திரையுலகில் நடிக்கும்பொழுது தான் இணைந்து நடிக்கப்பயந்த மூன்று கலைஞர்களைப்பற்றி நடிகர்திலகம் சிவாஜி கணேசன் ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார். அம்மூவரும்: நடிகையர் திலகம் சாவித்திரி, நடிகவேள் எம்.ஆர். ராதா, சகலகலா ஆச்சி மனோரமா. இன்று இவர்கள் அனைவரும் திரையுலகை விட்டு விடைபெற்றுவிட்டனர். இறுதியாக கடந்த 10 ஆம் திகதி சென்றவர் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து சாதனைகள் பல நிகழ்த்திய மனோரமா. தமிழ்சினிமா மிகைநடிப்பாற்றலுக்கு பெயர் பெற்றது. நாடக மேடைகளிலிருந்து அந்தக்காலத்தில் வந்த நடிகர், நடிகைகளும் அவர்களுக்கு உணர்ச்சியூட்டும் வசனம் எழுதிக்கொடுத்தவர்களும் சினிமா என்றால் இப்படித்தான் இருக்கும் – இருக்கவேண்டும் என்ற கற்பிதம் தந்தவர்கள். அதனால் யதார்த்தப்பண்புவாத தமிழ்ப்படங்களின் எண்ணிக்கை தமிழ் சினிமாவில் குறைந்தது. இந்தக்கருத்தை இலங்கைப் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களும் கனடா மூர்த்தி சிவாஜி கணேசன் மறைந்தபொழுது தயாரித்த ‘சிவாஜிகணேசன் ஒரு பண்பாட்டுக்குறிப்பு’ என்ற ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளார்.
மனோரமா 1937 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் மன்னார்க்குடியில் பிறந்தவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் கற்றது ஆறாம் தரம் வரையில்தான். வறுமையில் வாடிய இவருடைய குடும்பம் காரைக்குடிக்கு அருகில் பள்ளத்தூர் என்ற இடத்திற்கு இடம்பெயர்ந்தது. கோபி சாந்தா என்ற இயற்பெயர்கொண்டிருந்தவருக்கு கற்றலில் ஆற்றல் இருந்தபோதிலும், மேலும் கற்பதற்கு குடும்பத்தின் பொருளாதார நிலைமை இடம்கொடுக்கவில்லை. சிறுமியாக இருக்கும்பொழுதே துடிப்போடு பேசும் ஆற்றல் இவருக்கிருந்தமையினால் அவருடை 12 வயதில் நாடக சபாக்களின் நிகழ்ச்சிகளில் தோன்றினார். பள்ளத்தூரிலிருந்து நாடக சபா மேடைகளுக்கு இவர் வந்தமையால் அந்த வட்டத்தில் இவர் பள்ளத்தூர் பாப்பா என்றே முதலில் அழைக்கப்பட்டார். பின்னர் இவருக்கு – இவர் ஆரம்ப காலங்களில் நடித்த நாடக இயக்குநர் ஒருவர் மனோரமா என்ற புதிய பெயரைச்சூட்டினார். இவர்போன்று தமது இயற்பெயர்களை தமிழ் சினிமாவில் மாற்றிக்கொண்ட நடிக, நடிகையர் ஏராளம்.