– வீரகேசரி நிறுவனம் ஒருமுறை இரசிகமணி கனகசெந்திநாதன் நினைவாகக்குறுநாவல் போட்டியொன்றினை நடத்தியிருந்தது. எண்பதுகளின் இறுதிப்பகுதியில் 87/88 காலகட்டமென்று நினைக்கின்றேன். என்னிடம் அது பற்றியுள்ள போட்டோ பிரதியில் திகதி விடுபட்டுப்போயுள்ளதால் அது பற்றி உடனடியாக நிச்சயமாகக்கூற முடியாதுள்ளது. அந்தபோட்டிக்கு அனுப்பப்பட்ட கதையிது. சிறுகதையாகக்கணிக்கப்பட்டு பிரசுரத்திற்குரியதாக நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதையிது. நடுவர்களாக சிற்பி சரவணபவன் ,செங்கை ஆழியான் மற்றும் செம்பியன் செல்வன் ஆகியோரிருந்தனர். அக்காலகட்டத்து மனநிலையினைப் பிரதிபலிக்கும் எழுத்தென்பதால் ஒரு பதிவுக்காக இச்சிறுகதை பிரசுரமாகின்றது. –
1.
வெளியிலோ இலேசாகத்தூறிக்கொண்டிருந்த மழை பெருக்கத்தொடங்கிவிட்டிருந்தது. புழுதி படர்ந்த செம்மண் சாலைகளிலிருந்து மழைத்தூறல் பட்டதால் செம்பாட்டுமண்ணின் மணம் பரவத்தொடங்கிவிட்டிருந்தது. கோவைப்பழங்களைப்போட்டி போட்டு தின்றபடியிருந்த கிளிகள் மழை பெருப்பதைக்கண்டவுடன் நனைந்த இறகுகளை ஒருமுறை சிலிர்த்துவிட்டு , விண்ணில் வட்டமடித்துவிட்டு, உறைவிடங்களை நாடிப்பறக்கத்தொடங்கின. எங்கோ தொலைவில் பயணிகள் பஸ்ஸொன்று குலுக்கலுடன் இரைந்து செல்லுமோசை காற்றில் மெல்லவந்து காதில் நுழைந்தது. திடீரென அமைதியாகவிருந்த வானம் ஒருமுறை மின்னிவிட்டுப் பயங்கரமாக அதிர்ந்தது. மழை பொத்துக்கொண்டு வரப்போகின்றது. மழைக்காலம் தொடங்கி விட்டது. மழை தொடங்கி விட்டாலே வன்னி மண்ணின் பூரிப்பே தனிதான். வயிரமென நிற்கும் பாலைகள், கருங்காலிகள், முதிரைகள் கூட ஒருவித நெகிழ்வுடன் நெகிழ்ந்து நிற்கையில் , மர அணில்களோ ஒருவித எக்களிப்புடன் மாரியை வரவேற்று, கொப்புகளில் தாவித்திரியும். மணிப்புறாக்கள், சிட்டுகள், குக்குறுபான்கள்,மாம்பழத்திகள், காடைகள், கவுதாரிகள், காட்டுக்கோழிகள், ஆலாக்கள், ஊருலாத்திகள், கொண்டை விரிச்சான்கள், மயில்கள், கொக்குகள்,நாரைகள்.. பறவைகள் யாவுமே புத்துணர்வுடன் மாரியை வரவேற்றுப்பாடித்திரிகையில் … கட்டுமீறிப்பாய்ந்து பொங்கித்ததும்பும் குளங்கள், விரால் பிடிப்பதற்காக மீனவர்களுடன் போட்டிபோடும் வெங்கணாந்திப்பாம்புகள் உண்ட அசதியில் தவிக்கும் காட்சிகள்.. மரக்கொப்புகளில் வானரங்களுக்குப் போட்டியாகத்தாவிக்குளங்களில் பாயும் சிறுவர்கள்… மாரி என்றாலே வன்னி மண்ணின் பூரிப்பே தனிதான். சொதசொதவென்று சகதியும், இலைகளுமாகக் கிடக்கும் காட்டுப்பிரதேசங்களில் மெல்லப்பதுங்கிப்பாயும் முயல்கள், அசைவற்று நிற்கும் உடும்புகள், கொப்புகளோடு கொப்புகளாக ஆடும் கண்ணாடி விரியன்கள்… இம்மண்ணினழகே தனிதான்.
மழையுடன் போட்டி போட்டபடி ‘ஓ..வ்..வ்..’வென்று காற்று வேறு பெரிதாக அடிக்கத்தொடங்கிவிட்டிருந்தது. வானம் இருண்டுபோய் கன்னங்கரேலென்று பெரும் பிரளயமே வந்து விடுவது போன்றதொரு தோற்றத்தில் அந்தப்பிரதேசம் மூழ்கிக்கிடக்கின்றது.