கவிஞர் திருமாவளவன் அவர்கள் சுகவீனம் காரணமாக மருத்துவ நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் எஸ்.கே.விக்கினேஸ்வரன் அவர்கள் முகநூலில் பதிவொன்றினை இட்டிருந்தார். அப்பதிவினைக்கீழே காணலாம். கவிஞர் திருமாவளவன் பற்றிய செய்தி துயர் தருவது. புகலிடக் கவிஞர்களில் பரவலாக அறியப்பட்டவர் கவிஞர் திருமாவளவன். புகலிட அனுபவங்களை மையமாக வைத்துக் கவிதைகள், சிறுகதைகள் படைத்தவர் திருமாவளவன. கலை, இலக்கிய விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதனின் அபிமானத்துக்குரிய கவிஞர். அவர் பூரண நலத்துடன் மீண்டு வந்திட வேண்டுகின்றோம்.
முகநூலில்: கவிஞர் திருமாவளவனுடன் சில நிமிட நேரங்கள்….
– எஸ்.கே.விக்கினேஸ்வரன் –
கவிஞர் திருமாவளவனை வைத்தியசாலையில் சென்று பார்த்தேன். அந்தக் கம்பீரமான கவிஞன் கட்டிலின் படுத்திருந்த நிலை நெஞ்சைப் பிழிந்தது . உறவுகளையும் நண்பர்களையும் அடையாளம் காணக்கூட முடியாத அளவுக்கு அவரைப் பற்றிப்பிடித்த நோய் அவரை வெற்றி கொண்டு வருகிறது. தமிழ் இலக்கிய சூழலில் தவிர்க்க முடியாத முக்கியமான ஒரு கவிஞனின் இந்த நிலை தாங்க முடியாத் துயர் தருவது.
” இனி இழப்பதற்கெதுவும் இல்லையென்றானபின்
கொடும் கூற்றென் செயும்
சொரியும் உறைபனிதான் என்செயும்
இறங்கி நடக்கிறேன்
தெருவில்.
வெண்மணல் சேறென
காலடிக் கீழ் நசிந்து உருகுகிறது
முதற்பனி”
என்று நம்பிக்கையுடன் பாடிய கவிஞனின் வாய் இனி ஓய்ந்துடுமோ என்ற அச்சத்துடன் குடும்பத்தினரிடம் கேட்கிறேன்.
வைத்தியர்கள் கைவிரித்துவிட்டதாகச் சொல்கிறார்கள் அவர்கள் கண்ணீர் மல்க.