‘அன்னையர் தினக்கவிதை’: அகத்தில் வைத்துப் பூசிப்போம்

மே 8  – அன்னையர் தினம்!

'அன்னையர் தினக்கவிதை': அகத்தில் வைத்துப் பூசிப்போம்

பெற்றவளோ தவித்திருக்க பெருஞ்செலவில் ஊரழைத்து
நற்றமிழும் மறந்துவிட்டு நாகரிகம் தனிலமர்ந்து
சுற்றமெலாம் சூழ்ந்திருக்க சுவையாக விருந்தளித்து
வெற்றிக் களிப்பிலவர் வீற்றிருந்து மகிழ்ந்திடுவார்   !

தான்சுமந்து பெற்றபிள்ளை தலைநிமிர்ந்து வாழ்வதற்கு
தனக்குவரும் வலியனைத்தும் தாயேற்று நின்றிடுவாள்
ஊனுறக்கம் தனைப்பாராள் ஒருகணமும் தனையெண்ணாள்
தான்பெற்ற பிள்ளைதனை தரமாக்கத் துடித்துநிற்பாள் !

பள்ளிசெல்லும் பிள்ளைபார்த்து துள்ளிநிற்கும் அவள்மனது
கள்ளமில்லா மனத்துடனே கன்னமதில் கொஞ்சிடுவாள்
பள்ளிவிட்டுப் பிள்ளைவரும் பாதைதனில் நின்றுஅவள்
துள்ளிவரும் பிள்ளதனைத் தூக்கிடுவாள் அன்பொழுக !

Continue Reading →

நகைச்சுவையும் உளவியல் சிக்கல்களும்

அகஸ்ரி ஜோகரட்னம் (சிம்பா), – எழுத்தாளர் நவஜோதி ஜோகரட்னம் அவர்களின் மகன் அகஸ்ரி ஜோகரட்னத்தின் ஆங்கிலக்கட்டுரையின் தமிழ் வடிவம். அகஸ்ரி ஜோகரட்னம் இலண்டன் வோறிக் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் மேற்கொண்டு வருகின்றார். அவரது இக்கட்டுரை பல்கலைக்கழகப் பத்திரிகையில் பிரசுரமானதும் குறிப்பிடத்தக்கது. – பதிவுகள் -.


நவீன உலகில் உளவியல் கோளாறுகள் என்பன கண்ணுக்குத் தெரியாத நோய்க்கூறுகள் ஆகும். இந்த உளவியல் கோளாறுகளின் முக்கியமே இவற்றை நாம் தொட்டு, பார்த்து அறிந்துகொள்ளமுடியாத நிலையில் இருப்பதாகும். அது மட்டுமல்ல அவை எமது நாளாந்த அசைவியக்கத்தின் ஒவ்வொரு அம்சத்திலும், நாங்கள் எவ்வாறு பேசுகிறோம், எவ்வாறு நடக்கின்றோம், எவ்வாறு செயலாற்றுகின்றோம், எவ்வாறு அன்பு செலுத்துகின்றோம் என்பனவற்றிலெல்லாம் பாதிப்பு செலுத்தக்கூடியனவாக உள்ளன. அத்தோடு நகைச்சுவையை நாம் எவ்வாறு ரசிக்கின்றோம், ஹாஷ்யமான நிகழ்ச்சிகள் குறித்து நாம் எவ்வாறு சிந்திக்கின்றோம், நகைச்சுவையை நாம் எவ்வாறு எதிர்கொள்கின்றோம் என்பனவற்றையும்கூட இவை பாதிக்கின்றன.

என்னைச் சிரிப்பிலாழ்த்தும் பிரபல்யமான நகைச்சுவை ஆளுமைகள் ஏன் தொடர்ச்சியான உளவியல் கோளாறுகளுக்கு உட்படுகிறார்கள் என்பதுபற்றி நான் நீண்டகாலமாக வியப்புற்று வந்திருக்கிறேன். நகைச்சுவைக்கும், உளவியல் சிக்கல்களுக்குமிடையில் உள்ள தொடர்புகள் குறித்து நிறையவே பேசப்பட்டுள்ளது.

