சமூகம் இயல் பதிப்பகம்’ வெளியீடாக வெளிவந்திருக்கிறது ‘அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன்’ என்னும் காந்தியம் அமைப்பின் ஸ்தாபகரானடேவிட் ஐயா அவர்கள் பற்றிய இச்சிறு நூல். பதிப்பாளர்…
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டுக்கான (2015 – 2016) முதலாவது ஆலோசனைக்கூட்டமும் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 05-12-2015 ஆம் திகதி சனிக்கிழமை மாலை…
– அண்மையில் மறைந்த கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் ‘நினைவுகளின் சுவட்டில்..’ முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் ‘பதிவுகள்’ இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் ‘பதிவுகள்’ இதழில் மீள்பிரசுரமாகும். – பதிவுகள் –
என் மிகப் பழைய ஆரம்ப ஞாபகங்கள் சில அடிமனதில் பதிவானவை அவ்வப்போது மேலெழுந்து நினைவில் நிழலாடிச் செல்லும். இப்போது அவற்றை எழுத்தில் பதியத் தோன்றுகிறது. அப்போது எனக்கு இரண்டரை அல்லது மூன்று வயதிருக்கலாம். அந்த வீட்டில் பாட்டியை நன்கு நினைவிருக்கிறது. மாமாவையும் நன்கு நினைவிருக்கிறது. கொல்லைப்புறம் இருக்கும் கிணற்றிலிருந்துதான் தண்ணீர் எடுத்து வரவேண்டும். பாட்டி குடத்துடன் கிணற்றுக்குச் செல்வாள். குடத்தில் தண்ணீர் நிரப்பி இடுப்பில் வைத்துக் கொண்டு திரும்பும் போது நான் பாட்டியை முந்திக்கொண்டு வீட்டுக்கு ஒடுவேன். இது ஒரு நினைவோட்டம்.
பின் மங்கலாக மனத்தில் திரையோடும் ஒரு துண்டுக் காட்சி. குரங்கு ஒன்று என்னைத் துரத்துகிறது. ஒரு பெரிய உயர்ந்த மண்டபத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு என்னை மிரட்டுகிறது. வெகு வருடங்களாக இந்த மாதிரி ஒரு காட்சி என்னில் அவ்வப்போது திரையோடினாலும், அந்த மாதிரி ஓரிடத்தில் நான் இருந்ததாகவே நினைவில் இல்லை. என்னவோ என் மனதுக்குள் கற்பனை செய்து கொண்டிருக்கிறேனோ என்று நினைத்துக்கொள்வேன். ஆனாலும், அந்த மண்டபம், குரங்கு மிரட்டுவது எல்லாம் அவ்வப்போது, சிறுவயது ஞாபகங்கள் வரும்போது, இக்காட்சியும் உடன் வந்து மறையும். பின் ஒரு முறை பழனிக்குப் போயிருந்தேன், என் சின்ன மாமா பெண்ணின் கல்யாணத்திற்காக. பத்து வருடங்களுக்கு முன். அப்போது தான் நான் பழனிக்கு முதன் முறையாகச் செல்கிறேன். நிலக்கோட்டையிலிருந்து அப்படி ஒன்றும் வெகு தூரத்தில் இல்லை பழனி. அருகில் இருந்த போதிலும், என் மாமா தீவிர முருக பக்தர் என்ற போதிலும், பழனி சென்றதில்லை அது வரை. அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், கல்யாணத்திற்குப் பழனி சென்றவன் கோவிலைப் பார்க்கச் சென்ற போது அடிவாரக் கோயிலின் முகப்பு மண்டபம், என் சிறு வயதிலிருந்து திரையோடிக்கொண்டிருக்கும் மண்டபம் போலவே இருந்தது. சிறு வயதில் குரங்கு என்னைப் பார்த்து மிரட்டியது இங்கு தானோ? ஒரு வேளை மாமா என்னையும் அழைத்துக் கொண்டு பழனி வந்திருப்பாரோ? இருக்கலாம். என்னவோ தெரியவில்லை. ஆனால் அந்த அடிவார முகப்பு மண்டபத்தைப் பார்த்ததும், சட்டென சிறுவயதிலிருந்து இன்று வரை அவ்வப்போது நிழலாடிச் செல்லும் நினைவு, இப்போது கண்முன் பிரத்யட்சமாகியுள்ளது போன்று ஒரு திகைப்பு. எப்படியும் விளக்கவோ, விளங்கிக் கொள்ளவோ முடியாத dejavu -க்கள்.
