நண்பர்களுக்கு! எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி சனிக்கிழமை மாலை அண்மையில் மரணமடைந்த டேவிட் ஐயா, கவிஞர் திருமாவளவன் ஆகியோர் பற்றிய நினைவுப் பகிர்வும் நூல்கள் வெளியீடும் இலண்டனில்…
மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பாடலைப் பேணுவதற்கு மொழி அவசியமாகின்றது. அவர்கள் தங்களது உணர்வுகளையும் தேவைகளையும் மற்றவர்களுக்குப் புரிய வைக்க மொழியைப் பயன்படுத்துகின்றனர். எனவே மொழி ஆளுமையென்பது ஒருவரது இருப்பைத் தக்க வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு குழந்தை வயிற்றில் உள்ள போது கேட்கும் மொழி தாயினது உரையாடல்களேயாகும். பின்னர் அக்குழந்தை தவழ்ந்தும் நடந்தும் வளர்ந்தும் வரும் போது, கேட்டும் பேசியும் படித்தும் தனக்கான ஒரு மொழியில் ஆளுமை பெறுகின்றது.
இவ்வகையில் புலம்பெயர் சூழலில் எமது தாய்மொழிக் கல்வியென நாம் கொள்ளும் தமிழ்மொழி, தாயகத்தில் கற்கப்படுவதற்கும் கற்பிக்கப்படுவதற்கும் உள்ள முறையில் இருந்து முற்றிலும் வேறுபடுகின்றது. ஏனெனில் சுற்றுச் சூழலும் அதன் அமைவியலும், சுற்றமும் உறவுகளும் தருகின்ற அனுபவங்களும் குடும்ப உரையாடல்களும் தமிழ் மொழியாக இருக்கும் சூழலில் உள்ள குழந்தை தான் பேசிப் பழகிய மொழியில் எழுத வாசிக்க தொடங்குவது அதனது சிந்தனையைப் பல்வேறு வழிகளில் தூண்டுவதாக அமையும். ஆனால் புலம் பெயர் சூழலில் வாழ்கின்ற பிள்ளைகள் வீட்டில் தாய் தந்தையுடன் தமிழ் மொழியைப் பேசிக்கொண்டும் தொலைக்காட்சியிலும் வீட்டிற்கு வெளியேயும் வேறொரு மொழியோடு ஊடாடிக் கொண்டும் தமிழ் மொழியை கற்கத் தொடங்குவது சிரமமேயெனினும் பெரும்பாலான பிள்ளைகள் விருப்புடனேயே தமிழைக் கற்கத் தமிழ்ப்பாடசாலகளுக்கு வருகின்றனர்.
பிரித்தானியாவைப் பொறுத்தவரை ஈழத்தமிழர்களின் வருகையும் தொடர்பாடலும் கீழைத்தேச நாடுகளில் ஆங்கிலேய ஆட்சி இருந்த காலத்தில் இருந்தே இடம்பெற்றுள்ளது. இலங்கையில் பணியாற்றச் செல்பவர்களுக்கு தமிழ் மொழி கற்பிக்கும் வண்ணம் தனியார் வகுப்புகள் இடம் பெற்றுள்ளதாக Aberdeen Press and Journal பத்திரிகை தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளதாக மு.நித்தியானந்தன் தனது கூலித் தமிழ் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். ( தமிழ் போதிக்கப்படும்! கிழக்கு நாடுகளை நோக்கிச் செல்பவர்களுக்கான பயிற்சி! அபர்டீன் வகுப்பு தயார்!)
ஆனால் அக்காலத்தில் ஈழத்தில் இருந்து பிரித்தானையாவிற்கு வந்த தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழைக் கற்பித்துக் கொடுப்பதைக் காட்டிலும் ஆங்கில மொழிக் கல்வியைப் போதித்து ஆங்கிலச்சமுகத்திலும் தம் உறவுகளுடனும் தமக்கான மதிப்பைப் பெறுவதிலேயே குறியாக இருந்தனர்.