மிகவும் அரியதொரு நேர்காணலை நண்பர் துரைசிங்கம் குமரேசன் தனது முகநூல் பதிவாகப்பதிவு செய்துள்ளார். அமரர் அ.செ.மு அவர்கள் சுவாமி ஞானப்பிரகாசருடன் நடத்திய நேர்காணலை ‘வண சுவாமி ஞானப்பிரகாசர் கண்டு கதைத்தது’ என்னும் தலைப்பில் ‘மறுமலர்ச்சி’ இதழில் (புரட்டாதி 1946) வெளியிட்டுள்ளதைத்தான் குமரேசன் அவர்கள் பதிவு செய்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி. ஈழத்துத் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் ‘மறுமலர்ச்சி’ சஞ்சிகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வெளியான ‘மறுமலர்ச்சி’ இதழ்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது அவசியம். அதனைத்தற்போது துரைசிங்கம் குமரேசன் அவர்கள் திட்டமிட்டிருக்கின்றார். அவரது முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள். இது போல் ஈழத்தில் வெளியான முக்கியமான இதழ்களின் தொகுப்புகள் வெளிவருதல் அவசியம். குறிப்பாக ‘விவேகி’, ‘கலைச்செல்வி’, ‘அலை’ போன்ற சஞ்சிகைகளின் தொகுப்புகள் வெளிவருதல் அவசியம். மேலும் ஓரிரு இதழ்களே வெளியான சஞ்சிகைகளை ஒன்று சேர்த்தும் வெளியிடலாம். உதாரணத்துக்கு ‘பாரதி’, ‘கவிஞன்’ போன்ற சில இதழ்களே வெளியான முக்கியமான சஞ்சிகளைகளைத்தான் குறிப்பிடுகின்றேன்.இவ்விதமான தொகுப்புகள் ஈழத்துத்தமிழ் இலக்கிய வரலாற்றை முறையாக அறிவதற்கு மிகவும் உறுதுணையாகவிருக்கும். இல்லாவிட்டால் ஆளுக்காள் அவ்வப்போது தாம் நினைத்தபடி கூட்டி, குறைத்து, வெட்டி , ஒட்டி ஆய்வுக்கட்டுரைகளென்ற பெயரில் பூரணமற்ற கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பார்கள்.
அசெமுவின் அந்த நேர்காணல் ஒரு பதிவுக்காக இங்கே பிரசுரமாகின்றது.
வண. சுவாமி ஞானப்பிரகாசர்.
கண்டு கதைத்தது : அ.செ.மு ( மறுமலர்ச்சி இதழ் – 6 : விய ஆண்டு புரட்டாதி : 1946 )
ஆறாம் வகுப்புப் படித்து விட்டு இலங்கை றெயில்வேயில் (Telegraph Signaller) உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீமான் வைத்திலிங்கம், பிறகு சுவாமி ஞானப்பிரகாசராகி எழுபது பாஷைகளைப் பற்றித் தெரிந்துகொண்டு புத்தக சாகரத்தின் நடுவே அமர்ந்து ‘தமிழ்தான் உலகத்துப் பாஷைகளில் எல்லாவற்றுக்கும் அடிப்படை’ என்று முழங்கவும், அதனை ஆராய்ச்சி பூர்வமாகக் காட்டவும் துணிவாரென்று யார் எதிர்பார்த்தார்கள்?
சுவாமிகளுக்குச் சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இத்தாலி, பிறெஞ்ச், இங்கிலீஷ், தமிழ் உட்பட பன்னிரண்டு பாஷைகளைப் பிழையின்றி எழுத வாசிக்கத் தெரியும். லற்றின், பிறெஞ்ச், சிங்களம், ஆங்கிலம், தமிழ் – என்பனவற்றில் பேசவும் முடியும்.