ஈழத்துத்தமிழ் நாவல்களில் அனைத்துக்குழுக்களாலும் தவிர்க்க முடியாததொரு படைப்பாகக்கருதக்கூடிய படைப்பு அ.பாலமனோரகனின் ‘நிலக்கிளி’. அந்த ஒரு படைப்பின் மூலம் ஈழத்துத்தமிழ் இலக்கியத்தில் தனக்கென்றோரிடத்தைப்பிடித்துக்கொண்டவர் அவர். வன்னி மண்ணின் மணம் கமழும் நல்லதொரு நாவல்.
நிலக்கிளி நல்லதொரு படிமம். நிலத்தில் பொந்துகள் அமைத்து கூடுகட்டி வாழும் அழகிய பறவைகள் நிலக்கிளிகள். இவை தாம் வசிக்கும் வளைகளை விட்டு அதிக உயரம் பறப்பதில்லை. இவ்விதம் நிலக்கிளிகளைப்பற்றிக்குறிப்பிடும் ஆசிரியர் பதஞ்சலியையும் அவ்விதமானதொரு நிலக்கிளியாக நாவலில் உருவகித்திருக்கின்றார்.
இந்த நாவல் என்னைக்கவர்ந்ததற்கு முக்கிய காரணங்கள்: வன்னி மண் வாசனை தவழும் எழுத்து மற்றும்பாத்திரப்படைப்பு (நாவலின் பாத்திரங்கள் அனைத்துமே உயிர்த்துடிப்புடன் படைக்கப்பட்டிருக்கின்றன).
இந்த நிலக்கிளிகளைப்பற்றி நான் இந்நாவலைப்படிப்பதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை. எனது பால்ய காலம் வன்னியின் ஒரு பகுதியாக வவுனியாவில் கழிந்திருந்தாலும் அங்கு நான் வாழ்ந்திருந்த காலத்தில் இவ்விதமானதொரு பறவையைப்பற்றிக்கேட்டதேயில்லை. நிலக்கிளி என்பது இன்னுமொரு பறவைக்கு பால மனோகரன் வைத்த பெயரா அல்லது உண்மையிலேயே அப்பெயரில் அழைக்கப்படுமொரு பறவை உள்ளதா? ஏனெனில் இன்று வரை எனக்கு ‘நிலக்கிளி’ என்னும் பறவை பற்றி ‘நிலக்கிளி’ நாவலில் வருவதை விட மேலதிகமான தகவல்களெதுவும் கிடைக்கவில்லை. ‘நிலக்கிளி’ பற்றி வன்னி நண்பர்கள் யாராவது மேலதிகத்தகவல்களிருப்பின் பகிர்ந்து கொள்ளவும்.
இந்த நாவலின் ஆரம்பம் முரலிப்பழம் பற்றிய வர்ணனையுடன் ‘கார்த்திகை மாதத்தின் கடைசி நாட்கள்! அடிக்கடி பெய்த பெரு மழையில் குளித்த தண்ணிமுறிப்புக் காடுகள் பளிச்சென்றிருந்தன. ஈரலிப்பைச் சுமந்துவந்த காலையிளங் காற்றில் முரலிப் பழங்களின் இனிய மணம் தவழ்ந்து வந்தது’ என்று ஆரம்பிக்கின்றது. நல்லதோர் ஆரம்பம். அந்த ஆரம்பமே நாவல் இயற்கை எழில் ததும்பும் வன்னி மண்ணின் மணம் கமழும் நாவலென்பதை எடுத்துக்காட்டி விடுகிறது. தொடர்ந்து வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை ஏற்படுத்தி விடுகின்றது.