– கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் எழுத்தாளர் குரு அரவிந்தனின் 25 வருடகால கனடிய இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாக நூல் வெளியீட்டுடன் கூடிய பாராட்டு விழா ஒன்று எழுத்தாளர் இணையத் தலைவர் திரு. எஸ். சிவநாயகமூர்த்தி தலைமையில் ‘டொராண்டோ’வில் (BABA Banquet Hall, 3300 McNicoll Avenue, Toronto. On. M1V 5J6. (Middlefield Rd / McNicoll) அக்டோபர் 16 அன்று மாலை 6.45 மணிக்கு நடைபெற இருப்பதையொட்டி , இலங்கையின் மூத்த எழுத்தாளர்களிலொருவரான குறமகள் (வள்ளிநாயகி இராமலிங்கம்) அவர்கள் குரு அரவிந்தனின் இலக்கியப்பங்களிப்பு பற்றி எழுதிய இக்கட்டுரை இங்கு பிரசுரமாகின்றது. எழுத்தாளர் குரு அரவிந்தன் ‘பதிவுகள்’ வாசர்களுக்குப் புதியவரல்லர். ‘பதிவுகள்’ இணைய இதழில் அவ்வப்போது அவரது சிறுகதைகள் மற்றும் ‘டொரண்டோ’வில் நடைபெறும் கலை, இலக்கிய நிகழ்வுகள் பற்றிய குறிப்புகளும் வெளிவருவது யாவரும் அறிந்ததே. குரு அரவிந்தனின் இலக்கியச்சேவையைப் பாராட்டி அவருக்கு விழா எடுக்கப்படும் இச்சமயத்தில் மேலும் மேலும் அவரது கலை, இலக்கியப்பணி தொடர்ந்திட ‘பதிவுகள்’ இணைய இதழும் அவரை வாழ்த்துகிறது. – பதிவுகள் –
‘யுத்தம் என்பது மனித உடல்களை மாத்திரமல்ல, மனித மனங்களையும் சிதைத்து விடுகின்றது. இது போன்ற பயங்கர அனுபவங்கள் இனி யாருக்கும் வரவேண்டாம். அதை அனுபவிப்பவனுக்குத்தான் அதன் வலியும், வேதனையும் தெரியும். எனவே யுத்தத்தைக் கொன்று விடுங்கள். இந்த உலகத்தை சுதந்திரமான அமைதிப் பூங்காவாக்குங்கள்’ என்று குரு அரவிந்தன் ஆசிரியர் உரையில் குறிப்பிட்டிருப்பதில் இருந்து அவர் ஒரு அமைதி விரும்பி என்பது புலனாகின்றது. குரு அரவிந்தன் இயல்பாகவே தனது உணர்ச்சிகளை அவ்வளவாக வெளிக்காட்டுவதில்லை. புன்சிரிப்பு தவழும் அழகான வதனம், கண்கள்கூட அமைதியைக்காட்டும் ஆனால் சுற்றியிருக்கும் அத்தனையும் அங்கே பதிவாகியிருக்கும். தேவையான பொழுது மட்டும் அவை எழுத்து மூலம் வெளியே கொண்டு வரப்படும். தமிழ் மீதும், தாய் மண் மீதும் அதிக பற்றுக் கொண்டவர். எல்லோருக்கும் உதவவேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். அதனால்தான் தன்னார்வத் தொண்டராகவும் புலம் பெயர்ந்த மண்ணில் தன்னை அர்ப்பணித்திருக்கின்றார்.
ஈழத்தமிழர்களின் விடுதலை உணர்வை தன் பேனா முனையால் வன்முறையின்றி அகிம்சை வழியில் சர்வதேசம் எங்கும் எடுத்துச் சென்ற முன்னோடிகளில் குரு அரவிந்தனும் ஒருவர். இவரது எழுத்துக்களில் ‘உயிருக்குயிராக உன்னையும் இந்த மண்ணையும் நேசிக்கின்றேன்’ என்ற வார்த்தைகள் அடிக்கடி இடம் பெறுவதை அவதானிக்கலாம். இவரது ‘உறங்குமோ காதல் நெஞ்சம்’ என்ற புதினத்தின் மூலம் இந்த வார்த்தைகள் வெளிவருகின்றன. உறங்குமோ காதல் நெஞ்சம் என்றால் எல்லோரும் காதற் கதை என்றுதான் எண்ணினார்கள். ஆமாம், காதற்கதைதான் ஆனால் பெண் மீது கொண்ட காதலல்ல, அது மண்மீது கொண்ட காதல் கதை.