‘கரமசோவ் சகோதரர்கள்’ தஸ்தயேவ்ஸ்கியின் மிகச்சிறந்த நாவல் மட்டுமல்ல. உலக இலக்கியத்தின் சிறந்த நாவலாகவும் கருதப்படுவது. இதன் தமிழ் மொழிபெயர்ப்பினை ‘நியூ செஞ்சுரி புக்ஸ்’ பதிப்பகமும் (கவிஞர் புவியரசு மொழிபெயர்ப்பிலும்) , காலச்சுவடு பதிப்பகமும் (நேரடியாக ருஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து ‘கரமஸாவ் சகோதரர்கள் என்னும் தலைப்பில்) வெளியிட்டுள்ளன.
நம்மவர்கள் பலர் அவ்வப்போது ஏன் அவரைப்போல் அல்லது இவரைப்போல் எழுத முடியவில்லையே என்று கண்ணீர் வடிப்பதுண்டு. அவர்கள் முதலில் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளை வாசிக்கும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்விதம் வாசித்தால் அவர்கள் ஏன் அவர்கள் குறிப்பிடும் படைப்பாளிகளால் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளைப்போன்ற படைப்புகளை வழங்க முடியவில்லை என்பது புரிந்து நிச்சயம் கண்ணீர் விடுவார்கள்.
மானுட வாழ்வின் இருப்பை, இருப்பின சவால்களை, இருப்பின் இன்பதுன்பங்களை, இருப்பின் நன்மைக்கும் தீமைக்குமிடையிலான மோதல்களை, இருப்பின் நோக்கம் பற்றிய தேடலை தஸ்தயேவ்ஸ்கி எழுதியதுபோல் வேறு யாருமே இதுவரையில் எழுதவில்லை என்பது இதுவரையிலான என் வாசிப்பின் அடிப்படையில் எழுந்த கருத்து. தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளின் ஒவ்வொரு பக்கத்தையும் ஒதுக்கித்தள்ள முடியாது. அது அவரது எழுத்தின், சிந்தனையின் சிறப்பு.
வக்கிரமான உணர்வுகளும், காமமும் மிகுந்த ஒரு பணக்காரத்தந்தை, அவரது மூன்று வகைக்குணவியல்புகளுள்ள மூன்று புத்திரர்கள், அவருக்கும் பிச்சைக்காரியொருத்திக்குமிடையில் முறை தவறிப்பிறந்ததாகக் கருதப்படும் இன்னுமொரு புத்திரன், அவரது வேலைக்காரன், மூன்று புத்திரர்கள் வாழ்விலும் புகுந்துவிட்ட பெண்மணிகள், அந்தப்பெண்மணியிலொருத்திக்கும் மூத்த புத்திரனுக்கும், தந்தைக்குமிடையிலுமான காதல், காம உணர்வுகள், மேலுமிரு சகோதரர்களுக்குமிடையில் வரும் இன்னுமொரு பெண்மணி , ஒரு துறவி என வரும் முக்கியமான பாத்திரங்களை உள்ளடக்கிப் பின்னப்பட்டிருக்கும் மகாநாவல் கரமசோவ் சகோதரர்கள்.
நாவலின் பின்பகுதியில் வரும் தந்தையின் மரணமும் , சந்தர்ப்பசூழ்நிலைகளால் மூத்தமகன் குற்றஞ்சாட்டப்படுவதும், உண்மையில் அக்கொலையின் சூத்திரதாரியான முறைதவறிப்பிறந்த புத்திரன் தற்கொலை செய்வதும், இருந்தும் நீதிமன்றத்தால் மூத்தவன் தண்டிக்கப்படுவதும், அது பற்றி நிகழும் நீதிமன்ற வாதிப்பிரதிவாதங்களும் வாசித்து அனுபவித்து மகிழ வேண்டியவை.