“காரில் செல்லும் பேர்களைப்போல் காலிற் செல்லும் பேர்களுக்கும்
ஊரில் தெருவில் உரிமைசில உண்டிங் கென்பதை மறவாதீர்.” 🙂
கவீந்திரன் (அறிஞர் அ.ந.கந்தசாமி) எழுதிய கவிதைகள் பல்பொருள் கூறுவன. காதலைப்பற்றி, மக்கள் புரட்சியைப்பற்றி, மழையைப்பற்றி, எதிர்கால மனிதனைப்பற்றி.. என்று அவரது கவிதைகள் பல் வகையின. அ.ந.க மோட்டார் சாரதிகளுக்காகவும் ஒரு கவிதையொன்றினை எழுதியிருக்கின்றார். ஶ்ரீலங்கா சஞ்சிகையில் வெளியான அக்கவிதையினை இங்கு தருகின்றோம். அதிலவர் வாகனச்சாரதிகளுக்கு
“காரில் செல்லும் பேர்களைப்போல் காலிற் செல்லும் பேர்களுக்கும்
ஊரில் தெருவில் உரிமைசில உண்டிங் கென்பதை மறவாதீர்.” என்று அறிவுரை கூறுகின்றார்.
“காரை ஓட்டக் கைபிடிக்கும் கால மெல்லாம் கடவுளரின்
பேரை நினைத்து :என்காரில் வருவோர் நலன்கள் பேணிடுவேன்.
காரைக் கவனக் குறைவால்நான் ஓட்டேன்’ என்று சொல்லிக்
காரை ஓட்டின் விபத்தொழிந்து நாடு முழுதும் களித்திடுமே.” என்றும் மேலும் அக்கவிதையில் கூறுவார் அவர்.
முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியின் மோட்டார் சாரதிகளுக்கான அறிவுரைக்கவிதை இது. ஒருவிதத்தில் மக்களைப்பற்றிய, மக்களுக்கான, மக்களின் நலன்களுக்கான கவிதை. வாகனச்சாரதிகள் நிச்சயம் கேட்க வேண்டிய பல அறிவுரைகள் உள்ள கவிதை அது. சுவைத்து மகிழுங்கள். அதே சமயம் கவிதை கூறும் பொருளின் தேவையினை உணர்ந்து செயற்படுங்கள். உங்கள் வாகனங்களை ஓட்டுங்கள்.