இலக்கியமும் வாசிப்பும்
பலகாலமாக எழுதி வரும் அல்லது வாசித்து வரும் நண்பர்களிடம் நான் சில குழப்பங்களைக் கவனித்ததுண்டு. ஓர் இலக்கிய வாசிப்பு எப்படி நிகழ்கிறது; அது பொதுவான பிற வாசிப்பிலிருந்து தன்னை எப்படி வேறுபடுத்திக்கொள்கிறது என்ற அடிப்படையான கேள்விக்குப் பதில் இல்லாமலேயே பலகாலமாக தங்கள் வாசிப்புப் பணியை மேற்கொள்வர். ‘ஒரு பிரதியில் உள்ள சொற்றொடர்களை வாசித்தால் புரிகிறது’ எனும் ரீதியில் அவர்கள் பதில்கள் இருக்கும்.
ஒரு நகைச்சுவைத் துணுக்கு:
டாக்டர் : உங்களுக்கு ஆப்ரேஷன் செய்தால்தான் பிழைக்க முடியும்.
நோயாளி : நானா அல்லது நீங்களா டாக்டர்.
இதை வாசித்தவுடன் நமக்குச் சிரிப்புவரக் காரணம் என்ன என்று கொஞ்சம் ஆராய்ந்தாலே அதில் உள்ள இடைவெளிதான் என்பது சட்டெனப் புரியும். ‘எனக்கு அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கப் போகிறீர்கள்’ என்பதுதான் நோயாளியின் பதிலின் சாரம். ஆனால் அந்தப் பதிலில் உள்ள மௌனமாக்கப்பட்ட பகுதிகளில்தான் வாசகரான நாம் நமது கற்பனையைத் திணிக்கிறோம். அதில் பங்கெடுக்கிறோம். நோயாளி பதிலில் உள்ள விமர்சனத்தை நாம் சட்டென சுவீகரித்துக்கொள்கிறோம். ‘அறுவை சிகிச்சை செய்யாமல் கூட நான் உயிர் பிழைக்க முடியும் எனும் சூழல் இருந்தாலும் நீங்கள் பணம் சம்பாதிக்க அதை செய்ய மெனக்கெடுகிறீர்கள்’ என பதில் கொடுத்திருந்தால் நமக்குச் சிரிப்பு வந்திருக்காது. இதை வாசக பங்கேற்பு எனலாம். நகைச்சுவைத் துணுக்கு என்பதே இந்த வாசக பங்கேற்பு நிகழ்ந்தால்தான் வெற்றிப்பெறுகிறது.
ஓர் இலக்கியப் பிரதியும் இந்த வாசகப் பங்கேற்புக்கான இடைவெளியுடன் படைக்கப்படும்போதே அதில் வாசகன் தனது கற்பனையை உபயோகித்து படைப்பு முழுவதும் பயணிக்க இயல்கிறது. ஒரு வாசகனாகிய நான் சொல்லப்படாமல் எனக்கான இடைவெளியைவிட்டு உணர்த்த முயலும் படைப்புகளையே முக்கியமானதாகக் கருதுகிறேன். அந்த இடைவெளிகளில் புகுந்து விரித்தெடுக்கும்போதுதான் நான் அந்தப் படைப்பை எனக்குரியதாக ஆக்கிக்கொள்கிறேன்.
ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம் ஆயுதமயமாகியபோது , களத்தில் பல விடுதலை அமைப்புகள் தமிழீழ விடுதலைப்புலிகள், தமீழீழ மக்கள் விடுதலைக்கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை…
ஜெயமோகனின் குணா கவியழகனின் படைப்புகள் பற்றிய கருத்துகள் பற்றி….,
ஜெயமோகன் அண்மையில் தனது வலைப்பதிவில் குணா கவியழகனின் படைப்புகளைப்பற்றிக் கூறிய கருத்துகளையிட்டுப்பலர் முகநூலில் வாதிட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.ஜெயமோகனுக்குத் தன் கருத்துகளைக்கூறும் முழு உரிமை உண்டு. பேச்சுரிமை, எழுத்துரிமையினை வலியுறுத்தும் அனைவரும் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு படைப்பு எல்லோருக்கும் ஒரே விதமான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதில்லை. ஒருவருக்குப்பிடித்த படைப்புகள் இன்னுமொருவருக்குப் பிடிக்காது. ஜெயமோகனுக்கு சயந்தனின் படைப்புகள் பிடித்திருக்கின்றன. கவியழகனின் படைப்புகள் அவ்விதம் பிடித்திருக்கவில்லை. ஜெயமோகன் போன்றவர்களிடம் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதும், கிடைக்கவில்லையென்றால் கடுமையாக எதிர்வினையாற்றுவதும் ஆரோக்கியமான இலக்கியச் செயற்பாடுகளல்ல. ஜெயமோகன் கவியழகனின் படைப்புகள் ஏன் தன்னைக் கவரவில்லை என்பதற்குக் காரணங்கள் கூறியிருக்கின்றார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாத ஒருவர் கவியழகனின் படைப்புகளை உதாரணங்களாக்கி, ஏன் ஜெயமோகனின் கூற்றுகள் தவறென்று தர்க்கபூர்வமாக வாதிட வேண்டும். இவற்றை எதுவும் செய்யாமல் ஜெயமோகனுக்கு எதிராக வார்த்தைகளை அள்ளிக்கொட்டுவதில் அர்த்தமில்லை. ஜெயமோகனின் கட்டுரையினை நானும் வாசித்தேன். அதன் இணைப்பினைக் கீழே தருகின்றேன். இதனை வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை ஜெயமோகனின் கருத்துகளின் அடிப்படையில் கூறுவீர்களென்றால் விவாதம் மேலும் சிறக்கும்.
விமர்சனங்களை அவை எவ்விதமிருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் ஒருவரின் விமர்சனமென்பது அவர் குறிப்பிடும் படைப்பு பற்றிய முற்று முழுதான உண்மையல்ல. விமர்சனங்கள் எப்பொழுதுமே சார்பானவை. அவரது வாசிப்பு அனுபவம், கலை, இலக்கியம் பற்றிய கருத்தியல் போன்ற காரணங்களுக்காக அவரது விமர்சனம் இன்னுமொருவரிடமிருந்து வேறுபடும். அதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக டிசம்பர் 2015இல் வெளிவரவுள்ள எனது ‘குடிவரவாளன்’ நாவலில் மொத்தம் 27 அத்தியாயங்கள். ‘இன்று புதிதாய்ப்பிறந்தேன்’ என்று முதலாவது அத்தியாயத்தில் ஆரம்பமாகும் நாவல் இறுதி அத்தியாயமான அத்தியாயம் 27இல் ‘இன்று புதிதாய்ப்பிறந்தேன்’ என்று முடிவடையும்.
இந்நாவல் பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது. அகதிகள், சட்டவிரோதக்குடிவரவாளர்கள் பற்றி அமெரிக்காவில் நடைமுறையிலிருக்கும் சட்டங்கள் பற்றி இந்நாவல் கேள்வியினை எழுப்புகின்றது. இவ்விதமாக அமெரிக்க மண்ணில் தம் இருப்பிற்காய்ப் போராடும் குடிவரவாளர்கள் எவ்விதம் அங்கு அவர்கள் நிலை காரணமாகப் பல்வேறு வழிகளிலும் பாதிப்புக்குள்ளாகின்றார்கள் என்பதை இந்நாவல் விபரிக்கின்றது. குறிப்பாக இவ்விதமான குடிவரவாளர்களை எவ்விதம் அவர்களைப் பணியிலமர்த்துவோர் அதிக வேலை வாங்கிப் பிழிந்தெடுக்கின்றார்கள் என்பதை, வேலை வாய்ப்பு முகவர்கள் எவ்விதம் இவ்விதமான தொழிலாளர்களின் நிலையைத்தமக்குச் சாதகமாக்கி வேலை வாய்ப்பென்னும் ஆசை காட்டி, பணத்துக்காக ஏமாற்றுகின்றார்கள் என்பதையெல்லாம் நாவல் விபரிக்கின்றது. இவ்வளவுதூரம் அலைக்கழிக்கும் வாழ்வினைக் கண்டு அஞ்சாது, துவண்டு விடாது இந்நாவலின் நாயகன் எவ்விதம் நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, தன் பயணத்தைத் தொடர்கின்றான் என்பதை நாவல் கூறும். அதே சமயத்தில் இலங்கையின் வரலாற்றில் களங்கமாகவிருக்கும் 1983 ஜூலைக்கலவரத்தை வெளிப்படுத்தும் ஆவணப்பதிவாகவும் இந்நாவல் விளங்குகின்றது.
