வானம்பாடிகளும் ஞானியும் (1)

- வெங்கட் சாமிநாதன் -வானம்பாடி என்ற பெயரில் ஒரு கவிதை இதழ் எனக்கு 1970 களின் ஆரமப வருடங்களில் வருடத்துக்கு ஒன்றிரண்டு முறை என்று வீடு மாறிக் கொண்டிருந்த நிர்பந்தத்தில் இருந்த எனக்கு வீடு தேடி வந்து அறிமுகமானது. அன்று என் இருப்பிடம் என்னவென்று அறிந்த யாரோ ஒரு அன்பரின் சிபாரிசில். முழுக்க முழுக்க கவிதைக்கெனவே வெளியாகும் இலவச இதழ் என்று சொல்லப்பட்டது. அதில் கவிதை எழுதி கவிஞர்களாக அறிமுகப்படுத்தப்பட்ட யாரையும் நான் அதற்கு முன் அறிந்தவன் இல்லை. அதன் வெளியீடும் அதில் தெரியவந்த கவிஞர்களும் தம்முள் தெரியப்படுத்திக் கொண்ட நமக்கும் உரத்த குரலில் அறியப்படுத்திய ஒரு முகம், மொழி இருந்தது. ஒர் உரத்த போர்க்குரல். பழக்கப்பட்ட இடது சாரி கோஷக் குரல். தாமரை, ஆராய்ச்சி, போன்ற இன்னம் சில் கம்யூனிஸ்ட் அல்லது முற்போக்கு இதழ்களில், காணும் முகம் மொழி அது. எனக்கு அந்த குரலும், அது கொண்ட வடிவமும் வேடிக்கையாகத் தான் இருந்தது. இடது சாரிகளின் இன்னொரு இலக்கிய முனை போலும் என்று முதல் இதழிலிருந்தே தோன்றிற்று. எவ்வளவு சுறுசுறுப்பாக முனைப்புடன் இவர்கள் எல்லா முனைகளிலும் செயல்படுகிறார்கள் என்று வியப்பாக இருந்தது. அதிலும் விடு தேடி இலவசமாக, துண்டு பிரசுரம் வினியோகிப்பது போல! ஆனால், ஒன்றிரண்டு கற்கள் அப்பளத்தில். வானம் பாடி கவிஞர்கள் எழுத்து பத்திரிகையின் புதுக் கவிதை இயக்கத்தால் பாதிக்கப்பட்டு அது தந்த சுதந்திரத்தில் வானில் தம் இஷ்டத்துக்கு பறக்க முனைந்து விட்டவர்களாகத் தோன்றினர். அப்படி ஒரு பிரகடனம், ஏதும் அவர்கள் பத்திரிகையில் இல்லை என்றாலும், அவர்கள் கவிதைகள் சொல்லாமலே அப்படித்தான் சாட்சியம் தந்தன. இவ்வளவுக்கும் அதன் கவிஞர்கள தமிழ் புலமை பெற்ற தமிழ் ஆசிரியர்கள். தமிழ் யாப்பு தெரியாததால் புதுக்கவிதை எழுதத் தொடங்கியவர்கள் புதுக்கவிதைக் காரர்களை கேலி செய்த காலத்தில் தமிழ்ப் புலவரகள், புதுக்கவிதை எழுதுவதா? அதிலும் தமது இடதுசாரி சிந்தனைக்கு குரல் கொடுக்க?. இடது சாரிகள் என்று இவர்கள் தம்மைச் சொல்லிக் கொள்ளவில்லைதான்.. ஆனாலும் இடது சாரிகளின் இலக்கிய முனை, கமிஸாரான, சிதம்பர ரகுநாதனும், நா.வானமாமலையும் இலங்கையிலிருந்து இன்னொரு கமிஸார் கலாநிதி க. கைலாசபதி போன்ற பெருந்தலைகள் புதுக்கவிதைக்கு எதிராக காரசாரமாக பிரசாரம் செய்துகொண்டிருந்தார்கள். அப்படி இருக்க வானம்பாடிகள் இடது சாரி உரத்த குரலுக்கு புதுக்கவிதையை தேர்வதா? கட்டுப்பாடுகள் நிறைந்த இடது சாரிகள் கூடாரத்திலிருந்து இப்படி ஒரு எதிர் முனைப் புரட்சியா? ஆச்சரியமாக இருந்தது.

Continue Reading →