‘கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.’
திருக்குறளுக்கு அமைய அப்துல் கலாம் கசடறக் கற்றார் கற்றபின் அவை கூறிய ஒழுக்க நெறியில் வழுவாது ஒழுகி நின்றார். அதுவும் காணாதென்று மேலும் தொடர்ந்து செயற்பட்டு உலக மேதையானார். அவர் வரலாற்றைச் சற்று விரிவு படுத்திக் காண்போம்.
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்கள் ஜைனுலாப்தீனுக்கும் ஆஷியம்மாவுக்கும், நான்கு சகோதரர்களுடனும், ஒரு சகோதரியுடனும் ஆறாவது குழந்தையாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் 15-10-1931 அன்று அவதரித்தார். இவர் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு படகோட்டியின் மகனாவார். இவர் குடும்பம் ஏழ்மையில் வாடியதால், இவர் செய்தித்தாள்களை விநியோகம் செய்தார். இவர் ஒரு பழுத்த பிரமச்சாரியாவார்.
இவர் தன் பள்ளிப்படிப்பை முடித்தபின், திருச்சினாப்பள்ளியிலுள்ள ‘செயின்ட் ஜோசேப் கல்லூரியில்’ இயற்பியல் பயின்று 1954-ஆம் ஆண்டு இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஆனால் இயற்பியற் துறையில் ஆர்வம் காட்டாத இவர், 1955-ஆம் ஆண்டு தன்னுடைய ‘விண்வெளிப் பொறியியற் படிப்பை’ சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
விஞ்ஞானியாக அப்துல் கலாம்
1960-ஆம் ஆண்டில் ‘பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்’ (Defence Research and Development Organisation = DRDO ) எனும் பிரிவில் விஞ்ஞானியாக ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்து இந்திய ராணுவத்துக்கு வழங்கினார். பின்னா;, ‘இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்’ (Indian Space Research Organisation = ISRO) எனும் பிரிவிலும் தனது ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து, ‘துணைக்கோள் ஏவுகணைக் குழுவில்’ (Satalite Launch Vehicle = SLV) செயற்கைக்கோள் ஏவுதலிலும் முக்கிய பங்காற்றினார். இவர் 1980-ஆம் ஆண்டு SLV-111 ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-1 என்ற துணைக்கோளை விண்ணில் ஏவச்செய்து வெற்றியும் கண்டார். இது இந்தியாவுக்கே ஒரு பெரும் சாதனையாக அமைந்தது. இச் செயலைப் பாராட்டி இந்திய மத்திய அரசு இவருக்கு 1981-ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான ‘பத்ம பூஷன்’ என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.