உண்மையில் உளவியல் கோளாறுகளுக்கு உட்பட்டவர்கள் தங்களின் உள்மனதில் வியாபித்துக்கிடக்கின்ற இந்த ராட்சகர்களிடமிருந்தே தங்கள் நகைச்சுவைக்கான பெருந்தூண்டுதலைப் பெற்றிருக்கிறார்கள்.

உளவியல் சிக்கல்கல்களும்;, மன அழுத்தங்களை சீராக்கும் செயற்பாடுகளும் அடிப்படையில் நகைச்சுவையுடன் சேர்ந்தே செயற்படுவதைக் காணலாம். சிறந்த ஹாசிய நிகழ்ச்சியானது உணர்ச்சிகள் மற்றும் மன எழுச்சிகளுக்கு சாதமாகத் திகழ்கின்றன. நிலைமைகள் மோசமாகிப்போகின்ற கட்டங்களில் இவை உளவியல் ரீதியான அடிதாங்கியாக அமைகின்றன. பகிடிகள் விடுவதன் மூலம் நவீன உலகம் தங்களுடைய உணர்ச்சிகளை உற்சாகத்தோடு வைத்திருக்க உதவுகின்றது என்று மேக்றோ (McGraw) என்ற அறிஞர் கூறுகின்றார்.

Continue Reading →

ஆய்வு: வள்ளுவர் உணர்த்தும் கள் உண்ணாமை

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
தமிழகத்தில்  சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் அறம், அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு, புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன.திருக்குறள் அறநூல் வகையை சார்தது ஆகும். இந்நூலின் ஆசிரியர் திருவள்ளுவர் இந்நூலில்;  1330 பாடல்கள் உள்ளன.133 அதிகாரமா பகுக்கப்பட்டு ஒவ்வொரு அதிகார விதம் மொத்தம் பத்து குறள்களாக உள்ளன.இந்நூலில் இடம் பெறும் கள்குடிப்பதால் அதாவது மதுஅருந்துவதால் ஏற்படும் விளைவுகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கள் உண்ணாமை
கள் உண்ணாமை என்ற அதிகாரம் திருக்குறளில் 93 ஆவது அதிகாரமாக அமைந்துள்ளது.ஒழுக்கமும்,உணர்வும் அழித்தற்கண் பரத்தையர் உறவுடன் ஒத்த தீங்கினை உடையது.இப்பழக்கம்,சங்ககாலத் தமிழரிடம் மிகுதியாகப் பரவியிருந்தது.சங்க காலத்தை அடுத்துத் தமிழ் அரசரும்,மக்களும் பகைவரிடம் தோற்றுப் போனமைக்கு இப்பழக்கம் ஒரு பெரும் காரணம் ஆகும்.ஏனெனில்,மது குடிக்கும் பழக்கம் உடையவர், தம் அறிவை இழந்து விடுவர்.உடல் நலம் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.உள்ள நலமும் கெடுகிறது.அவர்,வைத்திருக்கும் பொருள் நலனும் கெடுகிறது. அனைத்தும் கெடுவதால் அவரை நம்பி இருக்கும் குடும்பமும் கெடுகிறது.இதனைச் சமூக மேதையாகிய திருவள்ளுவரும் கண்டறிந்து தம் சமகால மக்களிடம் பரவியிருக்கும் ஒழுக்கத்தைக் கண்டித்துக் கூறியுள்ளார்.குடித்தல்,அருந்துதல் முதலாய சொற்களுக்கு மாற்றாக அளவறிந்து குடித்தலைச் சுட்டுதற்காக ‘உண்ணாமை’என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார்.

