1. இரும்புப்பெண்மணி இரோம் சானு சர்மிளா!
நாம் வாழும் இக்காலகட்டத்தில் வாழும் மானுட உரிமைப்போராளியான இரோம் சானு சர்மிளாவின் உண்ணாவிரதப்போராட்டம் மனித உரிமைகளுக்காகப்போராடும் அனைவரும் அறிந்திருக்க வேண்டியதொன்று. 2.11.2000ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து உண்ணாவிரதமிருந்து வருகின்றார் இரோம் சானு சர்மிளா.
2.11.2000 அன்று மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கிலுள்ள மலோம் என்னும் ஊரில் இந்தியப்படைத்துறையின் துணைப்படையான ‘அசாம் ரைபிள்சி’னால் பத்துப் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை எதிர்த்து இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்ட் இரோம் சானு சர்மிளா. இன்றுவரை தன் முடிவில் எந்தவிதத் தளர்வுமில்லாமல் இருந்து வருகின்றார்.
இவரைப்பற்றி இரா.கலைச்செல்வன் அண்மைய விகடனொன்றில் நல்லதொரு கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அதிலவர் எவ்விதம் அவரை அவரிருக்கும் மருத்துவ மனையில் சந்தித்தது என்பது பற்றியும், இரோம் சானு சர்மிளாவின் தனிப்பட்ட அந்தரங்கள் உணர்வுகள் பற்றியும் (காதல் போன்ற) அவர் எழுதியிருக்கின்றார். அவரது காதல் (இன்னொரு தேசத்தைச் சேர்ந்த ஒருவருடான) காரணமாகப் பல எதிர்ப்புகளை அவர் சந்தித்திருக்கின்றார். அவர் யாருக்காகப் போராடுகின்றாரோ அந்த மக்களில் பலருக்கே அவரது போராட்டம் பற்றித் தெரியாமலிருக்கின்றது. ஆனால் இவற்றாலெல்லாம் மனம் சோர்ந்து விடாமல், தன் கொள்கைகளுக்கேற்பத் தன் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகின்றார் இரோம் சானு சர்மிளா.
இவருக்கு வலுக்கட்டாயமாக, மூக்கு குழாய் வழியே உணவு வழங்கப்படுகின்றது. ஆனாலும் இவரது உடலுறுப்புகள் இவரது தொடர்ச்சியான உண்ணாவிரதப்போராட்டம் காரணமாகப் பழுதடைந்து போய் விட்டன. மாதவிடாய் கூட இதன் காரணமாக நின்று போய் விட்டது.
போராளி எனச்சந்தேகிக்கப்படும் எவரையும் காலவரையின்றி காவலில் வைக்க உதவும் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958 (AFSPA) மீளப்பெற வேண்டுமென்பதே இவரது முக்கியமான கோரிக்கை.