கவிஞர் திருமாவளவன் காலமானார். புலம் பெயர் தமிழ் இலக்கியத்தில் கவிதைத்துறையில் முக்கியமான கவிஞர்களிலொருவர். கவிதை, சிறுகதை, கட்டுரை என இலக்கியத்தின் பல்துறைகளிலும் பங்களிப்புச்செய்தவர் கவிஞர் திருமாவளவன். இனி அவர்தம் படைப்புகளினூடு நிலைத்து வாழ்வார். அவரது நினைவாக ‘எதுவரை’ இணைய இதழிலில் வெளியான அவரது கவிதைகள் சிலவற்றைப் பதிவு செய்கின்றோம்.
கவிதைகள் – திருமாவளவன்
1.
எறும்புகள் – சிறு குறிப்பு
எறும்புகளின் வாழ்வு எளிதல்ல
தினமும் தன் வயிற்றுக்காய் நெடுந்தூரம் நடக்கிறது
நாள் முழுவதும் அலைகிறது
வியர்வை ஒழுக ஓடியோடி உழைக்கின்றது
பேரழிவிலிருந்து
தன் சந்ததியைப் பேண பேரச்சம் கொள்கிறது
மேலும்
ஒவ்வொரு எறும்புக் கூட்டமும் ஒவ்வொரு ஊர்
மனிதர்களைப் போல்
எறும்பூர்கள் இரண்டு மோதுவதில்லை என்பது முரண்தான்
இருந்தாலும்
தனதினத்துக்கு வரும் இடர்ப்போதுகளில்
நீண்ட வரிசைகளில் மூட்டை முடிச்சுகளோடு
ஊர் ஊராய் அலைகிறது
அவை நடக்கிற போதில் கால்களின் வழி
துயர் வழிகிறது
ஒன்றையொன்று சந்திக்கும் தருணங்களில்
ஒரு கணம் நின்று
துக்கங்கௌவ விசாரிப்புகளைப் பரிமாறிக் கொள்கின்றன
ஒதுங்க இடங்களற்று கற்களின் கீழும்
மர இடுக்குகளிடையேயும் தங்கிச் சீரழிகிறது
பெரும் படையெடுப்புகளென
திடீரென எழும் தீயிலும்
மற்றும் வெள்ளப் பெருக்குகளிலும்
அவற்றின் ஊர்கள் சின்னாபின்னப்பட்டு விடுகிறது
ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டவை போக
எஞ்சியவை
தலைதெறிக்கச் சிதறி ஓடுகின்றன
அகப்பட்ட பொருட்களிலே தொற்றி
நெடுந்தூரம் மிதந்து
புலம் பெயர்ந்து விடுகிறது
பின்னர்
தொடரும் பிறிதொரு அலைவு
புகலிட வாழ்வும் எளிதல்ல
எறும்புக்கும்…