சி.சு. செல்லப்பா – பழுப்பு நிறப் பக்கங்களில் சாரு நிவேதிதா
நவீன இலக்கியம் (கவிதை கதைகளில் நவீனத்துவம்), விமர்சன இலக்கியம், வணிக இதழ்களுக்கு மாற்றான தீவிர இலக்கியம் இவற்றை ‘எழுத்து’ என்னும் பத்திரிக்கை மூலம் தமிழுக்கு அறிமுகம் செய்த சி.சு.செல்லப்பா சுதந்திரப் போராட்டதில் பங்கேற்று சிறை சென்றவர். அவர் இன்று தமிழில் தீவிர இலக்கியம் வணிக இலக்கியத்தைத் தாக்குப் பிடித்து நிமிர்ந்து நிற்கும் காலத்துக்கு அடித்தளமிட்ட முன்னோடி. சாரு நிவேதிதா அவரது பணி, ஆளுமை, படைப்புகள் மற்றும் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் யாவற்றையும் விரிவாக ஒன்பது பகுதிகளில் தினமணியின் இணையதளத்தில் எழுதி இருக்கிறார். எட்டாம் பகுதியில் அவருடைய சாதனைகள் என்ன என்னும் சாருவின் பார்வையைக் கீழே பகிர்கிறேன்:
மேற்கு நாடுகளில் பல்கலைக்கழக மொழியியல் துறையில் பணிபுரிபவர்கள் அனைவருமே சிந்தனையாளர்களாகவும், விமரிசகர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு நிலைமை வேறு. இங்கே விமரிசனம் என்றால் என்னவென்றே தெரியாது. வியாக்கியானமும் உரை விளக்கங்களும் மட்டுமேதான் இங்கே உண்டு. இப்படிப்பட்ட சூழலில் விமரிசனம் என்ற புதிய விஷயத்தை ஆரம்பித்த சி.சு. செல்லப்பாவின் விமரிசனப் பயணம் அவர் காலத்திலேயே – அதுவும் ‘எழுத்து’ பத்திரிகையிலேயே பெரும் விபத்துக்குள்ளாகியது. அவருடைய மாணாக்கர்களான வெங்கட் சாமிநாதனும் தர்மு சிவராமுவும் செல்லப்பாவின் பாணியிலேயே சென்று விமரிசனக் கலையை வம்புச் சண்டையாக மாற்றினர். ‘நமக்கு நட்பாக இருந்தால் நல்ல எழுத்தாளர்; இல்லாவிட்டால் போலி’ என்பதுதான் இவர்களது விமரிசனப் பாணியாக மாறியது. அவர்களின் விமரிசனத்தில் வேறு எந்தவித இலக்கியக் கோட்பாடுகளோ ரசனையோ இருந்ததில்லை. க.நா.சு. பரவாயில்லை. தன்னுடைய ரசனைக்கு ஏற்றபடி அவர் உலக இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். ஆனால் விமரிசனக் கலைக்கு அவர் பங்காற்றவில்லை. உலக இலக்கியத்தை வாசித்தால் நம்மால் நல்ல இலக்கியத்தை இனம் காண முடியும் என்று மட்டுமே குறிப்பிட்டார். அதன்படியே வாழ்நாள் முழுதும் வாசித்தார்; நமக்கு அறிமுகப்படுத்தினார். ஆனால் செல்லப்பாவும் சாமிநாதனும் சிவராமுவும் விமரிசனக் கலைக்கு ஆக்கபூர்வமாக எதுவும் செய்யவில்லை.
அசோகமித்திரனை மட்டுமல்ல; ஞானக்கூத்தன் உட்பட அவர்கள் காலத்திய பல எழுத்தாளர்களைப் போலி என்றார்கள் சாமிநாதனும் சிவராமுவும். ந. பிச்சமூர்த்தியின் இலக்கியத் தகுதியை சந்தேகித்து எழுதினார் நகுலன். அதுவும் ‘எழுத்து’ பத்திரிகையில். ஆக, மேற்குலகைப் போல் ஓர் ஆரோக்கியமான இலக்கிய வடிவமாக ஆகியிருக்க வேண்டிய விமரிசனக் கலை அடிதடி சண்டையாக மாறியது.