அறிமுகம்
சங்ககாலத்தில் எழுந்த எட்டுத்தொகை பத்துப்பாட்டில் ஆற்றுப்படை இலக்கியங்கள் தனித்துவமானவை. ஒருவன் தான் பெற்ற செல்வத்தை தன்னோடு சார்ந்தவர்களும் பெறவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு வழிப்படுத்தும் பண்பினை ஆற்றுப்படை இலக்கியங்கள் கொண்டிருக்கின்றன. இக்காலத்தில் தோற்றம்பெற்ற ஆற்றுப்படை நூல்களாகிய பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை ஆகியவற்றுக்கு கடவுள் வாழ்த்தாகக் கொள்ளக்கூடியதாகத் திருமுருகாற்றுப்படை அமைந்திருக்கிறது.
ஆற்றுப்படை என்பது ‘ஆற்றுப்படுத்தல்’ எனப் பொருள்படும். ‘ஆறு’ என்பது வழி; ‘படுத்தல்’ என்பது செலுத்துவது; அதாவது ஒருவர் செல்லவேண்டிய வழியைத் தெரிவித்தலாகும்.
“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்;
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்” 1
என்று தொல்காப்பிய புறத்திணையியலில் ஆற்றுப்படையின் இலக்கணம் சொல்லப்படுகிறது. ஒரு புரவலனிடம் சென்று பரிசில் பெற்ற பொருநர், பாணர், விறலியர், கூத்தர், புலவர் ஆகியோருள் ஒருவர்; பரிசில் பெறவிழைகின்ற ஒருவருக்குத் தாம் பெற்ற பெருவளத்தைக் கூறி அப்பொருள் நல்கியவரிடத்தே செல்லவேண்டிய வழி வகைகளையும் அவரின் பெருமைகளையும் எடுத்துக்கூறி வழிப்படுத்துவதாகும். இவ்வகையில் மேலே கூறப்பட்ட ஆற்றுப்படை நூல்களில் திருமுருகாற்றுப்படை தவிர்ந்த ஏனைய நான்கு ஆற்றுப்படை நூல்களும் பொருளை வேண்டி ஆற்றுப்படுத்தப்படுபவரின் பெயரோடு சார்ந்து அமைந்துள்ளன. ஆனால் திருமுருகாற்றுப்படை இறைவனிடம் அருளை வேண்டி ஆற்றுப்படுத்துவதாகவும் முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டமைந்ததாகவும் அமைந்துள்ளது. இந்த வேறுபாடு திருமுருகாற்றுப்படையை ஏனைய ஆற்றுப்படை இலக்கியங்களில் இருந்து தனித்துவமானதாக எடுத்துக்காட்டுகிறது.
திருமுருகாற்றுப்படை
முருகு எனவும் புலவராற்றுப்படை எனவும் அழைக்கப்படும் திருமுருகாற்றுப்படை 317 அடிகளைக் கொண்டது. இதனை இயற்றியவர் மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைமைப் புலவரான நக்கீரர் ஆவார். திருமுருகாற்றுப்படை என்பது திரு – முருகு – ஆற்றுப்படை என அமையும். திரு என்றால் அழகிய, முருகு என்பது முருகன், ஆற்றுப்படை என்பது வழிப்படுத்துவது. அதாவது அழகிய முருகனிடம் செல்வதற்கு ஆற்றுப்படுத்துவது எனப் பொருள்படும். “வீடு பெறுவதற்குச் சமைந்தானோர் இரவலனை வீடு பெற்றான் ஒருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்துவது” 2 என்று திருமுருகாற்றுப்படைக்குப் பொருள் கூறுவார் நச்சினார்க்கினியர். “திருமுருகாற்றுப்படை யென்பதற்கு முத்தியைப் பெற்றானொருவன் பெறுவதற்குப் பக்குவனாகிய ஓரிரவலனைப் பெறும்பொருட்டு ஸ்ரீசுப்பிரமண்ணியசுவாமி யிடத்தே வழிப்படுத்தலையுடைய பிரபந்தமெனப் பொருள் கூறுக” 3 என்று ஆறுமுகநாவலர் குறிப்பிடுவார்.