நிகழ்வு: வ.ந.கிரிதரனின் “குடிவரவாளன்” நூல் அறிமுக நிகழ்வு!

 

உயில் மற்றும் சித்தம் அழகியார் ஏற்பாட்டில் வ.ந.கிரிதரன் எழுதிய “குடிவரவாளன்” என்ற நாவலின் அறிமுக நிகழ்வு 15.05.2016 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு இடம்பெற்றது. நிகழ்வுக்கு குப்பிழான் ஐ.சண்முகன் தலைமை வகித்தார். அறிமுகவுரையை சு. குணேஸ்வரனும் நூல் தொடர்பான உரையை வேல் நந்தகுமார், ஜி.ரி கேதாரநாதன் ஆகியோர்  நிகழ்த்தினர். நன்றியுரையை சித்திராதரன் நிகழ்த்தினார்

–  இன்று , மே 15, 2016, பருத்தித்துறை ஞானாலயத்தில் வ.ந.கிரிதரனின் ‘குடிவரவாளன்’ நாவலின் அறிமுக நிகழ்வும், கலந்துரையாடலும் நடைபெற்றது. அதனை மருத்துவர் திரு. எம்.கே.முருகானந்தன் தனது வலைப்பதிவில் பதிவு செய்திருந்தார் ( http://suvaithacinema.blogspot.ca/?view=classic ).  அதனைப் ‘பதிவுகள்’ வாசகர்களுக்காக இங்கு பிரசுரிக்கின்றோம். –  பதிவுகள் –


பதிவுகள் இணைய இதழ் ஆசிரியர் வ.ந.கிரிதரன் அவர்களது புதிய நூலான குடிவரவாளன் நாவலுக்கான அறிமுக நிகழ்வு இன்று ஞாயிறு மாலை (15.05.2016) பருத்தித்துறை ஞானாலயத்தில் நடைபெற்றது. நீண்ட கடும் வெக்கையின் பின்னரான மழை காரணமாக 3.30 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய கூட்டம் சற்று தாமதமாகவே ஆரம்பித்தது.

குப்பிளான் சண்முகம் அவர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். மௌன அஞ்சலியின் பின் கூட்டம் ஆரம்பமானபோது திரு.சு.குணேஸ்வரன் நூல் அறிமுகவுரையை நிகழ்த்தினார்.

Continue Reading →

ஆய்வு: தலைவன் தலைவியர் உடன்போக்குக் காட்டும் சங்ககால இலக்கியங்கள்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

நம் பண்டைத்தமிழ்ச் சான்றோர்கள் தம் வாழ்வியலை அகம், புறம் என இரு கூறாக வகுத்து அமைத்தனர். புறம் புறவாழ்வில் மேற்கொள்ளும் இனப்பற்று, நாட்டுப்பற்று, மொழிப்பற்று, அறநெறிப்பற்று, ஆண்மை, போரியல் மரபு ஆகியவை இப் புறத்தில் அடங்கும். அகம் அக வாழ்வில் தமிழர்கள் அன்போடும், பண்போடும், அறநெறியோடும் வாழ்ந்ததன் சீரினைக் கூறுகின்றது. இங்குள்ள குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் ஆகிய ஐவகை நிலங்களிலும் தலைவன், தலைவியர் உலாவலம் வந்து அவர்தம் உள்ளத்தில் எழும் உணர்வெழுச்சிகளிற் பங்கேற்றுப் பரவசமடைவர். இதைத் தொல்காப்பியச் சூத்திரத்தில் காண்போம்.

‘புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே.’  ——- (பொருள். 16)

இவ்வண்ணம் அவர்கள் குறிஞ்சியில் புணர்தலும், பாலையில் பிரிதலும், முல்லையில் இருத்தலும், நெய்தலில் இரங்கலும், மருதத்தில் ஊடலும் ஆகிய வேறுபட்ட உணர்வுகளோடு வாழ்வியலை நடாத்தி வெற்றியும் கண்டுள்ளனர். தலைவன் தலைவியர் காதலித்துக் களவொழுக்கத்தில் நின்று, ‘பகற்குறி’, ‘இரவுக்குறி’ அமைத்துக் கூடுவர். இதை அறிந்த இரு பக்கப் பெற்றோரும் அவர்களுக்குக் கரணத்தொடு கூடிய திருமணம் செய்து வைப்பர். ஆனால் சில பெற்றோர் தம் பிள்ளைகள் மேற்கொண்ட காதலை ஏற்க மாட்டார். எனவே தலைவன் தலைவியர் ஒன்றிணைந்து தனிவழி சென்ற பொழுதும; கொடுத்தற்குரிய தலைவியின் தமர் இல்லாதவிடத்தும், சடங்கோடுகூடிய மணநிகழ்வு நடைபெறுதலும் உண்டாம். இங்குதான் கரணத்தின் சிறப்பைக் காண்கின்றோம்.

