எங்கள் நீர்கொழும்பில் நான் அறிந்தவரையில் இற்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய முதலாவது சைவ உணவகம் கணேசன் கபேதான் நீர்கொழும்பில் வீரகேசரி பத்திரிகையின் முதலாவது ஏஜன்ட். வீரகேசரிக்கு தற்பொழுது 85 வயது. கணேசன் கபே இன்றும் இருக்குமானால் அதன் வயது 75. இந்த கணேசன் கபேயில்தான் ஆளுமையும் ஆற்றலும் நிரம்பப்பெற்ற சாதனைப்பெண்மணி தாமரைச்செல்வியின் முதல் நாவல் – வீரகேசரி பிரசுரம் சுமைகள் எனக்குக் கிடைத்தது. அதனை தாமரைச்செல்வி எழுதியகாலத்தில் அவருக்கு 24 வயதுதான் என்ற தகவல் நண்பர் புலோலியூர் ரத்தினவேலோன் எழுதிய குறிப்பிலிருந்து தெரிகிறது. சுமைகள் நாவலுக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. அதனைப்பின்னர் சொல்கின்றேன்.
1970 களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இடதுசாரிக2ளும் கூட்டணி அமைத்து அரசாங்கம் அமைத்தபொழுது , இந்தியாவிலிருந்து புற்றீசலாக வந்து குவிந்த தரமற்ற வணிக இதழ்கள் மீது கட்டுப்பாடு வந்ததை வீரகேசரி நிறுவனம்தான் தக்கமுறையில் பயன்படுத்திக்கொண்டு வீரகேசரி பிரசுரங்களை வெளியிட்டது. முதலில் திருகோணமலையிலிருந்து எழுதிக்கொண்டிருந்த நா. பாலேஸ்வரியின் பூஜைக்கு வந்த மலர் வெளியானதாக நினைவு. அதனைத்தொடர்ந்து இலங்கையின் முன்னணி எழுத்தாளர்கள் பலரின் நாவல்கள் வீரகேசரி பிரசுரமாக வந்தன. செங்கை ஆழியான், டானியல், பால மனோகரன் (நிலக்கிளி) தெணியான், அருள். சுப்பிரமணியம், செ. கதிர்காமநாதன், வ.அ.இராசரத்தினம், யாழ்நங்கை, செம்பியன் செல்வன், தெளிவத்தை ஜோசப்…. இவ்வாறு சுமார் 60 இற்கும் மேற்பட்ட படைப்பாளிகளின் நாவல்கள் வெளியானது. இந்தியாவிலிருந்து வந்து இலங்கையில் மலையகத்தில் முன்னர் வாழ்ந்த கோகிலம் சுப்பையாவின் தூரத்துப்பச்சை நாவலும் வெளியிடப்பட்டது. இந்த வரிசையில் நான் பார்த்த நாவல் தாமரைச்செல்வி எழுதியிருந்த சுமைகள்.