நேர்காணல் பகுதி 2 : தேவகாந்தன்!

எழுத்தாளர் தேவகாந்தன்பதிவுகள்: இலங்கைத்தமிழ் இலக்கியத்தை பலவகை எழுத்துகள் பாதித்துள்ளன. தமிழகத்தின் வெகுசனப் படைப்புகள் , மணிக்கொடிப்படைப்புகள், மார்க்சிய இலக்கியம், மேனாட்டு இலக்கியம் எனப்பல்வகை எழுத்துகள் பாதித்தன. இலங்கையைப்பொறுத்தவரையில் மார்க்சியவாதிகள் இரு கூடாரங்களில் (சீன சார்பு மற்றும் ருஷ்ய சார்பு) ஒதுங்கிக்கொண்டு இலக்கியம் படைத்தார்கள். மார்க்சிய இலக்கியத்தின் தாக்கத்தினால் இலங்கைத்தமிழ் இலக்கியம் முற்போக்கிலக்கியம் என்னும் தத்துவம் சார்ந்த, போராட்டக்குணம் மிக்க இலக்கியமாக ஒரு காலத்தில் கோலோச்சியது. அதே சமயம் எஸ்.பொ.வின் நற்போக்கிலக்கியம், மு.தளையசிங்கத்தின் யதார்த்தவாதம், தமிழ்த்தேசியத்தை மையப்படுத்திய இலக்கியம் எனப்பிற பிரிவுகளும் தோன்றின. இவை பற்றிய உங்களது கருத்துகளை அறிய ஆவலாகவுள்ளோம். இவை தவிர வேறு தாக்கங்களும் இலங்கைத்தமிழ் இலக்கியத்தைப்பொறுத்தவரையிலுள்ளதாகக் கருதுகின்றீர்களா?

தேவகாந்தன்: சோவியத் நூல்கள் மட்டுமில்லை. வங்கம், மராத்தி  முலிய மொழிகளின்  எழுத்துக்களும் இலங்கை எழுத்துக்களைப் பாதித்தன. இது அதிகமாகவும் முற்போக்குத் தமிழிலக்கியத்தின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவே இருந்தது.  இவ்வகையான மொழியாக்கங்களால்  விளைவுகள் ஏற்பட்டுக்கொண்டு இருந்தபொழுது, ஆங்கிலத்திலிருந்தும் பல நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பாகின. அ.ந.கந்தசாமி போன்றோர் இலங்கையிலேயே  இது குறித்து பல்வேறு முயற்சிகளையும் செய்தனர். அது முற்போக்குக்கு வெளியே இலக்கியத்தை இலக்கியமாகப் பார்க்கும் கருதுகோளை உருவாக்கியது. தமிழ்நாட்டில் எவ்வாறு மார்க்சிய  எழுத்துக்கு அப்பால் ஒரு இலக்கியம் உருவாக இவ்வகையான மொழிபெயர்ப்புக்கள் வழிவகுத்தனவோ, அதுபோலவே இலங்கையிலும் உருவாகிற்று. ‘அலை’ இலக்கிய வட்டம் அப்படியானது.  ‘மெய்யுள்’ மற்றும் ‘நற்போக்கு’ போன்றனவும் அப்படியானவையே. ‘மெய்யுள் மேற்கத்திய புதிய கருத்தியல்களின் பாதிப்பினைக் கொண்டிருந்தவேளையில், நற்போக்கு இலக்கியம் அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு முற்போக்கு இலக்கியத்துக்கான எதிர்நிலைகளிலிருந்து, தனிநபர்களின் நடத்தையிலிருந்த நேர்மையீனங்களை எதிர்ப்பதிலிருந்து பிறந்திருந்தது. அதேவேளை அய்ம்பதுகளில் ‘சுதந்திரன்’ பத்திரிகையை மய்யமாகக் கொண்டு தமிழ்த் தேசியம் சார்ந்தும் எழுத்துக்கள் பிறந்ததையும்  சொல்லவேண்டும். இது தமிழ்நாட்டில் வளர்ந்துகொண்டிருந்த திராவிட இலக்கியத்தின் பாதிப்பிலிருந்தும், தன் சொந்த அரசியல் நிலையிலிருந்தும் தோன்றுதல் கூடிற்று.

Continue Reading →