இலக்கியமும் வாசிப்பும்
பலகாலமாக எழுதி வரும் அல்லது வாசித்து வரும் நண்பர்களிடம் நான் சில குழப்பங்களைக் கவனித்ததுண்டு. ஓர் இலக்கிய வாசிப்பு எப்படி நிகழ்கிறது; அது பொதுவான பிற வாசிப்பிலிருந்து தன்னை எப்படி வேறுபடுத்திக்கொள்கிறது என்ற அடிப்படையான கேள்விக்குப் பதில் இல்லாமலேயே பலகாலமாக தங்கள் வாசிப்புப் பணியை மேற்கொள்வர். ‘ஒரு பிரதியில் உள்ள சொற்றொடர்களை வாசித்தால் புரிகிறது’ எனும் ரீதியில் அவர்கள் பதில்கள் இருக்கும்.
ஒரு நகைச்சுவைத் துணுக்கு:
டாக்டர் : உங்களுக்கு ஆப்ரேஷன் செய்தால்தான் பிழைக்க முடியும்.
நோயாளி : நானா அல்லது நீங்களா டாக்டர்.
இதை வாசித்தவுடன் நமக்குச் சிரிப்புவரக் காரணம் என்ன என்று கொஞ்சம் ஆராய்ந்தாலே அதில் உள்ள இடைவெளிதான் என்பது சட்டெனப் புரியும். ‘எனக்கு அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கப் போகிறீர்கள்’ என்பதுதான் நோயாளியின் பதிலின் சாரம். ஆனால் அந்தப் பதிலில் உள்ள மௌனமாக்கப்பட்ட பகுதிகளில்தான் வாசகரான நாம் நமது கற்பனையைத் திணிக்கிறோம். அதில் பங்கெடுக்கிறோம். நோயாளி பதிலில் உள்ள விமர்சனத்தை நாம் சட்டென சுவீகரித்துக்கொள்கிறோம். ‘அறுவை சிகிச்சை செய்யாமல் கூட நான் உயிர் பிழைக்க முடியும் எனும் சூழல் இருந்தாலும் நீங்கள் பணம் சம்பாதிக்க அதை செய்ய மெனக்கெடுகிறீர்கள்’ என பதில் கொடுத்திருந்தால் நமக்குச் சிரிப்பு வந்திருக்காது. இதை வாசக பங்கேற்பு எனலாம். நகைச்சுவைத் துணுக்கு என்பதே இந்த வாசக பங்கேற்பு நிகழ்ந்தால்தான் வெற்றிப்பெறுகிறது.
ஓர் இலக்கியப் பிரதியும் இந்த வாசகப் பங்கேற்புக்கான இடைவெளியுடன் படைக்கப்படும்போதே அதில் வாசகன் தனது கற்பனையை உபயோகித்து படைப்பு முழுவதும் பயணிக்க இயல்கிறது. ஒரு வாசகனாகிய நான் சொல்லப்படாமல் எனக்கான இடைவெளியைவிட்டு உணர்த்த முயலும் படைப்புகளையே முக்கியமானதாகக் கருதுகிறேன். அந்த இடைவெளிகளில் புகுந்து விரித்தெடுக்கும்போதுதான் நான் அந்தப் படைப்பை எனக்குரியதாக ஆக்கிக்கொள்கிறேன்.