செங்கை ஆழியானின் ‘ஆச்சி பயணம் போகின்றாள்’
தமிழில் வெளிவந்த நகைச்சுவை நாவல்களில் ஈழத்தில் வெளியான நகைச்சுவை நாவல்களுக்குமிடமுண்டு. அந்த வகையில் செங்கை ஆழியானின் ‘ஆச்சி பயணம் போகின்றாள்’ நாவல் முக்கியமானது. தன் வாழ்நாளில் ஒரு தடவை கூடப் புகையிரதத்தில் ஏறாத ஆச்சிக்கு அந்தச் சந்தர்ப்பம் அவரது முதிய பருவத்தில் ஏற்படுகிறது. கதிர்காமம் செல்வதற்காக அவரை அழைத்துக்கொண்டு ஆச்சியின் கடைசி மகன் சிவராசனும், சிவராசனுக்காகக் காத்திருக்கும் ஆச்சியின் தம்பி மகள் செல்வியும் (இவள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படிப்பவள்) செல்கின்றார்கள். ஆச்சியின் புகைவண்டிப் பயணமும், இளங்காதலர்களின் பொய்ச்சிணுங்கல்களும், மகிழ்ச்சியான தருணங்களும், நாவல் முழுக்க விரவிக்கிடக்கும் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழும், அவற்றுக்கு மேலும் துணையாக விளங்கும் ஓவியர் செளவின் ஓவியங்களும் வாசிப்பவரைக் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைக்கின்றன. இந்நாவல் முதலில் ‘விவேகி’ மாத சஞ்சிகையில் தொடராக வெளிவந்தது. தொடர் முடிவதற்குள் இதன் முதற் பதிப்பு (ஏப்ரில் 1969) யாழ் இலக்கிய வட்டத்தினரால் நூலாக வெளியிடப்பட்ட இந்நாவல் அதன் பின்னர் சிரித்திரன் சஞ்சிகையில் தொடராக வெளிவந்திருக்கின்றது. அதன் பின்னர் நாவலின் இரண்டாவது பதிப்பு (அக்டோபர் 1978) ஶ்ரீலங்கா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. என்னிடமிருப்பது நாவலின் மூன்றாவது பதிப்பு. செங்கை ஆழியானின் ‘கமலம் பதிப்பகத்தினரா’ல் மே 2001இல் வெளியிடப்பட்ட பதிப்பு. ஓவியர் ‘செள’வின் ஓவியங்களுடன் நேர்த்தியாக வெளியான பதிப்பு. நூலின் முன்னுரையில் எழுத்தாளர் செம்பியன் செல்வன் இதுவே இலங்கையில் வெளியான முதலாவது நகைச்சுவை நாவலென்று குறிப்பிட்டிருக்கின்றார்.
என்னைப் பொறுத்தவரையில் எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நாவலென்று இதனைக் கூறுவேன். நூலாசிரியரின் ‘நடந்தாய் வாழி வழுக்கி ஆறு’வும் எனக்குப் பிடித்த ஆசிரியரின் இன்னுமொரு நகைச்சுவை விவரணச்சித்திரம்.