்கன் அகதியின் கதை!காலம் கைகூடின் எதிர்காலத்தில் வெளியாகவுள்ள இந்த நாவலின் இரு பகுதிகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. 1983இல் இலங்கையில் நடைபெற்ற தமிழர்களுக்கெதிரான இனக்கலவரத்தைத்தொடர்ந்து , இலங்கையில் அரச திணைக்களமொன்றில் உயர் பதவியிலிருந்த இளங்கோ அகதியாகக் கனடா நோக்கி புலம்பெயர்கின்றார். இடையில் அவரது பயணம் அமெரிக்காவின் பாஸ்டனில் தடைப்படுகின்றது. அங்கிருந்து அவரை கனடாவுக்கு ஏற்றிச்செல்லவேண்டிய டெல்டா நிறுவனம் மறுத்து விடவே அங்கு அரசியல் அடைக்கலம் கோருகின்றார். இவ்விதம் அமெரிக்காவில் அரசியல் அடைக்கலம் கோரிய அவர் நியூயார்க் நகரிலுள்ள புரூக்லீன் தடுப்புமுகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்படுகின்றார்.

அவரது புரூக்லீன் நகரத்துத்தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் முதல் பகுதியான ‘அமெரிக்கா’ ‘டொராண்டோ’விலிருந்து வெளியான ‘தாயகம்’ பத்திரிகையில் தொடராக வெளியாகிப் பின்னர் தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக வெளிவந்தது.

தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட இளங்கோ மேலும் ஒருவருட காலம் நியூயார்க் மாநகரில் சட்டவிரோதக்குடிமகனாக, எந்தவிதக்குடிவரவு ஆவணங்களுமின்றி தன் இருப்புக்காகப் போராடுவதை விபரிக்கும் பகுதியே ‘குடிவரவாளன்’. இருபத்தேழு அத்தியாயங்களை உள்ளடக்கிய இப்பகுதி திண்ணை மற்றும் பதிவுகள் இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது. இப்பகுதி எதிர்காலத்தில் நூலுருப்பெறவுள்ளது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 93: தொகுப்புகள் பற்றிய சிந்தனைகள்….

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

ஒரு நாட்டின் இலக்கியம் பற்றி வெளிவரும் தொகுப்பு நூலானது அந்த நாட்டு இலக்கியத்தின் சரியான குறுக்கு வெட்டாக இருக்க வேண்டும். உதாரணமாக ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றி வெளியாகும் தொகுப்பு நூலாக இருப்பின் அத்தொகுப்பு நூலொன்றினை வாசிக்கும்போது ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய சரியான குறுக்கு வெட்டினைப் பிரதிபலிப்பதாக அந்தத் தொகுப்பு நூல் இருக்க வேண்டும்.

இருபதாம் நூற்றாண்டிலிருந்து இதுவரையிலான ஈழத்துத் தமிழ் இலக்கியத்தை முறையாகப் பிரதிபலிக்கும் வகையில் வெளிவந்த தொகுப்பு நூல்கள் ஏதாவதிருக்கின்றனவா என்று பார்த்தால் பொதுவாக ஏமாற்றமே ஏற்படுகின்றது. செ.யோகநாதனின் சிறுகதைத்தொகுப்பு நூல்கள் , செங்கையாழியானின் பல்வேறு காலகட்டங்களைப் பிரதிபலிக்கும் (சுதந்திரன் சிறுகதைகள், ஈழநாடு சிறுகதைகள், மறுமலர்ச்சிச்சிறுகதைகள் போன்ற) தொகுப்பு நூல்கள் இவ்விதமான சூழலில் வெளிவந்த முக்கியமான தொகுப்புகள். அது போல்  மித்ரவின் ‘பனியும் பனையும்’, ஞானம் புலம்பெயர் தமிழர்களின் படைப்புகளை உள்ளடக்கிய தொகுப்பு ஆகியவற்றையும் குறிப்பிடலாம்.

Continue Reading →

பேராசிரியர் கோபன் மகாதேவாவின் கவிதைகளிரண்டு!

மந்தாரத்திலும் மகிழ்வற வாழ்வு

-பேராசிரியர் கோபன் மகாதேவா -

ஆற்றலினால் ஆற்றி விட்டு ஆறுதலைத் தேடும் அவர்…

வேற்று நிர்ப்பந்தங்கள் நிதம்நிதம் நிமிர்த்தும் அவர்

கூற்றுக்கள் கவிதைகளைக் கடு கெதியில் பதிவதற்கு

ஊற்றுப் பேனாக்கள் பல உசார்நிலையில் காத்திருந்தும்…

ஏற்றுத் தான் வாழ்ந்து கொண்டு. வந்தபல இடர்களையும்…

நேற்றிருந்த பிரச்சனைகள் நாளைஇரா எனும்படியாய்

மாற்றாரையும் மதிப்பார் சமைக்கும் சிறு கறிகளுடன்

சோற்றையும் குழைத்திடுவார் சேர்ந்துஉண்டு மகிழ்ந்திடுவார்.

