மறைந்தும் மறையா மாமேதை அப்துல் கலாம்.

‘கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.’

ஏ. பி. ஜே. அப்துல் கலாம்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

திருக்குறளுக்கு அமைய அப்துல் கலாம் கசடறக் கற்றார் கற்றபின் அவை கூறிய ஒழுக்க நெறியில் வழுவாது ஒழுகி நின்றார். அதுவும் காணாதென்று மேலும் தொடர்ந்து செயற்பட்டு உலக மேதையானார். அவர் வரலாற்றைச் சற்று விரிவு படுத்திக் காண்போம்.

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்கள் ஜைனுலாப்தீனுக்கும் ஆஷியம்மாவுக்கும், நான்கு சகோதரர்களுடனும், ஒரு சகோதரியுடனும் ஆறாவது குழந்தையாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் 15-10-1931 அன்று அவதரித்தார். இவர் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு படகோட்டியின் மகனாவார். இவர் குடும்பம் ஏழ்மையில் வாடியதால், இவர் செய்தித்தாள்களை விநியோகம் செய்தார். இவர் ஒரு பழுத்த பிரமச்சாரியாவார்.

இவர் தன் பள்ளிப்படிப்பை முடித்தபின், திருச்சினாப்பள்ளியிலுள்ள ‘செயின்ட் ஜோசேப் கல்லூரியில்’ இயற்பியல் பயின்று 1954-ஆம் ஆண்டு இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஆனால் இயற்பியற் துறையில் ஆர்வம் காட்டாத இவர், 1955-ஆம் ஆண்டு தன்னுடைய ‘விண்வெளிப் பொறியியற் படிப்பை’ சென்னையிலுள்ள   எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

விஞ்ஞானியாக அப்துல் கலாம்
1960-ஆம் ஆண்டில் ‘பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்’ (Defence Research and Development Organisation = DRDO )  எனும் பிரிவில் விஞ்ஞானியாக ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்து இந்திய ராணுவத்துக்கு வழங்கினார். பின்னா;, ‘இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்’ (Indian Space Research Organisation = ISRO) எனும் பிரிவிலும் தனது ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து, ‘துணைக்கோள் ஏவுகணைக் குழுவில்’ (Satalite Launch Vehicle = SLV) செயற்கைக்கோள் ஏவுதலிலும் முக்கிய பங்காற்றினார். இவர் 1980-ஆம் ஆண்டு SLV-111 ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-1 என்ற துணைக்கோளை விண்ணில் ஏவச்செய்து வெற்றியும் கண்டார். இது இந்தியாவுக்கே ஒரு பெரும் சாதனையாக அமைந்தது. இச் செயலைப் பாராட்டி இந்திய மத்திய அரசு இவருக்கு 1981-ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான ‘பத்ம பூஷன்’ என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 121: செங்கை ஆழியான் பற்றிய நினைவுகள்… விரைவில் பூரண குணமடைய வேண்டுகின்றோம்!

செங்கை ஆழியான்செங்கை ஆழியானின் 'ஆச்சி பயணம் போகின்றாள்'‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகும் தனது பத்திக்காக எழுத்தாளர் முருகபூபதி அனுப்பிய கட்டுரையில் செங்கை ஆழியானைப்பற்றி எழுதியிருந்தார். அதிலவர் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் அதிர்ச்சியைத்தந்தது. செங்கை ஆழியான் அவர்கள் சுகவீனமுற்று, பேசுவதற்கும்  முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடப்பதாகக் குறிப்பிட்டிருந்த விடயமே அது.

இலங்கைத்தமிழ் இலக்கியத்தைப்பொறுத்தவரையில் செங்கை ஆழியானுக்கு (கலாநிதி. க. குணராசா) அவர்களுக்கு முக்கியமான பங்குண்டு. புனைகதை, தமிழர்தம் வரலாறு பற்றிய ஆய்வு, அரசியல் மற்றும் இலக்கிய ஆவணச்சேகரிப்பு ஆகிய துறைகளில் அவரது பங்களிப்பு முக்கியமானது.  புனைகதையைப்பொறுத்தவரையில் சமூக (வாடைக்காற்று, காட்டாறு, , வரலாறு (கடற்கோட்டை, நந்திக்கடல், கந்தவேள் கோட்டம்) மற்றும் நகைச்சுவை (ஆச்சி பயணம் போகின்றாள், கொத்தியின் காதல், நடந்தாய் வாழி வழுக்கியாறு போன்ற)  ஆகிய துறைகளில் பல முக்கியமான நாவல்களை அவர் படைத்துள்ளார். 1977 மற்றும் 1981 காலகட்டத்தில் யாழ் நகரம் பொலிஸாரினால் எரிக்கப்பட்டபோது அவற்றைப் பதிவு செய்ய வரதரின் வேண்டுகோளின்பேரில் ஆவணப்படைப்புகளாக உருவாக்கினார். அவற்றை அவர் நீலவண்ணன் என்னும் புனை பெயரில் எழுதியதாக ஞாபகம். இவரது பல குறுநாவல்கள் தமிழகத்துச் சஞ்சிகைகளில் பரிசுகளைப்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவை தவிர மறுமலர்ச்சி, சுதந்திரன், மல்லிகை மற்றும் ஈழநாடு சிறுகதைகளைத்தொகுத்திருக்கின்றார்.  அத்தொகுப்புகளுக்காக நிச்சயம் இவரை ஈழத்தமிழ் இலக்கிய உலகம் எப்பொழுதும் நன்றியுடன் நினைவு கூரும்.

இவரது நாவலான ‘வாடைக்காற்று’ ஈழத்தில் வெளியான தமிழத்திரைப்படங்களிலொன்று. அதன் மூலம் ஈழத்துத் தமிழ்த்திரைப்பட உலகிலும் அவரது பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இவரது மூத்த அண்ணனான புதுமைலோலனும் ஈழத்தமிழ் இலக்கியத்துக்குப் பங்களிப்புச் செய்த இன்னுமோர் எழுத்தாளரே. புதுமைலோலன் தமிழரசுக்கட்சிக்காக அரசியலில் ஈடுபட்டவர். காலிமுகத்திடல் சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றி அடியுதைபட்டு காயங்களுக்குள்ளாகியவர்தான் அவர். அவரது மகனும் தமிழர் விடுதலைப்போராட்டத்தில் போராடி மடிந்தவர்களிலொருவர்.

Continue Reading →