நூல்: எழுக அதிமானுடா! (கவிதைகள்) – வ.ந.கிரிதரன்
முதற்பதிப்பு: தை 1994
புத்தக வடிவமைப்பு: ஜோர்ஜ் இ.குருஷேவ்
அட்டை வடிவமைப்பு: பாலா ஆர்ட்ஸ்
வெளியீடு: மங்கை பதிப்பகம் ( ‘டொரோண்டோ’, கனடா)
எண்பதுகளில், தொண்ணூறுகளில் வீரகேசரி, தினகரன், நுட்பம், தாயகம் (கனடா) , குரல் (கையெழுத்துப்பிரதி, கனடா) ஆகிய ஊடகங்களில் வெளியான மற்றும் ஊடகங்களில் வெளிவராத எனது ஆரம்பகாலத்துக் கவிதைகளின் தொகுப்பிது. இத்தொகுப்பில் 30 கவிதைகளுள்ளன. இவை பிறந்த மண்ணின் அரசியலை, புகலிடத்திருப்பினை, ஆசிரியருக்குப் பிடித்த ஆளுமைகளைப் பற்றிய எண்ணங்களை மற்றும் சூழற் பாதுகாப்பினை விபரிக்கின்றன. இக்கவிதைகளில் சிலவற்றில் அதிமானுடா போன்ற ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் சொற்களுள்ளன. இவை அக்காலத்தின் என் எண்ணங்களின் வெளிப்பாடு. இப்பொழுது எழுதுவதாயின் மானுடம், மானிடர் போன்ற சொற்களையே பாவிப்பேன். ஆயினும் ஏற்கனவே வெளிவந்த பதிப்பிலுள்ளவற்றை மாற்ற முடியாத காரணத்தால் , அடுத்து வரும் பதிப்புகளில் இவ்விதமான சொற்கள் மாற்றப்படும். இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் சிலவற்றைத்தவிர ஏனையவற்றை கவிதை ஆர்வத்தின் வெளிப்பாடுகள் என்று கூறுவேன். என் அக்காலத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதையே முக்கியமாகக்கொண்டு உருவான சொற்களின் வெளிப்பாடுகள் என்றும் கூறுவேன். விடுதலை அமைப்புகளின் அக, புற முரண்பாடுகளை, முஸ்லீம் மக்களின் பலவந்த வெளியேற்றத்தினை, மலையக மக்களின் துயரினையெல்லாம் கவிதைகள் தம்பொருளாகக்கொண்டுள்ளன. கனடாப்பூர்வீகக்குடியினரின் சோகங்களையும் கவிதைகள் விபரிக்கின்றன.