கூற்றைப் போல் ஒரு பக்கம் இடுப்பு என்றும் வலித்தாலும்

ஏற்றுப் பொறுத்திடுவார் தனக்கு வரும் நோ(ய்)க்களினை…

ஈற்றுஇருந்து தனிமையிலே ஈழத்தை நினைக்கையிலே

காற்றில்வரும் செய்தி-பல காதுகளைக் கடித்திடினும்…

வீற்றிருந்து படிக்கின்றார் விதம்விதமாம் நூல்களினை.

காற்றும் குளிர்கால மழைகள் புறம் ஊற்றிடினும்…

நோற்று வாழ்ந்துகொண்டு நான்-எனும் திமிர்இன்றிப்

போற்றுபவர் போற்றட்டும் தூற்றுபவர் தூற்பர் என…

ஆற்றுகின்றார் இன்னும் தன் ஆக்கங்கள் மகிழ்வறத்தில்.

Continue Reading →

பி. சேஷாத்ரியும் அவரது “மலைவாழ் வாழ்க்கையும்” (பெட்டாடே ஜீவா)

- வெங்கட் சாமிநாதன் -

கன்னட சினிமாவில் பி. சேஷாத்ரி என்று ஒரு இயக்குனர். அவரை அறிமுகம் செய்து வைத்துத் தான் ஆகவேண்டும். நம் தமிழரில் நல்ல சினிமாவை ரசிப்பவர்கள் ஒருசில ஆயிரமாவது இருப்பார்கள் என்று நம்ப விரும்புகிறேன். அது பற்றிப் பேசுபவர் தெரிந்ததாக சொல்லிக்கொள்பவர்கள் இதைவிட ஒன்றிரண்டு மடங்கு  கூடவே இருக்கக் கூடும் தான். நான் ரசிப்பவர்களைப் பற்றி மாத்திரமே பேச விரும்பு கிறேன். நம்மூர் சிவாஜி கணேசன், சிம்பு வகையறா போன்று அங்கும் ராஜ்குமார் போன்றாரை விட்டு ஒதுங்கி தனிப்பாதையிட்டுச் செல்லத் தொடங்கியவர்கள், கிரீஷ் கர்நாட், காஸரவல்லி, பி.வி. காரந்த் போன்றாரைத் தெரிந்திருக்கலாம். எம்.எஸ் சத்யு, ஜி.வி. ஐயர் போன்றார், தெரிந்த பெயர்களாக இருக்குமா என்பது தெரியாது. அதிலும் கிரீஷ் கர்நாட் தெரிந்திருப்பது, அவர் நடித்த சம்ஸ்காரா ,எழுபதுகளில் பெரும் சச்சரவில் சிக்கியது காரணமாகவே இருக்கக் கூடும்.

கொஞ்சம் காட்டமாகவே நான் எழுதுவதாகத் தோன்றலாம். எனக்கான நியாயங்கள், சரியோ தவறோ இரண்டு மூன்று இருக்கத் தான் செய்கின்றன. நல்ல சினிமா பயிற்சி பட்டறைகள் ஒன்றிரண்டு, அதில் ஒன்றில் என் கன்னட நண்பர் ஒருவர், சினிமா ரசிகர் வகுப்பெடுக்கச் சென்றார். எடுத்த உடனேயே அந்த பயிற்சி மாணவர்கள் சொன்னது, “ஐயா நீங்கள் எல்லாம் உடனே இத்தாலி சினிமா, ப்ரெஞ்ச் சினிமா என்று பேச ஆரம்பித்து விடுகிறீர்கள். நீங்களும் உங்கள் நண்பர் சாமிநாதனும். நம்ம ஊரைப் பத்திப் பேசுங்க. இந்த மண்ணைப் பத்திப் பேசுங்க” என்பது அவர்களது ஏகோபித்த வேண்டுகோள். இவர்கள் ஏற்கனவே பயிற்சியில் இருப்பவர்கள். முதல் நாள் முதல் ஷோ பார்க்க சென்னை வெயிலில் டிக்கட் வாங்க நிற்பவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்கள் பயிற்சியில் என்ன எதிர்பார்த்தார்களோ தெரியாது.

Continue Reading →