கவிஞர் புவியரசின் மொழிபெயர்ப்பில் தஸ்தயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள்…..

கவிஞர் புவியரசின் மொழிபெயர்ப்பில் தத்யயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள்.....‘கரமசோவ் சகோதரர்கள்’ தஸ்தயேவ்ஸ்கியின் மிகச்சிறந்த நாவல் மட்டுமல்ல. உலக இலக்கியத்தின் சிறந்த நாவலாகவும் கருதப்படுவது. இதன் தமிழ் மொழிபெயர்ப்பினை ‘நியூ செஞ்சுரி புக்ஸ்’ பதிப்பகமும் (கவிஞர் புவியரசு மொழிபெயர்ப்பிலும்) , காலச்சுவடு பதிப்பகமும் (நேரடியாக ருஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து ‘கரமஸாவ் சகோதரர்கள் என்னும் தலைப்பில்) வெளியிட்டுள்ளன.

நம்மவர்கள் பலர் அவ்வப்போது ஏன் அவரைப்போல் அல்லது இவரைப்போல் எழுத முடியவில்லையே என்று கண்ணீர் வடிப்பதுண்டு. அவர்கள் முதலில் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளை வாசிக்கும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்விதம் வாசித்தால் அவர்கள் ஏன் அவர்கள் குறிப்பிடும் படைப்பாளிகளால் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளைப்போன்ற படைப்புகளை வழங்க முடியவில்லை என்பது புரிந்து நிச்சயம் கண்ணீர் விடுவார்கள்.

மானுட வாழ்வின் இருப்பை, இருப்பின சவால்களை, இருப்பின் இன்பதுன்பங்களை, இருப்பின் நன்மைக்கும் தீமைக்குமிடையிலான மோதல்களை, இருப்பின் நோக்கம் பற்றிய தேடலை தஸ்தயேவ்ஸ்கி எழுதியதுபோல் வேறு யாருமே இதுவரையில் எழுதவில்லை என்பது இதுவரையிலான என் வாசிப்பின் அடிப்படையில் எழுந்த கருத்து. தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளின் ஒவ்வொரு பக்கத்தையும் ஒதுக்கித்தள்ள முடியாது. அது அவரது எழுத்தின், சிந்தனையின் சிறப்பு.

வக்கிரமான உணர்வுகளும், காமமும் மிகுந்த ஒரு பணக்காரத்தந்தை, அவரது மூன்று வகைக்குணவியல்புகளுள்ள மூன்று புத்திரர்கள், அவருக்கும் பிச்சைக்காரியொருத்திக்குமிடையில் முறை தவறிப்பிறந்ததாகக் கருதப்படும் இன்னுமொரு புத்திரன், அவரது வேலைக்காரன், மூன்று புத்திரர்கள் வாழ்விலும் புகுந்துவிட்ட பெண்மணிகள், அந்தப்பெண்மணியிலொருத்திக்கும் மூத்த புத்திரனுக்கும், தந்தைக்குமிடையிலுமான காதல், காம உணர்வுகள், மேலுமிரு சகோதரர்களுக்குமிடையில் வரும் இன்னுமொரு பெண்மணி , ஒரு துறவி என வரும் முக்கியமான பாத்திரங்களை உள்ளடக்கிப் பின்னப்பட்டிருக்கும் மகாநாவல் கரமசோவ் சகோதரர்கள்.

நாவலின் பின்பகுதியில் வரும் தந்தையின் மரணமும் , சந்தர்ப்பசூழ்நிலைகளால் மூத்தமகன் குற்றஞ்சாட்டப்படுவதும், உண்மையில் அக்கொலையின் சூத்திரதாரியான முறைதவறிப்பிறந்த புத்திரன் தற்கொலை செய்வதும், இருந்தும் நீதிமன்றத்தால் மூத்தவன் தண்டிக்கப்படுவதும், அது பற்றி நிகழும் நீதிமன்ற வாதிப்பிரதிவாதங்களும் வாசித்து அனுபவித்து மகிழ வேண்டியவை.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 129 : என்னருமை யாழ்ப்பாணமே! | சாகித்திய விருதும் , திருப்பிக்கொடுத்தலும்! | எழுத்தாளர் டிசெதமிழன் ‘காந்தியம் அமைப்பைப்பற்றி….

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்ஈழத்துத்தமிழ்ப்பகுதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம். தனித்துவம் மிக்கவை. நில அமைப்புகளும் வித்தியாசமானவை. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால் ஈழத்தமிழர்களாகிய நாம் அவற்றை முறையாகப்பயன்படுத்துகிறோமா? உதாரணத்துக்கு யாழ்ப்பாணத்தை எடுத்துக்கொள்வோம்.

