‘மிஸிஸ் கொஞ்சம்’ என்பது எங்கள் பெண்கள் திலகத்துக்கு நான் நாளாந்தப் பாவனைக்காகச் சூட்டிக் கொண்ட ஜனரஞ்சிதமான பெயர். ஒரு நாட்டின் பொருளாதார மந்திரியாக இருந்திருக்க வேண்டியவர். அதை, நான் மட்டுமே சொல்லவில்லை. அவரே இருந்து இருந்திட்டு எனக்கும், தன் மக்கள், நண்பர் எல்லாருக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம் (கிடைக்காவிடின் அவரே சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியும் கொண்டு) அதை நேரில் சொல்லி அல்லது சொல்லாமற் சொல்லி ஞாபகமூட்டத் தவறியதில்லை. ஏதோ ஒரு உலக நாட்டின் துரதிஷ்டகரமான இழப்பு ― அதாவது இந்தப் பொருளாதார நிபுணி, நாங்கள் முற் பிறவிகளில் செய்த நற்பயனால் எமக்குக் கிடைத்திருக்கிறார்.
ஒருநாள் எம்வீட்டுக்குக் கரு, தயா என்னும் ஒரு சோடி இலக்கிய நண்பர்களை இரவுச் சாப்பாட்டுக்கு நானும் மிஸிஸ் கொஞ்சமும் அழைத்திருந்தோம்.
அவர்களும் இலங்கையில் பிறந்த இங்கிலாந்து வாசிகள் என்ற படியால் பழங்கால அனுபவங்களை மீளாய்வு செய்து ஆனந்தமாக அவ் இரவைக் கழிக்கலாம் என்னும் நோக்குடன், உறைப்பான கோழி இறைச்சிக் கறியும் குழம்பும், முட்டைப் பொரியலும் கீரைப் பிட்டும் சமைப்பது என முடிவு செய்யப் பட்டது. குசினித் தட்டுகளிலிருந்த பிட்டு மாச்-சரைகளை எடுத்து அளவுச்-சுண்டினுள் போட்டு மதிப்பிட்டால், மூன்றரைப் பேருக்குப் போதும், ஆனால் நாலு பேருக்குக் காணாது என்ற நிலை. என்ன, ஒரு கொஞ்சம் தானே குறைவு, எங்களில் ஒருவர் அன்றைய வீட்டுக்காரர் என்ற முறையில் கொஞ்சம் குறைச்சுச் சாப்பிடுவது என்ற முடிவும் எடுக்கப் பட்டது. ஆனால் எம் இருவரில் யார் கொஞ்சம், கொஞ்சமாய் உண்பது? என்பது மட்டும் பேசப் படவில்லை.
அடுத்து, கறித்தூள், மிளகாய்த் தூள்களின் நிலை ஆராயப் பட்டது. கறித்தூள், கொஞ்சம் மட்டும் பாவிப்பது என்றும், உறைப்புக் கறியே எம் நோக்கமென்ற படியால், மிளகாய் தூளில் கொஞ்சம் கூடப் போடுவதென்றும் எம் ஒருமித்த முடிவு. இந்த எம் திட்டத்தின் படி சமையல் இனிதே நடந்தேறியது.
Continue Reading →