பிரபல மொழியியல் அறிஞரும், எழுத்தாளருமான அம்பர்தோ எகோவுடனான நேர்காணல்கள் அடங்கிய கைக்கடக்கமான நூலொன்றினை அண்மையில் வாசித்தேன். மொழிபெயர்த்திருப்பவர் ரஃபேல். அந்நேர்காணல்களில் தன் வாழ்வு பற்றி, விருப்பு வெறுப்பு பற்றி, தன் இலக்கிய முயற்சிகள், அவற்றுக்கான தூண்டுதல்கள் பற்றியெல்லாம் மனந்திறந்து அம்பர்த்தோ எகோ கூறியிருக்கின்றார். மூலக்கட்டுரைகளை நான் வாசிக்கவில்லை. ஆனால் நூலின் நடையிலிருந்து , மொழியிலிருந்து தரமானதொரு மொழிபெயர்ப்பாகவே தென்படுகின்றது. இதில் எம்பர்தோ எகோவுடனான புனைவுக்கலை பற்றிய நேர்காணலில் அவர் கவிதையைப்பற்றிக்கூறியதை இங்கே பதிவு செய்கின்றேன். இது எம்பர்தோ எகோவின் கவிதையைப்பற்றிய கருத்து. என்னுடையதல்ல என்பதை நண்பர்கள் கவனத்தில் வைத்திருங்கள்.
கவிதை பற்றிய கேள்வியொன்றுக்கு எம்பர்த்தோ எகோவின் பதில் இதுதான்: “சில குறிப்பிட்ட வயதுகளில் ஒரு பதினைந்து பதினாறு என்று வைத்துக்கொள்வோம். கவிதை என்பது சுயமைதுனம் செய்துகொள்வதைப்போன்றது என நினைக்கின்றேன். ஆனால் நல்ல கவிஞர்கள் தாங்கள் முன்னாளில் எழுதிய கவிதைகளைப் பின்னாட்களில் எரித்து விடுவார்கள். மோசமான கவிஞர்கள் அவற்றை வெளியிடுவார்கள். நான் அவற்றையெல்லாம் வெகு விரைவாகவே கை விட்டு விட்டேன் என்பது ஒரு வகையில் நன்றிக்குரியதே.”