அவள் அங்கு எப்போது வந்தாள் என்பது யாருக்கும் தெரியாது. எப்படி வந்தாள் என்றும் தெரியாது. தானாகவே வந்தாளா அல்லது யாராவது கொண்டுவந்து சேர்த்துவிட்டார்களா என்பதும் தெரியவில்லை. அவள் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவள், எதற்காக அங்கு வந்து சேர்ந்தாள் என்றுகூட யாரும் அறிய முற்பட்டதில்லை.
அங்கு நிர்மாணிக்கப்படும் அந்தப் பெரிய கட்டடத்தொகுதியை ஒட்டியே அவளது குடிமனை இருந்தது. கட்டுமானத்திற் பணிபுரியும் பல தொழிலாளர்கள் மதியச் சாப்பாட்டிற்காக அங்குதான் வருவார்கள். அவள் முகம் சுளிக்காது எல்லோருக்கும் சமைத்துப் போடுவாள். மதியச் சாப்பாடு மட்டும்தான் அவள் தருகிறாளா அல்லது இரவுப் போசனமும் கொள்ளமுடியுமா என்பதற்கும் சரியான விளக்கம் இல்லை. அதை அவள்; ஒரு சேவையாகக் கருதிச் செய்கிறாளா அல்லது தன் ஜீவனோபாயத்திற்காகவா என்பதும் தெளிவில்லாமலிருந்தது. அதுபற்றி யாரும் அலட்டிக்கொண்டதில்லை. சாப்பாடு கிடைக்கிறது.. அதைவிட நமக்கு வேறு என்ன வேண்டும்?
அந்தக் கட்டுமானப்பணிகள் எப்போது தொடங்கின என்று தெரியவில்லை. அது இனி எப்போது முடிவுறும்; என்பதையும் ஊகிக்கமுடியாதிருந்தது. அங்கு எண்ணற்ற தொகையினர் பணி புரிந்தார்கள். சிலரது பணிக்காலம் முடிந்து விலகிப் போவதும், புதியவர்கள் வந்து சேர்வதும் நடைமுறையிலிருந்தது. வேலையில் ஈடுபட்டிருக்கும்போதே சிலர் இறந்தும்போயிருக்கிறார்கள். இறப்பதற்கு ஒரு காரணமா தேவைப்படுகிறது? விபத்துக்கள் நேரலாம்.. அல்லது கொல்லப்படலாம்.. அதெல்லாம் சகஜமான சங்கதிதானே?
அங்கு இளைஞனொருவன் புதிதாக வந்து சேர்ந்தான். மேற்பார்வையாளனாகவோ பொறியியலாளனாகவோ ஒரு பதவிக்கு நியமனம் பெற்று வந்திருந்தான். பெரிய பதவிக்கு வந்தவன் உயர்மட்ட செல்வாக்கு உள்ளவனாகத்தானிருப்பான் என ஏனையவர்கள் கருதினார்கள். அதனால் அவனுக்குக் கீழ்ப்படிந்து மரியாதை செய்வதற்குத் தங்களுக்குள் போட்டி போட்டார்கள். தன்னை யாரென்று அறியாத அவர்களது செய்கை அவனுக்கு அவர்கள்மீது அனுதாபத்தை ஏற்படுத்தியது.