‘கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்துடன் போகிய காலை யான.’ – (பொருள். 141)

இனி, தலைவன் தலைவியர் பாலைவழி தனித்து உடன்போக்கில் சென்ற காட்சிகளைச் சங்ககால இலக்கியங்கள் காட்டும் பாங்கினையும் காண்போம்.

Continue Reading →

நினைவுகளின் தடத்தில் (6 & 7)!

- வெங்கட் சாமிநாதன் -– அண்மையில் மறைந்த கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் ‘நினைவுகளின் சுவட்டில்..’ முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை ‘பதிவுகள்’ இணைய இதழில் (பழைய வடிவமைப்பில்) வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் ‘பதிவுகள்’ இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் ‘பதிவுகள்‘ இதழின் புதிய வடிவமைப்பில் மீள்பிரசுரமாகும். – பதிவுகள் –


நினைவுகளின் தடத்தில் (6)!’

சந்தோஷம் யாருக்கு என்ன காரணங்களால் கிடைக்கிறது என்று அவ்வளவு சுலபமாக சொல்லி விடமுடிகிறதில்லை. நேற்று ஒரு ·ப்ரென்சு படம் பார்த்தேன். தான் செய்யாத, ஆனால் தான் இருக்க நடந்து விட்ட ஒரு குற்றத்திற்காக கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் ஒரு தாய் என்னேரமும் வெறிச்சிட்ட முகமாகவே காணப்பட்டாலும் ஒரு சில கணங்களில் அவள் முகத்திலும் புன்னகையைப் பார்க்க முடிகிறது. அவள் வசமாக கை ரேகை சாட்சியத்தோடு சிறையில் அகப்பட்டுக் கிடக்கிறாள். அவள் குற்றமற்றவள் என்று தன்னைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டாலும், அவளுக்கு விடுதலை என்பதே சாத்தியமில்லை. இருப்பினும் அவள் முகம் மலரும் கணங்களும் அவளுக்குக் கிடைத்துவிடுகின்றன. நாம் எல்லோரும் அறிந்த ஒரு அரசியல் தலைவருக்கு எத்தனையோ ஆயிரம் கோடிகள் சொத்து குவிந்து கொண்டே இருக்கிறது. இன்னமும் பணம் எல்லா வழிகளிலும் சொத்து சேர்த்துக்கொண்டே தான் இருக்கிறார். ஆனாலும், அவரைக் கவலைகள் அரித்துக்கொண்டே இருக்கின்றன. அங்கங்கள் ஒவ்வொன்றாக செயல் இழந்து வருகின்றன. திட்டமிடும் மூளையைத் தவிர. காலையில் இரண்டோ மூன்றோ இட்டிலிக்கு மேல் அவரால் சாப்பிட முடிவதில்லை. மான் கறியும் முயல்கறியும் ஆரவாரத்தோடு சாப்பிட்டவர் தான். இருப்பினும், அலுப்பில்லாமல், வெறும் சொத்து சேர்த்துக் கொண்டே போவதில் அவருக்கு சந்தோஷம் கிடைத்து விடுகிறது.

என்னைக் குழந்தைப் பருவத்திலிருந்து 14 வயது வரை வளர்த்துப் படிக்க வைத்த மாமாவை நினைத்துப் பார்க்கிறேன். அந்த வறுமை இப்போது நினைக்கக் கூட பயங்கரமானது. அவருடைய சம்பாத்தியமான 25 ரூபாய் 4 அணா வில் வீட்டு வாடகை ஆறு ரூபாய் போக மீத பணத்தில், நாங்கள் ஆறு பேர் கொண்ட குடும்பத்தை எப்படி சமாளித்தார் என்பதல்ல விஷயம், சமாளிக்க முடிந்ததில்லை. ஆனாலும் அவர் என் அப்பாவுக்கு, “என்னால் முடியவில்லை, பையனை அனுப்புகிறேன்” என்று ஒரு கார்டு போட்டவரில்லை. என்னைப் பார்த்து அலுத்துக் கொண்டவரில்லை. யாரும் எந்த சமயத்திலும் அந்த வீட்டில், நான் ஒரு உபரி ஜீவன் என்று நினைத்ததில்லை; உணர்ந்ததில்லை முதலில்.

Continue Reading →