1. ‘வெங்கட் சாமிநாதன்’: வாதங்களும் விவாதங்களும்’
கடந்த ஐம்பது வருடங்களுக்கும் அதிகமாக தமிழ்க்கலை, இலக்கிய உலகில் கலை, இலக்கிய விமர்சகராகப்பங்களித்து வருபவர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்கள். முதுமையின் தளர்ச்சியையும் உள்வாங்கிச்சோர்ந்து விடாமல் தொடர்ந்தும் சஞ்சிகைகள், இணைய சஞ்சிகைகள் என்று தன் எழுத்துப் பங்களிப்பினை வழங்கி வருபவர் வெங்கட் சாமிநாதன். அவருடன் கருத்து முரண்பாடு கொண்டவர்கள் கூட தமிழ்க்கலை, இலக்கியச்சூழ்நிலையில் நிராகரிக்க முடியாத அவரது ஆளுமையினை ஏற்றுக்கொள்வார்கள், ‘பதிவுகள்’ இணைய இதழுக்குப் பல வருடங்களாகத்தன் கட்டுரைகளை அனுப்பி வருபவர் அவர். ‘பதிவுகள்’ இணைய இதழினை மிகவும் மதிப்பவர் திரு.வெ.சா, அவர் தன் படைப்புகளை அனுப்பும்போது எப்பொழுதும் மின்னஞ்சலில் ‘அன்புள்ள நண்பர், ஆசிரியர் பதிவுகள் கிரிதரன் அவர்களுக்கு’ என்று விளித்துத்தான் தன் படைப்புகளை அனுப்புவார். இது அவரது பெருந்தன்மையினைக்காட்டுகிறது. என்னை அவர் தன் நண்பர்களிலொருவராக ஏற்றிருப்பது அவரது நல்ல உள்ளத்தைக்காட்டுகிறது. அது ‘பதிவுகள்’ இணைய இதழ் மேல் அவர் வைத்துள்ள மதிப்பினையும் எடுத்துக்காட்டுகிறது.
திரு.வெ.சா.வின் ஐம்பது வருட இலக்கியப்பணியினைச் சிறப்பிக்கும் முகமாக எழுத்தாளர்கள் பா.அகிலன், திலீப்குமார் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் சந்தியா பதிப்பகம் வாயிலாக ‘வெங்கட் சாமிநாதன்’: வாதங்களும் விவாதங்களும்’ என்றொரு தொகுப்பு நூலினை 2010இல் வெளியிட்டு வைத்தார்கள். மிகவும் நேர்த்தியான வடிவமைப்பில், தடித்த மட்டையுடன் வெளியான அந்த நூலில் கலை, இலக்கிய ஆளுமைகள் பலரின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. எனது கட்டுரையான ‘அறிவுத்தாகமெடுத்து அலையும் வெங்கட்சாமிநாதனும் அவரது கலை ,மற்றும் தத்துவியற் பார்வைகளும்’ என்றொரு நீண்டதொரு கட்டுரையினை எழுதியிருந்தேன். மேலும் மேற்படி நூலினைப்பெற விரும்புவோர் சந்தியா பதிப்பகத்துடன் தொடர்புகொள்ளவும். முகவரி வருமாறு: சந்தியா பதிப்பகம், புது எண் 77, 53ஆவது தெரு, 9ஆவது அவென்யு, அசோக் நகர் , சென்னை 600 083 என்னு முகவரிக்கு எழுதித்தொடர்பு கொள்ளுங்கள். விலை ரூபா 300.