மன்னார் அமுதனின் ‘அக்குறோணி’ கவிதைத் தொகுதிக்கு நயவுரை வழங்கியோரில் நானும் ஒருவன். அதன் பின்னர் அமுதனின் இந்தக் கவிதைத் தொகுதி உங்கள் கரங்களுக்கு வந்திருக்கிறது. அக்குறோணி கவிதைகளின் போக்கிலிருந்து வித்தியாசப்பட்ட கவிதை சொல்லும் வகையில் இக்கவிதையில் அமைந்திருப்பதை நீங்கள் காண்பீர்கள்.
‘அன்னயாவினும்’ தொகுதியின் ஒரு சில கவிதைகளை மன்னார் அமுதன் அவ்வப்போது முகநூலில் இட்டு வந்த போது படித்திருக்கிறேன், அவரைப் பாராட்டியிருக்கிறேன்.
கவிதையை முழுமையாகத் தருவதில் அமுதன் முழுமையடைந்திருக்கிறார் எனச் சொல்வதில் எனக்குள் குழப்பங்கள் கிடையாது. ஒரு கவிதை தன்னை வெளிப்படுத்திக் கொள்ள எந்தப் பாணியை விரும்புகிறதோ எந்த வார்த்தைகளை விரும்புகிறதோ எந்தச் சொற்களை விரும்புகிறதோ அவை அத்தனையையும் கொண்டதாக அமைவதே முழுமையான கவிதை. இந்த வகையில் ஒரு நல்ல கவிஞனாக அமுதன் முழுமையடைந்து விட்டார் என்று சொல்வேன்.
இந்த முழுமை அவரது வாசிப்பாலும் வயதினாலும் உணர்வினாலும் அனுபவத்தினாலும் மாத்திரம் வந்திருக்கிறது என்பதை ஓரளவுதான் ஏற்றுக் கொள்ள முடியும். அதற்கும் மேலாக கவிதை என்பது என்ன என்ற நிறைவான சிந்தனையும் உணர்வும் புரிதலும்தான் அந்த முழுமைக்குக் காரணம் என்று சொல்ல முடியும்.
தன்னைப் புரிந்து கொள்ள முடியாத மனிதன் எவ்வாறு முழுமை பெறுவதில்லையோ அப்படியேதான் கவிதை என்ற கலை வடிவமும். எல்லாக் கலை வடிவங்களுக்கும் இது பொருந்தும். ஒரு கலை வடிவம் அதன் நேர்த்தியால், வடிவத்தால் அழகும் பொலிவும் பெறுகிறது. அந்த நேர்த்தியையும் அழகையும் கவிதையில் கொண்டு வருவதற்கு கவிதை என்றால் என்ன என்ற ஆழ் உணர்வும் ரசனையும் கவிஞனுக்கு இருக்க வேண்டும். அது மன்னார் அமுதனுக்கு இருக்கிறது.
இந்தத் தொகுதியைப் படிக்க ஆரம்பித்த போது எந்தக் கவிதையில் ஆரம்பித்துப் பேசுவது என்கிற பெரிய சவாலைத்தான் நான் எதிர் கொண்டேன். அவ்வப்போது நான்கு கவிதைகளைப் படிப்பதும் மூடிவைப்பதுமாகக் காலத்தைக் கடத்தியபடியே இருந்தேன்.
இந்தக் கவிதைகள் அனைத்தும் வாழ்க்கையை, அதன் போக்கை, அதன் சவால்களை, அதன் ஆபத்துக்களைத்தான் மொத்தமாகப் பேசுகின்றன. ஆனால் எந்தவொரு பக்கத்துக்கும் சாராமல், வலிந்து இழுக்காமல் , மனம் போன போக்கில் போகாமல் ஒரே நேர் கோட்டில் இவை பயணம் செய்கின்றன. ஒரு இலங்கையனாக, ஒரு சிறுபான்மையினனாக, ஒரு தமிழனாக, ஒரு இலக்கியவாதியாக, ஒரு வடபுலத்தானாகவெல்லாம் இக் கவிதைகளில் தோற்றம் தருகிறார் அமுதன். ஆனால் எந்தப் பக்கமும் தூக்கலாகப் பேசப்படவில்லை என்பது குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஓர் அம்சம்தான்.
