பட்டி தொட்டி எங்கும் ஒலித்த ” அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு ” பாடல் இடம்பெற்ற பட்டிக்காடா பட்டணமா படமும் அவ்வாறே அன்றைய ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. 1972 இல் வெளிவந்த இந்தப்படத்தில் இன்றைய முதல்வர் ஜெயலலிதாவுடன் சிவாஜி நடித்தார். அடங்காத மனைவிக்கும் செல்வச்செருக்கு மிக்க மாமியாருக்கும் சவால்விடும் நாயகன், தனது முறைப்பெண்ணை அழைத்து பாடும் இந்தப்பாடல் அந்நாளைய குத்துப்பாட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. விமர்சன ரீதியாகப்பார்த்தால் அந்தப்படமும் பாடலும் பெண்ணடிமைத்தனத்தையே சித்திரித்தது. மக்களிடம் பிரபல்யம் பெற்றதால், இலங்கையில் சிங்கள சினிமாவுக்கும் வந்தது. இன்னிசை இரவுகளில் இடம்பெற்றது. அதே இசையில் ஒரு பாடலை எழுதிப்பாடிய இலங்கைக்கலைஞர் ராமதாஸ் தமிழ்நாட்டில் மறைந்தார்.
” அடி என்னடி சித்தி பீபீ ” என்று தொடங்கும் அந்தப்பாடலின் சொந்தக்காரர் ராமதாஸ், இலங்கையில் புகழ்பூத்த கலைஞராவார். மரைக்கார் ராமதாஸ் என அழைக்கப்பட்ட இவர் பிறப்பால் பிராமணர். ஆனால், அவர் புகழடைந்தது மரைக்கார் என்ற இஸ்லாமியப்பெயரினால். சென்னையில் மறைந்துவிட்டார் என்ற தகவலை சிட்னி தாயகம் வானொலி ஊடகவியலாளர் நண்பர் எழில்வேந்தன் சொல்லித்தான் தெரிந்துகொண்டேன். கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவுடன் இருந்ததாகவும் அறிந்தேன்.
1970 காலப்பகுதியில் இலங்கை வானொலி நாடகங்களிலும் மேடை நாடகங்களிலும் தோன்றி அசத்தியிருக்கும் ராமதாஸ், குத்துவிளக்கு உட்பட தமிழ், சிங்களப் படங்களிலும் நடித்தவர். பாலச்சந்தரின் தொலைக்காட்சி நாடகத்திலும் இடம்பெற்றவர். கோமாளிகள் கும்மாளம் நகைச்சுவைத் தொடர் நாடகத்தைக் கேட்பதற்காகவே தமிழ் நேயர்கள் நேரம் ஒதுக்கிவைத்த காலம் இருந்தது. அதற்குக் கிடைத்த அமோக வரவேற்பினால் அதனைத் திரைப்படமாக்குவதற்கும் ராமதாஸ் தீர்மானித்தார். வானொலி நாடகத்தில் பங்கேற்ற அப்புக்குட்டி ராஜகோபால், உபாலி செல்வசேகரன், அய்யர் அப்துல்ஹமீட் ஆகியோருடன் மரைக்கார் ராமதாஸ் வயிறு குலுங்க சிரிக்கவைத்த தொடர்நாடகம் கோமாளிகள் கும்மாளம். நான்குவிதமான மொழி உச்சரிப்பில் இந்தப்பாத்திரங்கள் பேசியதனாலும் இந்நாடகத்திற்கு தனி வரவேற்பு நீடித்தது. திரைப்படத்தை தயாரிக்க முன்வந்தவர் முஹம்மட் என்ற வர்த்தகர். திரைப்படத்திற்காக ஒரு காதல் கதையையும் இணைத்து , காதலர்களை ஒன்றுசேர்ப்பதற்கு உதவும் குடும்ப நண்பர்களாக மரைக்காரும் அப்புக்குட்டியும் அய்யரும் உபாலியும் வருவார்கள். இந்தப் பாத்திரங்களுக்குரிய வசனங்களை ராமதாஸே எழுதினார். காதலர்களாக சில்லையூர் செல்வராசன் – கமலினி நடித்தார்கள். நீர்கொழும்பு – கொழும்பு வீதியில் வத்தளையில் அமைந்த ஆடம்பரமான மாளிகையின் சொந்தக்காரராக ஜவாஹர் நடித்தார். அதற்கு கோமாளிகை என்றும் பெயர்சூட்டினார் ராமதாஸ்.