Continue Reading →

ஆய்வு: சீகன்பால்கு பார்வையில் தமிழ் எழுத்திலக்கணம்

- முனைவர் ப.ஜெயபால், உதவிப்பேராசிரியர் ,தமிழ்த்துறை, எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி, கோயமுத்தூர் -ஒவ்வொரு காலகட்ட சமூக, அரசியல், கல்வி மற்றும் மொழி மாற்றங்கள் சார்ந்த அழுத்தங்களின் வெளிப்பாடே இலக்கண நூல்களை உருப்பெறச் செய்கின்றன. இலக்கணம் சமூகத்தின் உற்பத்திப் பொருளாக உள்ளது. சமூகத்தின் அடையாளப்படுத்தும் தன்மை இதில் வெளிப்படும். இலக்கணம் புனிதமானது; மாறாதது என்னும் கருத்தாக்கத்தை யதார்த்த நிலையில் காணும் பொழுது கட்டுடைத்தலுக்கு உள்ளாகின்றது. தமிழ் இலக்கண மரபில் தோன்றிய தொல்காப்பியம், வீரசோழியம், பிரயோக விவேகம் போன்றவை அந்த நூல்கள் எழுந்த காலகட்டத்தின் சமூக நிலையையே பிரதிபலிக்கின்றன. மரபை ஒட்டிய இலக்கணப் பெருக்கத்தில் ஐரோப்பியர் வருகையினால் உருப்பெற்ற இலக்கணங்கள் வேறொரு புரிதலுக்குள் கொண்டு சென்றன. இலக்கணநூல் உருவாக்கத்தில் எளிமையாக்கமும் புதுமையாக்கமும் செயல்படுத்தப்பட்டது. பதினெழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மரபை அடிப்படையாக வைத்துக் கொண்டு தமிழ் இலக்கண நூல்கள் உருப்பெற்ற அதே காலகட்டத்தில் ஐரோப்பியரால் மரபை மீறிய இலக்கண நூல்கள் படைக்கப்பட்டன. ஐரோப்பிய சிந்தனையில் இலக்கணம் படைக்க விழைந்த கிறித்துவ பாதிரிமார்களுக்கு தமிழின் நீண்ட இலக்கணமரபை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தமிழ் இலக்கண மரபின் முன்னோடிகளான அகத்தியர், தொல்காப்பியர், பவணந்தியாரின் துணை தேவையாக இருந்துள்ளதை ஐரோப்பியர் இயற்றிய தமிழ் இலக்கண நூல்களின் முகவுரையின் வழி அறியலாகின்றது.

ஐரோப்பியர் வருகையும் இலக்கண உருவாக்கமும்
பதினெட்டு மற்றும் அதற்கு பின்னான காலகட்டங்களில் ஐரோப்பியர் எழுதிய தமிழ் இலக்கணநூல்கள் நெடிய ஒரு வரலாற்றினைக் கொண்டுள்ளன. தமிழ் இலக்கண வரலாற்றினை எழுத முற்பட்ட இளவரசு (1965), இளங்குமரன் (1988) ஆகியோரின் நூல்களில் இந்நூல்கள் பற்றிய குறிப்பினைக் காணமுடியவில்லை. ஐரோப்பியரால் எழுதப்பட்ட ஆரம்பகால இலக்கண நூல்கள் போர்த்துகீசிய மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. அதற்குப் பிறகான இலக்கணநூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. ஐரோப்பிய மொழியில் இயற்றப்பட்ட முதல் இலக்கண நூலாக சீகன்பால்குவின் Grammatica Damulica (1716) என்னும் நூல் அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் இதற்கு முன்பே சில இலக்கணநூல்கள் உருப்பெற்றுள்ளன.

Continue Reading →

சிறுகதை : திருமதி கொஞ்சம்

-பேராசிரியர் கோபன் மகாதேவா -‘மிஸிஸ் கொஞ்சம்’ என்பது எங்கள் பெண்கள் திலகத்துக்கு நான் நாளாந்தப் பாவனைக்காகச் சூட்டிக் கொண்ட ஜனரஞ்சிதமான பெயர். ஒரு நாட்டின் பொருளாதார மந்திரியாக இருந்திருக்க வேண்டியவர்.  அதை, நான் மட்டுமே சொல்லவில்லை. அவரே இருந்து இருந்திட்டு எனக்கும், தன் மக்கள், நண்பர் எல்லாருக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம் (கிடைக்காவிடின் அவரே சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியும் கொண்டு) அதை நேரில் சொல்லி அல்லது சொல்லாமற் சொல்லி ஞாபகமூட்டத் தவறியதில்லை. ஏதோ ஒரு உலக நாட்டின் துரதிஷ்டகரமான இழப்பு ― அதாவது இந்தப் பொருளாதார நிபுணி, நாங்கள் முற் பிறவிகளில் செய்த நற்பயனால் எமக்குக் கிடைத்திருக்கிறார்.