வான் பார்க்கும் வட மாகாணத்தின் பிரதான நகர்தான் யாழ்ப்பாணம். அந்நகர அமைப்பினை நினைக்கும் தோறும் எனக்கு ‘டொராண்டோ’ நகரின் நகர அமைப்பு ஞாபகத்து வருவதுண்டு. ‘டொராண்டோ’ நகரின் உள்நகரின் (downtown) பிரதான அம்சங்களிலொன்று: பிரதான விளையாட்டு அரங்குகள், சுற்றுலாப்பயணிகளுக்கு முக்கியவத்துவம் வாய்ந்த கட்டடங்கள் மற்றும் வாவிக்கரை போன்றவையெல்லாம் ஓரிடத்தில் அமைந்திருக்கும். யாழ்ப்பாணத்தைப் பார்ப்பீர்களென்றால் இது போன்ற ஓர் ஒழுங்கமைப்பினை அவதானிக்கலாம். பிரதான விளையாட்டரங்கு, முற்றவெளி, திறந்த பிரதான திரையரங்கு, சுப்பிரமணியன் பூங்கா, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த டச்சுக் கோட்டை, அழகான பண்ணைக்கடலும், பாலம், மேலும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல கட்டடங்கள் (உதாரணத்துக்குப் போர்த்துக்கேயர் காலத்துக் கிறிஸ்தவ ஆலயங்கள், ஆங்கிலேயர் காலத்து வீடுகள் போன்றவை), மணிக்கூட்டுக்கோபுரம், முறையாகப்பாவித்திருக்க வேண்டிய புல்லுக்குளம், யாழ் பொதுசன நூலகம், தந்தை செல்வா சமாதி எனப் பல முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையெல்லாம் ஓரிடத்தில் அமைந்திருக்கும் ஒழுங்கமைப்பினையே கூறுகின்றேன்.

‘டொராண்டோ’ நகரினை மக்கள் பாவிப்பதுபோல் யாழ்நகரை மக்கள் பாவிப்பதில்லை. இதற்குக்காரணம் நகரினைப் பரிபாலிக்கும் ஆட்சியிலிருக்கும் அமைப்புகளெல்லாம் தொலைநோக்கில் சிந்தித்து நகரினை மக்கள் அதிகமாகப்பாவிக்கும் வகையில் பிரதானப்படுத்திச் செயற்பாடுகளை எடுக்கவில்லை என்பதால்தான் என்பதென் கருத்து.

Continue Reading →

செம்மொழி தெலுங்கின் கலமல்லா கல்வெட்டு

செம்மொழி தெலுங்கின் கலமல்லா கல்வெட்டு!   சேசாத்திரி ஶ்ரீதரன-நடுவண் பண்பாட்டு அமைச்சகம் தெலுங்கிற்கான செம்மொழி வல்லுநர் குழு ஒன்றை அமைத்து அதன் பரிந்துரையின்படி 2008 நவம்பரில் இல் தெலுங்கைச் செம்மொழியாக  அறிவித்தது.

இதற்கு 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழைமை உடைய  இலக்கியங்கள் அல்லது பதியப்பட்ட வரலாறு இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில்1904 இல் சென்னையில் இருந்து செயற்பட்ட இந்தியத் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட கள ஆய்வில் கடப்பை மாவட்டம் கமலாபுரம் வட்டம் ஏற்ரகுடிபாலேம் கலமல்லா ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலில் கண்டு அறியப்பட்ட ரேனாட்டு சோழன் எரிகல் முத்துராசு  தனஞ்செயன் பற்றிய கல்வெட்டு எழுத்தமைதியால் பழமையானது இதாவது, கி.பி. 575 ஆம்  நூற்றாண்டினது என்று முடிவு செய்யப்பட்டு அதை நடுவண் பண்பாடு அமைச்சகத்திற்கு சான்று ஆவணமாகக் காட்டியுள்ளனர்.

ரேநாடு என்பது இற்றைய இராயல்சீமையின் கடப்பை மாவட்டத்தைச் சுற்றி அமைந்த நாட்டுப் பகுதியாகும். இதை ஆண்ட தெலுங்கு சோழர்கள் ரேநாட்டுச் சோழர்கள் எனப்பட்டனர். யுவான் சுவாங்கின்  பயணக் குறிப்பில் உள்ள “சுளியர்” என்பதை மேற்கோளாகக் கொண்டு சிலர் தெலுங்கு சோழர்களை கி.பி  7 ஆம் நூற்றாண்டு முதல்13 ஆம் நூற்றாண்டுவரை ஆண்டவர்கள் என்று கூறுவது உண்டு.

