1. கவிதை: கறுப்பு ஜுலை 1983: மானுட அவலம் என்பதன் வடிவம!
எண்ணிப் பார்க்கையில் எத்தனை நினைவுகள்.
கண்ணீர்த் தீவின் வரலாற்றை மாற்றிய
கறுப்பு ஜீலை எண்பத்து மூன்று.
மானுட அவலம் என்பதன் வடிவம்.
மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால்
மொழியின் பெயரால் நாட்டின் பெயரால்
இதுவரை மானுடர் மடிந்தது போதும்.
இனியும் வேண்டாம் இந்த அவலம்.
இனத்தின் பெயரால் இங்கே ஒருவர்
கூனிக் குறுகி அவமா னத்தால்
இருக்கும் காட்சி காணும் போதினில்
சிந்தையில் எழும் வினாக்கள் பற்பல.
யாரிவர்? எங்கி ருந்து வந்தார்?
குடும்பம் ஒன்றின் தலைவரா அல்லது
உறவுகள் அற்ற மானுடர் ஒருவரா?
இனவெறி மிகுந்து இங்கு வெறியுடன்
ஆடி நிற்கும் காடையர் முகங்கள்
மானுட அழிவின் பிரதி பலிப்புகள்.
இந்த மனிதர் இங்கே தனிமையில்
நாணி, வாடி, ஒடிந்து கிடக்கின்றார்.
இவரை இவ்வித மழித்த மானுடர்
மானுட இனத்தின் அவமானச் சின்னங்கள்..
மானுட உரிமை ஆர்வலர் மற்றும்
அனைவரு மெழுவீர்! எழுவீர்! எழுந்து
நீதி கிடைத்திட ஒன்றெனத் திரள்வீர்!
நடந்த வற்றில் பாடத்தைப் படித்து
நல்வழி தேர்ந்து பயணம் தொடர்வோம்.
சிறிய கோளில் மோதல்கள் எதற்கு.
அறிவுத் தளத்தில் அனைத்தையும் அணுகின்.
இதுவரை மோதலில் போரினில் மற்றும்
அனைத்து அழிவினில் மடிந்த துடித்த
மக்களை எண்ணியே பார்ப்போம். பார்த்து
இம்மண் மீதினில் புதிய பாதை
சமைப்போம். வகுப்போம். தொடர்வோம், மகிழ்வோம்.