ராஜாஜி ராஜகோபாலனின் சிறுகதைத்தொகுப்பான ‘குதிரையில்லாத ராஜகுமாரன்’ படித்தேன். இன்னும் முடிக்கவில்லை. ஆனால் தொகுப்பில் நான் வாசித்த கதைகளின் அடிப்படையில் என் கருத்துகளை இங்கு பதிவு செய்கின்றேன். தொகுப்பினை முழுமையாகப்படித்த பின்னர் என் முழுமையான கருத்துகளைப் பகிர்ந்துகொள்வேன். நான் வாசித்த சிறுகதைகளின் அடிப்படையில் என் கருத்துகளைப் பற்றிப்பின்வருமாறு கூறுவேன்:
நான் வாசித்த கதைகளில் மிகச்சிறந்த சிறுகதைகளாக நான் கருதுவது ‘பத்தியம்’ மற்றும் ‘கடவுளும் கோபாலபிள்ளையும்’ ஆகிய கதைகளைத்தாம். ‘பத்தியம்’ ஆயுர்வேத வைத்தியர் மயில்வாகனம் அவர்களைப்பற்றியது. கதையில் ஒன்றிற்கும் அதிகமான இடங்களில் ஆயுள்வேத வைத்தியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பரியாரியார் அல்லது வைத்தியர் மயில்வாகனம் என்றழைக்கப்படும் ஆயுர்வேத வைத்தியரின் இன்றைய நிலை ‘மேனாட்டு’ வைத்திய முறையின் காரணமாகப்பாதிக்கப்பட்ட நிலையில் , வறுமையில் அவர் வாடுகின்றார். அவ்விதம் வாடும் நிலையில், அவரிடம் அவரது ஊரைச்சேர்ந்த இரு இளைஞர்கள் வருகின்றார்கள். எதற்கு? கொழும்பில் வேலை பார்க்கும் அவர்கள் , விடுமுறைக்காக ஊருக்கு வருகின்றார்கள். வந்தவர்கள் விடுமுறைக்காலத்தைச்சிறிதி நீட்டி விட்டார்கள். அதற்குக்காரணத்தைக்கூற வேண்டுமே? அதற்காக ஆயுர்வேத வைத்தியரிடம் ஒரு ‘மெடிக்கல் ரிபோர்ட்’ காசு கொடுத்து வாங்க வருகின்றார்கள். ஆனால் அவர்களோ தமது நோய்களுக்காக ஆங்கில வைத்தியத்தை நாடுபவர்கள் என்பதை அறிந்ததும் மயில்வாகனத்தார் ‘ சேர்ட்டிபிக்கட்டை நம்பி வந்தால் போதுமோ? வைத்தியத்தை நம்பியல்லோ வரவேணும்” என்கின்றார். அதற்கு அவர்கள் காசு எவ்வளவென்றாலும் தரத்தயார் என்கின்றார்கள். அதற்கு அவரோ “அது எனக்குத்தேவையில்லை. நான் வைத்தியத்துக்கு மாத்திரம் காசு வாங்குவன். போட்டு வாருங்கோ” என்று கூறி அனுப்பி விடுகின்றார். ஒரு சிறுகதைக்குரிய அம்சங்களுடன் , நவீனத்தொழில் நுட்பம் எவ்விதம் பாரம்பரியத்தொழில் நுட்பத்தினைப் பாதிக்கின்றது என்பதை எடுத்தியம்பும் ‘பத்தியம்’ அதே சமயம் வைத்தியர் மயில்வாகனத்தாரின் தன் தொழில் மீதான பக்தியினையும், கொள்கைப்பிடிப்பினையும் எடுத்துக்காட்டுகிறது. வறுமைப்பிடியில் வாடும் சமயத்தில் கூட அவர் பணத்துக்காகத் தன் னை விற்றுவிடவில்லை. கதை ‘டாக்டர் மயில்வாகனம் புரண்டு படுத்தார்’ என்று ஆரம்பமாகின்றது. ஆயுர்வேத வைத்தியரான, பரியாரியான மயில்வாகனத்தாரை வைத்தியர் மயில்வாகனத்தார் புரண்டு படுத்தார் என்று ஆரம்பித்திருக்கலாமென்று தோன்றியது. ஆங்கில வைத்திய முறையினை எதிர்ப்பவர் அவர். அவரை அறிமுகப்படுத்தும்போது ஆங்கிலத்தைத்தவிர்த்திருக்கலாமே.