தொடர்ந்து அதிர்ச்சியான இழப்புச் செய்திகளாகவே வருகின்றன. தமிழ்க்கலை, இலக்கிய உலகில் முக்கிய ஆளுமைகளிலொருவரான திரு.வெங்கட் சாமிநாதன் அவர்கள் மறைந்தாரென்ற செய்தியினை முகநூலில் முகநூல் நண்பர்களிலொருவரும், எழுத்தாளருமான அண்ணா கண்ணன் அவர்கள் பகிர்ந்திருந்தார்.
கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக எழுதி வந்தவர் வெங்கட் சாமிநாதன் அவர்கள். எதையும் வெளிப்படையாக, தர்க்கரீதியாக வெளிப்படுத்தி எழுதும் தன்மை வாய்ந்தது அவர்தம் எழுத்து. அவரது கருத்துகளுடன் முரண்பட்டவர்கள் கூட அவரது பங்களிப்பினை, ஆளுமையினை மதிப்பார்கள்.
அவரது மறைவு பற்றிய செய்தி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மிகுந்த பேரிழப்பே. கடந்த பல வருடங்களாகப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்குத் தன் ஆக்கங்களைத் தொடர்ச்சியாக ‘வெங்கட் சாமிநாதன் பக்கம்’ என்னும் பகுதிக்கு அனுப்பி வந்தவர் வெ.சா. அவர்கள். படைப்புகள் வெளிவரத்தாமதமானால் சிறு பிள்ளைபோல் தாமதத்துக்குக் காரணம் கேட்டு மின்னஞ்சல்களை அனுப்புவார். எப்பொழுதும் படைப்புகளைப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பும்போது ‘நண்பரும் , ஆசிரியருமான கிரிதரனுக்கு’ என்றுதான் விளித்திருப்பார். அவர் என்னைத்தன் நண்பர்களிலொருவராகக் கருதியது அவரது நல்ல மனதினைக்காட்டுகிறது.
ஒரு சமயம் அவர் அனுப்பிய படைப்புகள் சிலவற்றை மின்னஞ்சல் ‘ஸ்பாம் ஃபோல்ட’ருக்குள் போட்டு விட்டது. நானும் கவனிக்கவில்லை. அதுபற்றி அவர் எழுதிய மின்னஞ்சல் எவ்வளவுதூரம் அவர் ‘பதிவுகள்’ இணைய இதழ் மீது அக்கறை வைத்திருக்கின்றார் என்பதைக் காட்டும்.
திரு. வெ.சா. அவர்கள் அண்மையில் மறைந்த கவிஞர் திருமாவளவன் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். திருமாவளவனின் உடல் நிலை பற்றி அவர் எழுதிய மின்னஞ்சல்கள் சிலவற்றையும், பதிவுகள் இதழுக்கு அனுப்பிய படைப்புகள் பற்றிய அவரது மின்னஞ்சல்கள் சிலவற்றையும் ஒரு பதிவுக்காக இப்பதிவின் இறுதியில் தந்துள்ளேன்.