ஒருநாள் எம்வீட்டுக்குக் கரு, தயா என்னும் ஒரு சோடி இலக்கிய நண்பர்களை இரவுச் சாப்பாட்டுக்கு நானும் மிஸிஸ் கொஞ்சமும் அழைத்திருந்தோம்.

அவர்களும் இலங்கையில் பிறந்த இங்கிலாந்து வாசிகள் என்ற படியால் பழங்கால அனுபவங்களை மீளாய்வு செய்து ஆனந்தமாக அவ் இரவைக் கழிக்கலாம் என்னும் நோக்குடன், உறைப்பான கோழி இறைச்சிக் கறியும் குழம்பும், முட்டைப் பொரியலும் கீரைப் பிட்டும் சமைப்பது என முடிவு செய்யப் பட்டது. குசினித் தட்டுகளிலிருந்த பிட்டு மாச்-சரைகளை எடுத்து அளவுச்-சுண்டினுள் போட்டு மதிப்பிட்டால், மூன்றரைப் பேருக்குப் போதும், ஆனால் நாலு பேருக்குக் காணாது என்ற நிலை. என்ன, ஒரு கொஞ்சம் தானே குறைவு, எங்களில் ஒருவர் அன்றைய வீட்டுக்காரர் என்ற முறையில் கொஞ்சம் குறைச்சுச் சாப்பிடுவது என்ற முடிவும் எடுக்கப் பட்டது. ஆனால் எம் இருவரில் யார் கொஞ்சம், கொஞ்சமாய் உண்பது? என்பது மட்டும் பேசப் படவில்லை.

அடுத்து, கறித்தூள், மிளகாய்த் தூள்களின் நிலை ஆராயப் பட்டது. கறித்தூள், கொஞ்சம் மட்டும் பாவிப்பது என்றும், உறைப்புக் கறியே எம் நோக்கமென்ற படியால், மிளகாய் தூளில் கொஞ்சம் கூடப் போடுவதென்றும் எம் ஒருமித்த முடிவு. இந்த எம் திட்டத்தின் படி சமையல் இனிதே நடந்தேறியது. 

Continue Reading →

ஆய்வு: ஒரு மனித இனத்தின் மரபணு DNA – M130

மேற்கு அவுஸ்ரேலியாவில் வாழும் திராவிட மூதாதையர்களின் ஆதிக்குடிகளின் படம்.

ஆய்வு: ஒரு மனித இனத்தின் மரபணு DNA -  M130

DNA என்பது Deoxyribonucleic Acid என்பதன் சுருக்கமாகும்(;(Abbreviation).). இது மனிதனது மரபணுவினை (DNA) உயிரியல் நோக்கில் கண்ணடறியும் விஞ்ஞான ரீதியான ஒரு ஆய்வின் முடியாகும். M130 என்பது ஒரு மனிதனதோ அன்றி ஒரு இனக்குழுமத்தினதோ அன்றி பல இனக்குழுமங்களைத் தொடர்பு படுத்திய மரபணுவுக்கு இடப்பட்ட விஞ்ஞானரீதியான குறியீடாகும். மேலே குறிப்பிட்ட DNA -M130 என்பது 70,000 ஆண்டுகளுக்கு முந்தி வாழ்ந்த உலகின் நவீன மூத்த குடியாகிய ஒரு பகுதி  மனிதனினதோ அன்றி ஒரு மக்கள் கூட்டத்தினதோ பொது மரபணு என்று தற்போது அறியப்பட்டுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் உயிரியில் விஞ்ஞான பீடத்தின் தலைவரான பேராசிரியர் ஆர்.எம்.பச்சப்பன் அவர்கள் உலகளாவிய அமைப்பான தேசிய புவியியல் (National Geographic) என்ற அமைப்பின் சார்பாக மனித மரபணுவியல் (Genology) பற்றிய ஆய்வினை இந்தியாவில் செய்வதற்காக நியமிக்கப்பட்டு 2007ஆம் ஆண்டில் தனது ஆய்வினை ஆரம்பித்தார். இவ்வாய்வின் நோக்கமானது நவீன மனித இனம் எங்கிருந்து தோற்றம் பெற்றது என்றும் அந்த மனித இனங்களின் பொதுவான தொடர்புகள் என்ன என்பதனைக் கண்டறிய டி.என்.ஏ பகுப்பாய்வு செய்து மனித இனத்தின் தோற்றம் அதன் பரம்பல் பற்றி நிறுவுவதாகும். இவ்வாறாக அவரும் அவரது குழுவினரும் செய்த ஆய்வுகளில் பல வியத்தகு முடிவுகள் வெளிப்பட்டன.

