அஞ்சலி: தமிழினி மறைவு!

தமிழினி ஜெயக்குமாரன்நண்பர் கற்சுறா முகநூலில் அனுப்பியிருந்த தமிழினியின் மறைவு பற்றி அனுப்பியிருந்த தகவல் உண்மையிலேயே அதிர்ச்சியினைத்தந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. சிறிது நாள்களுக்கு முன்னர் கூட எழுத்தாளர் தாமரைச்செல்வி பற்றி நான் எழுதிய முகநூல் பதிவினைத்தனது முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதுடன்  பின்வருமாறும் எழுதியிருந்தார்:

“அக்காவின் எழுத்துக்களை சிறு வயதிலிருந்தே நான் ஆர்வத்துடனும். ஆசையுடனும் வாசிப்பதுண்டு. வளர்ந்த பின்பும் அக்காவின் வன்னி மண்ணினதும் அதன் மக்களின் இயல்புகளையும் பற்றிய புரிதலை எனக்குள் ஏற்படுத்தியவை அக்காவின் எழுத்துக்கள் தான். அவை பற்றி அருமையான குறிப்பொன்றைத் தந்தமைக்கு சகோதரன் கிரிதரனுக்கு எனது மனமார்ந்த நன்றி.”

தமிழினி விடுதலைப்புலிகளின்  மகளிர் அணியின் அரசியற் பிரிவின் பொறுப்பாளராக விளங்கியவர். யுத்தத்தின் பின்னர் சிறிது காலம் சிறை வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர். அதன் பின்னர் அண்மைக்காலமாகத் தமிழ் இலக்கியத்தில் தன் பங்களிப்பினை ஆற்றத்தொடங்கியிருந்தார். தமிழினி எழுதுவதில் திறமை மிக்கவர். அவர் தன் அனுபவங்களை மையமாக வைத்துக் கவிதைகள், சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார். பதிவுகள் இணைய இதழுக்கும் அவர் தன் படைப்புகளை அவ்வப்போது அனுப்புவார். பதிவுகள் இணைய இதழ் மேல் மிகுந்த மதிப்பு கொண்டிருந்ததோடு அல்லாமல் தன் முகநூல் பக்கத்தில் பதிவுகளில் அவரது படைப்புகள் பற்றி வெளியாகியுள்ள குறிப்புகளை பிரசுரிப்பதுடன் அதற்காக நன்றியும் கூறியிருப்பார். அவர் நோய் வாய்ப்பட்டிருந்த விடயம் அவரது மறைவின் பின்னர்தான் தெரிந்தது.

அவர் தன் அனுபவங்களை மையமாக வைத்து இன்னும் பல படைப்புகளைத்தருவார் என்றெண்ணியிருந்த சமயத்தில் அவரது மறைவுச்செய்தி வந்திருக்கின்றது. ஆனால் அவர் எழுதிய அனைத்துமே தமிழ் இலக்கியப்பரப்பில் முக்கியமானவையாக விளங்கப்போகின்றன என்பது மட்டும் நிச்சயம்.

Continue Reading →