முன்னுரை
தமிழ்மொழி மிக பழமைவாய்ந்த மொழியாகும். திராவிட மொழிகளில் தலைமையானது தமிழ்மொழி. தமிழ்மொழியில் தோன்றிய இலக்கியங்கள் யாவும் அந்தந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. தமிழில் முதன்மை இலக்கியமாக கருதப்படும் சங்க இலக்கியம் காதலையும் வீரத்தையும் இரண்டு கண்களாக கொண்டு இயற்றப்பட்டுள்ளன. அதற்கு அடுத்த காலக்கட்டத்தில் இயற்றப்பட்ட சங்க மருவிய இலக்கியங்கள் அறகருத்துகளை கூறும் நோக்கில் இற்றப்பட்டுள்ளன. இந்நூல்கள் மனிதனை அறநெறியில் வாழ வலிவகுக்கிறது. இவை பதினெட்டு நூல்களை கொண்டவை. அவற்றுள் அறநூல்கள் பதினொன்றும் அக நூல்கள் ஆறும் புறநூல் ஒன்றும் அமைந்துள்ளன. அறநூல்களில் காணப்படும் தாய்மை குறித்த செய்திகளை ஆராய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சங்க மருவிய இலக்கியத்தில் அற நூல்கள்
திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முதுமொழிக் காஞ்சி, சிறுபஞ்சமூலம், நான்மணிக்கடிகை, திரிகடும், ஏலாதி, ஆசாரக்கோவை என்ற பதினொறு நூல்களும் அறநூல்கள் எனப்படுகின்றன.
தாய்மை – விளக்கம்
தாய்மை என்பதற்கு, செந்தமிழ்ச் சொற்ப்பிறப்பியல் பேரகரமுதலி, ‘அருகுபோல் தழைத்து ஆல்போல் வேரூன்றி, பல்கிப் பெருகி வளவாழ்வு வாழ்வதற்கு மூலமாயுள்ள, முதல்நிதி’1 (396) என்று பொருள் தருகிறது. தாய் என்ற சொல்லுக்கு ‘முதன்மை’ என்று பொருள் தருகிறது கௌரா தமிழ் அகராதி’2 (410). தமிழ் அகராதி அண்ணன்றேவி, ‘அரசன்றேவி, ஊட்டுந்தாய், குருவிறேவி, கைத்தாய், செவிலித்தாய், தன்றேவயையின்றாள், நற்றாய், பாராட்டுந்தாய், மாதாவின் சகோதரி, முதல் முதற்றாம் முதன்மை’3 என்று தாய் என்ற சொல்லிற்கு பொருள் தருகிறது.
மெய்யப்பன் தமிழ் அகராதி ‘குழந்தைபெறும் நிலை, கருப்பம்’4 என்று தாய் என்ற சொல்லிற்கு பொருள் தருகிறது.
தாய்மையின் சிறப்பு
மனித வாழ்வு உறவுகளால் சூழப்பட்ட நிலையில் அமைந்துள்ளது. இவற்றில் எல்லா உறவுகளும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இருப்பினும் தாயின் உறவு தனிச் சிறப்பு வாய்ந்தவை. அதனை அற இலக்கியம் பதிவுச் செய்துள்ளது.