ஈழத்துப்பெண் எழுத்தாளர்களில் தாமரைச்செல்வியின் கதைகளுக்கு முக்கிமானதோரிடமுண்டு. அந்த இடத்துக்கு முக்கிய காரணங்களிலொன்று இவர் தான் வாழ்ந்த காலகட்டத்து சமூக, அரசியல் பின்புலத்தில் தன் கதைகளைப்புனைந்திருப்பதுதான். இவரது கதைகள் பலவற்றில் தொண்ணூறுகளில் ஏற்பட்ட ஈழத்துத்தமிழ் மக்களின் இடப்பெயர்வுகள், நிலவிய போர்க்காலச்சூழல் மற்றும் இயற்கை அழிவுகள் அதிக அளவில் விபரிக்கப்படுகின்றன. இவரது கதைகள் பொதுவாக பரந்தன், கிளிநொச்சி மட்டும் வன்னிபிரதேசத்தை மையமாக வைத்துப்பின்னப்பட்டவை. போர்ச்சூழல் மக்களுக்கு, பல்வேறு வயதினருக்கும் ஏற்படுத்திய பாதிப்புகள், குறிப்பாக உளவியற் பாதிப்புகள் பற்றியெல்லாம் வெளிப்படுத்துபவை. அதே சமயம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்து , ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துத் தமிழ் மக்களின் இருப்பினை, அவர்கள காலகட்டத்துச் சமூக, அரசியற் சூழல் ஏற்படுத்திய பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஆவணங்களாகவும் இவரது படைப்புகள் இருக்கின்றனவென்றும் கூறலாம்.
அண்மையில் என் சேகரிப்பிலிருந்த புத்தகங்கள் மத்தியில் தேடிக்கொண்டிருந்தபொழுது இவரது ‘வீதியெல்லாம் தோரணங்கள்’ குறுநாவல் மற்றும் ‘வன்னியாச்சி’ (சிறுகதைத்தொகுப்பு) ஆகியவை மீள அகப்பட்டன. அவற்றை வாசித்தபொழுதே மேற்படி எண்ணங்கள் முகிழ்த்தன. மேற்படி ‘வீதியெல்லாம் தோரணங்கள்’ குறுநாவல் வீரகேசரி நிறுவனம் யாழ் இலக்கிய வட்டத்துடன் இணைந்து நடாத்திய கனகசெந்திநாதன் குறுநாவல் போட்டியில் இரண்டாவது இடத்தைப்பெற்ற குறுநாவல்.
இந்தக் குறுநாவல் கூறும் கதை இதுதான்: வெளிநாட்டில் வாழும் தமிழ் இளைஞனொருவனுக்கு ஊரில் தாயார் சீதனத்துடன் திருமணம் பேசுகின்றார். இரு குடும்பத்தாரும் சம்மதிக்கின்றார்கள். மணப்பெண்ணின் சகோதரன் வெளிநாட்டு இளைஞனின் நண்பன் கூட. யாழ்நகரில் நடைபெற்ற இராணுவத்தாக்குதலொன்றில் அந்த நண்பன் இறந்து விடுகின்றான். அவன் இறந்ததால் இனி யாரும் அந்த மணப்பெண்ணுக்குரிய சீதனத்தைத்தரமாட்டார்கள் என்பதால் வெளிநாட்டு இளைஞனின் தாயார் அந்தத்திருமணத்தை நிறுத்திவிடத்திட்டமிடுகின்றார். இன்னுமொரு காரணமும் உண்டு. படையினரின் தேடுதல்கள் அந்த மணப்பெண்ணிருந்த பகுதியில் நடைபெற்றதால் அந்த மணப்பெண்ணுக்கு என்னவெல்லாமோ நடந்திருக்கலாம் என்று வேறு சந்தேகத்தைக்கிளப்பி விடுகின்றாள் அந்தத்தாயார். ஆனால் ஊர் திரும்பும் வெளிநாட்டு இளைஞனோ இவ்விதமான சூழலில்தான் நண்பனின் குடும்பத்துக்குக் கை கொடுக்க வேண்டுமென்று கைவிடக்கூறிய தாயாரிடம் கூறிவிட்டு, நண்பனின் வீடு செல்வதுடன் குறுநாவல் முடிவடைகின்றது.