1. விடைதேடி கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு!
கிழக்கிலங்கையின் தெற்கே அமைந்துள்ள தம்பிலுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி. ஜெகதீஸ்வரி நாதனின் கன்னிக் கவிதைத் தொகுதியே விடைதேடி எனும் கவிதை நூலாகும். 100 பக்கங்களில் அமைந்துள்ள இந்தக் கவிதை நூலில் 75 கவிதைகள் இடம்பிடித்துள்ளன. இக்கவிதைகள் தாயன்பு, தமிழின் சிறப்பு, ஆடவரின் அடக்குமுறை, இனத்துன்புறுத்தல்கள், வன்னிப் போரின் கொடூரம், கடமையுணர்வு, ஆசிரியரின் பெருமை, வாழ்வியல் தரிசனங்கள், மனித நடத்தைக் கோலங்கள், சிறுவர் துஷ்பிரயோகம், காணாமல் போனோர் ஆகிய கருப்பொருட்களில் அமைந்துள்ளன.
தனது 12 ஆவது வயதில் எழுதத் தொடங்கிய இவர் தம்பிலுவில் ஜெகா என்ற புனைப்பெயரிலேயே அதிகம் எழுதியுள்ளார். எண்பதுகளில் எழுதத் தொடங்கிய இவர் அன்று தொடக்கம் இன்று வரை மரபுக் கவிதை வடிவங்களிலும், புதுக் கவிதை வடிவங்களிலும் தனது கவிதைகளை எழுதி வருகின்றார். இன்னும் விடியவில்லை, கண்ணாடி முகங்கள், கவிதைகள் பேசட்டும் ஆகிய நூல்களிலும் இவரது கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. 1990 இல் கலைப்பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்ற இவர், தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களுக்கு தமிழ்ப் பாடத்தை கற்பிப்பவர் என்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.
இனத்தின் விடியலுக்காய் இன்னுயிர்த் துணை இழந்து மனதில் உறுதியுடன் சுமைதாங்கும் மாதருக்கு இந்த நூலைச் சமர்ப்பணம் செய்து ஆறுதலடைகிறார் நூலாசிரியர். இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பேராசிரியர் செ. யோகராசா அவர்கள் தனது உரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“மரபுக் கவிதை வடிவங்களில் கவிதை எழுதுவோர் பெருகிய முன்னைய காலங்களில் கூட, கவிஞைகள் அவற்றைப் பின்பற்றி எழுதுவது அரிதாகவே இருந்தது. எழுபதுகளில் புதுக் கவிதை வடிவம் முக்கியம் பெற ஆரம்பித்தபோதுதான் கவிஞைகளும் கவிதை உலகில் பிரவேசிக்கத் தொடங்கினர். எனினும் எண்பதுகளில் கவிதை எழுதத் தொடங்கிய ஜெகா அன்று முதல் இன்று வரை மரபுக் கவிதை வடிவங்களை எழுதுகின்றார். அதேவேளை புதுக்கவிதை வடிவத்தையும் கையாளும் திறன் இவரிடம் சிறப்பாக மிளிருகின்றது. இவ்வாறு மரபுக் கவிதை, புதுக் கவிதை எனும் இருவெறு வடிவங்களையும் கையாளும் ஆற்றல் கிழக்கிலங்கைக் கவிஞைகளான மண்டூர் அசோகா முதலான ஓரிருவரையே குறிப்பிடலாம். இப்பட்டியலில் தம்பிலுவில் ஜெகாவின் பெயரும் இணைந்துகொண்டமை எனக்கு மகிழ்வைத் தருகிறது” என்கிறார்.