பேராசிரியர் பச்சப்பனின் ஆய்வு மதுரையிலும், ஆதித் திராவிடர்கள் வாழும் மலைப்பகுதிகளிலும் வடஇந்தியாவின் குஜராத், ஒரிசா, ஹிமாசல்பிரதேஷ், ஜம்முகாஷ்மீர், கார்கில் ஆகிய பகுதிகளிலும் டி.என்.ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுகூட சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது ஒரு பொதுவான மரபணுவே எங்கும் காணப்பட்டது. இம்மரபணுவை எம்-130 என்னும் பெயரிடப்பட்ட மரபணு என்ற முடிவு பெறப்பட்டது. இதில் குறிப்பாக மதுரையில் உள்ள குக்கிராமமான “ஜோதிமாணிகம்” என்னும் கிராமத்தில் பெறப்பட்ட டி.என.;ஏ மாதிரிகள் 700 பேரிடம் பெறப்பட்டு அதில் நடைபெற்ற ஆய்வு முடிபுகளும் எம்-130 என்ற ஆய்வு முடிவினையே காட்டடியது. இங்கு முதன் முதலில் விருமாண்டி ஆண்டித்தேவர் என்னும் 30 வயதுடைய முன்னணி கணணி நிறுவன  நிர்வாகியிடம் பெறப்பட்ட முடிவின் பிரகாரம் அவரிடம் பெறப்பட்ட டீ.என்.ஏ மாதிரி 70,000 வருடங்களுக்கு முந்திய ஆபிரிக்க மனிதனின் டி.என்.ஏ மாதிரியுடனும் இன்றும் வடமேற்கு அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் பல வகையான ஆதிக்குடிகளிலும் பெறப்பட்ட டி.என்.ஏ மாதிரிகள் யாவும் எம்-130 என்ற முடிவினையே கொடுத்தன. இந்த ஆய்வு முடிவுகளைப்பெற 5 ஆண்டுகள் எடுத்ததாக பேரசிரியர் பச்சப்பன் குறிப்பிடுகின்றார். ஆகவே இதிலிருந்து அறிப்படுவது இந்த மூன்று இனக்குழுமங்களும் ஒரு மனித இனத்தின் வேர்கள் என்ற முடிவிற்கு வரமுடிகின்றது. இந்த ஜோதிமாணிக்கம் கிராமத்து மக்களே இந்தியாவின் ஆதிக்குடிகளாகும். இவ்வாறாகவே மலைவாழ் ஆதித்திராவிடர்களும் இவ்வாறான ஆதிக் குடிகளேயாவர். அத்தோடு திருமலை கள்வர் இனம், யாதவர், சௌராஷ்டர் ஆகியோரிடை 5மூ வீதமானவர்களிடம் இவ்வாய்வினை மேற்கொண்டபோதும் டி.என.ஏ எம்130 என்ற முடிவே பெறப்பட்டுள்ளது. ஆனால் ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பெறப்பட்ட முடிவுகளின் பிரகாரம் அவர்களது டி.என்.ஏ எம்60 என்றும் அறிப்பட்டு உள்ளது. இது வேறொரு இனக்குழுமத்திலிருந்து பெறப்பட்டதாக இருக்கவேண்டும். 160,000 ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் தோற்றம் பெற்றிருக்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் முடிவாகும். இக்காலப்பகுதியில் பல இனங்கள் ஒன்றாகக் கலக்கத் தொடங்கியதனால் இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

Continue Reading →

விளையாட்டுத்துறையில் சாதிக்கும் யாழ் இந்துவின் மைந்தர்கள்! வாழ்த்துகிறோம்!

