ஊவா மாகாணத்தின் தியத்தலாவையை தனது சொந்த இடமாகக் கொண்ட எச்.எப். ரிஸ்னா எழுதிய மெல்லிசைத் தூறல்கள் என்ற பாடல்களடங்கிய நூல், கொடகே பதிப்பகத்தினால் 36 அழகிய பாடல்களை உள்ளடக்கியதாக 88 பக்கங்களில் வெளிவந்துள்ளது. இந்த நூல் மூலம் அவர் பாடலாசிரியராக புதுப் பிறவி எடுத்திருக்கின்றார்.
இன்னும் உன் குரல் கேட்கிறது (கவிதை), வைகறை (சிறுகதை), காக்காக் குளிப்பு (சிறுவர் கதை), வீட்டிற்குள் வெளிச்சம் (சிறுவர் கதை), இதோ பஞ்சுக் காய்கள் (சிறுவர் கதை), மரத்தில் முள்ளங்கி (சிறுவர் கதை), திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை (விமர்சனம்), நட்சத்திரம் (சிறுவர் பாடல்) ஆகிய 08 நூல்களை ஏற்கனவே ரிஸ்னா வெளியிட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிட்டுக் கூறக்கூடிய விடயமாகும். கவிதை, சிறுகதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம், இதழியல் ஆகிய துறைகளில் தடம்பதித்திருக்கும் இவர் பூங்காவனம் என்ற காலாண்டு இலக்கியச் சஞ்சிகையின் துணை ஆசிரியராவார்.
மெல்லிசைத் தூறல்கள் நூலுக்கான பிற்குறிப்பை வழங்கியுள்ள கவிஞர், திரைப்பட நடிகர் வ.ஐ.ச. ஜெயபாலன் அவர்கள் “கவிதாயினி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்களது இனிய பாடல்களை மகிழ்ச்சியுடன் ஆங்காங்கு மனசுக்குள் பாடிப் பார்த்து ரசித்தபடி வாசித்தேன். இந்தப் பாடல் தொகுதியில் ஆன்மீகப் பாடல்களும், குடும்ப உறவுகள் பற்றிய பாடல்களும், ஈரம் சொட்டும் காதல் பாடல்களும், நன்நெறிப் பாடல்களும் நிறைந்துள்ளன. இவரது பாடல்களில் தன்னுணர்வு கவிதை மொழி தூக்கலாக இருப்பது போற்றத்தக்க சிறப்பு” என்று சிலாகித்து குறிப்பிட்டுள்ளார்.
இதே போல நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பேராதனைப் பல்கலைக் கழக பேராசிரியர் துரை மனோகரன் அவர்கள் “மெல்லிசை இயல்பாகவே எவரையும் கவரக்கூடியது. இதுவே பல்வேறு பக்திப் பாடல்கள், திரைப்படப் பாடல்கள், சமுதாய எழுச்சிப் பாடல்கள், அரசியல் பிரசாரப் பாடல்கள் முதலியவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது. இலங்கையில் 1970கள் முதலாக மெல்லிசைப் பாடல்கள் பெரும் வளர்ச்சி பெறத் தொடங்கின. இத்தகைய வளர்ச்சிக்கு இலங்கை வானொலி ஒரு முக்கிய களமாக விளங்கியது. அது வழங்கிய ஊக்கத்தின் மூலம் ஏராளமான கவிஞர்களின் மெல்லிசைப் பாடல்கள் (எனது உட்பட) இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகத் தொடங்கின. தற்போது மெல்லிசைப் பாடல்கள் தொடர்பில் பெரும் உற்சாகத்தை இலங்கை வானொலியில் காண முடியாவிடினும், ஒருகாலத்தில் அதன் பங்களிப்பு உச்சநிலையில் இருந்தது. எவ்வாறாயினும், இலங்கையில் மெல்லிசைப் பாடல் வளர்ச்சியில் ஈடுபட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். இவ்வகையில், இத்துறை தொடர்பாக தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. இலக்கியத் துறையில் இளம் படைப்பாளியான ரிஸ்னா குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களைச் செய்து வருகின்றார்.