இக்கல்வெட்டு கோவில் வளாகத்தில் கிடத்தப்பட்டிருந்த உடைந்த தூணின் இரண்டு பக்கங்களில்17 வரிகளில் வெட்டப்பட்டுள்ளது. இதில் நான்கு வரிகள் (12 – 15) சிதைந்து உள்ளன. அதை சென்னைக்கு கொண்டுவந்து தொல்பொருள் சேமிப்பில் வைத்திருந்துள்ளனர். ஆனால் இப்போது அக்கல்வெட்டு காணாமல் தொலைக்கப் பட்ட நிகழ்வு தொல்லியல் ஆர்வலர்களை பெரிதும் வருத்தமுறச் செய்துள்ளது. இனி, இக் கல்வெட்டு பாடமும்  விளக்கமும்.

Continue Reading →

அருண்மொழிநங்கை ஜெயமோகனுடன் ஒரு நேர்காணல்!

அருண்மொழி நங்கை; நன்றி: ஜெயமோகன் வலைப்பதிவு (புகைப்படம்)ஶ்ரீரஞ்சனி விஜேந்திராஎன்ன எழுதியிருக்கிறாய் என்று பெண்ணை, ஆண் கேட்பது என்பது ஒரு சீண்டல், அதற்குச் சவாலாகப் பெண் எழுதிக்காட்ட வேண்டும் எனச் சொல்லும், அருண்மொழிநங்கை ஜெயமோகன்,  ஒழுக்கம் என்பது பெண்ணுக்குக்கான ஒரு அளவுகோல் இல்லை, அதைச் சொல்லிவிட்டார்களே என்று பெண் எழுத்தாளர்கள் அனுதாபம் தேடியிருக்கக் கூடாது. பெண் என்றால் கொஞ்சம் திமிர் தேவை என்கிறார்.

கேள்வி: ஜெயமோகன் அவர்களின் வாசகி என்ற நிலையிலிருந்து மனைவியாக மாறிய அந்தக் காலகட்டத்தை மீட்க முடியுமா? மனைவியான பின் உங்களின் வாசிப்பு மனநிலையில் ஏதாவது மாற்றத்தை அவதானித்தீர்களா?

பதில்: வியப்புடன் பார்க்கும் ஓர் ஆளுமையின் எழுத்தை மட்டுமே வாசகியாக இருக்கும்போது நாம் பார்க்கிறோம். அவர்களின் அன்றாட வாழ்க்கை நமக்குத் தெரிவதில்லை. அப்போது நான் அறிந்த ஜெ, ஓர் அறிவுஜீவி. அவரது எழுத்துப் பற்றிய பிரமிப்பு மட்டும்தான் என்னிடம் இருந்தது. திருமணம் ஆனதும் அவரின் அன்றாட வாழ்க்கை தெரியவந்தது. சாதாரண மனிதர்களின் அன்றாடவாழ்க்கையை விடவும் அது குழறுபடியானது என்று புரிந்தது. அப்போது எழுத்தையும் ஆளையும் நான் பிரித்துப் பார்க்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக மனிதரை நன்றாக அறிந்து அந்த அறிதலின் வழியாக, மேலும் நெருங்கியபோதுதான் அவருக்குள் படைப்புத்தன்மை மிகுந்த ஆளுமையைக் கண்டேன். இன்று படைப்புமனம் கொண்ட ஒருவர்தான் எனக்கு முதன்மையாவராகத் தெரிகின்றார். இது படிப்படியாக மாறிவரும் ஒரு சித்திரம்.

அத்துடன் நான் என்றைக்குமே ஒரு  நல்ல வாசகி. அவர் எழுதும்போதே வாசிப்பவள். திருமணம் ஆனபோது அவர் எழுதும் வேகம் ஆச்சரியத்தை அளித்தது. ஆனால் இப்போது ஆச்சரியமெல்லாம் இல்லை. அது இயல்பாகத் தெரிகிறது. நான் வாசகியாக  இருந்த அவரின் எழுத்துக்களை வாசிக்கும்போது ஜெ வேறு ஒருவராகத்தான் தெரிகிறார். அது அவரது ஓர் உச்சநிலை மட்டும்தான்.

கேள்வி: ஜெயமோகன் அவர்களின் முதல் வாசகியாக இருக்கும் நீங்கள் அவருக்குக் கொடுக்கும் பின்னூட்டம், அவருடைய படைப்புக்களில் குறிப்பிடத்தக்க ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றதா? அது பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?

பதில்: அவரின் ஆரம்பகால படைப்புகள் எல்லாவற்றையுமே நான் வாசித்து எடிட் செய்திருக்கிறேன். விஷ்ணுபுரம் முழுக்கமுழுக்க என் தொகுப்பில் உருவான ஒரு நாவல். நாங்கள் இருவரும் சேர்ந்து எழுதியது என்றுகூட அவர் சொல்லியிருக்கிறார். காடு, ஏழாம் உலகம் யாவுமே நான் எடிட் செய்தவைதான். கதையோட்டம், அமைப்பின் சமநிலை இரண்டையும் நான் புறவயமாக அளந்து சொல்வேன். அது அவருக்கு உதவியாக இருக்கின்றது என்று அவர் சொல்வார்.

Continue Reading →