யாழ் இந்துக்கல்லூரியின் மாணவர்கள் பலர் சர்வதேசரீதியாகப் கல்வி சார்ந்த பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து வருவது யாவரும் அறிந்ததே. அண்மைக்காலமாக விளையாட்டுத்துறையிலும் சர்வதேசரீதியாகக் கவனம் பெற அவர்கள்…

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 170 : யாழ் இந்துக்கல்லூரி வருடாந்த இராப்போசன இரவினில்….

– வாசித்தவை, யோசித்தவை மற்றும் வாசித்து யோசித்தவை ஆகியவற்றின் பதிவுகளிவை. –

யாழ் இந்துக்கல்லூரிச்சங்க வருடாந்த இராப்போசன நிகழ்வினில்..

நேற்று நடைபெற்ற யாழ் இந்துக்கல்லூரி (கனடா) சங்கத்தினரின் வருடாந்த இராப்போசன இரவு  ‘ஸ்கார்பரோ கொன்வென்சன் சென்ட’ரில் நடைபெற்றது. வழக்கமாக இது போன்ற நிகழ்வுகளைத்தவிர்ப்பவன் நான். ஆனால் இம்முறை நண்பர்கள் பிறேமச்சந்திரா, கனகவரதா ஆகியோர் கூடுதலாக யாழ் இந்துக்கல்லூரி (கனடா) சங்கத்தில் இணைந்து செயற்பட்டதாலும், நண்பர் கீதானந்தசிவமும் செல்வதற்கு ஆவலுடன் இருந்ததாலும் செல்வதற்கு முடிவெடுத்தேன்.

பாடசாலைக்காலத்து நண்பர்கள் பலரைச் சந்திக்கலாம், எமக்குக்கற்பித்த ஆசிரியர்கள் பலரைச்சந்திக்கலாம் என்பதாலும் செல்வது நல்லதே என்று தோன்றியது.

கூடவே நண்பர் கனகவரதாவின் பரிந்துரையின் பேரில் ஈழத்துத்தமிழ்த்துள்ளிசைப்பாடகரான அமுதன் அண்ணாமலையின் இசைக்கச்சேரியும் நடைபெற ஏற்பாடாகியிருந்ததால், அவரது பாடல்களையும் நேரில் மீண்டுமொருமுறை கேட்டு மகிழலாம் என்ற எண்ணமும் மேற்படி நிகழ்வில் கலந்துகொள்ளும் ஆவலைத்தூண்டியது.

கனடாத்தேசிய கீதம், கல்லூரிக்கீதம் மற்று, தமிழ்த்தாய் வணக்கம் ஆகியவற்றை முறையே செல்வி வைசாலி கிருஷ்ணானந்தன், கலாநிதி மைதிலி தயாநிதி மற்றும் சிவை சுபதரன் ஆகியோர் பாடி நிகழ்வினைத்தொடக்கி வைத்தனர். அதனைத்தொடர்ந்து ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் தம்மைப்பலிகொடுத்த போராளிகள் அனைவருக்கும், பொதுமக்கள் அனைவருக்கும் இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. வரவேற்புரையினை திரு. ரவீந்திரா கந்தசாமி நிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து வரவேற்பு நடன நிகழ்வு நடைபெற்றது.  தொடர்ந்து சங்கத்தலைவர் திரு. மோகன் சுந்தரமோகனின் தலைமையுரையும், அதனைத்தொடர்ந்து பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட திரு.பிரபா சந்திரனின் உரை நிகழ்ந்தது.  இவர் அமெரிக்க மத்திய அரசின் பாதுகாப்புத்திணைக்களத்தில் பணிபுரிகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading →