ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் பங்குனி மாத இலக்கியக் கலந்துரையாடல்: ‘தமிழ் இதழியல்சார் முக்கிய முன்னெடுப்புகள்’ – கனடியச் சூழலைமையப்படுத்திய அநுபவப்பதிவுகள்

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!‘தமிழ் இதழியல்சார்  முக்கிய முன்னெடுப்புகள்’ – கனடியச் சூழலைமையப்படுத்திய அநுபவப்பதிவுகள்

ஒருங்கிணைப்பு: பேராசிரியர் நா.சுப்பிரமணியன்

சிறப்புபேச்சாளர்கள் உரை:
”கலை இலக்கியத் தளங்களில் உலகுதழுவிய இயங்குநிலை” -திரு.செல்வம் அருளானந்தம் (காலம்)
”சமூக – பண்பாட்டுச்  சிந்தனைகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் எதிர்கொண்ட அநுபவங்கள்” – திரு. பி.ஜெ.டிலிப்குமார்  (தாய்வீடு)

Continue Reading →

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் : மெல்பனில் அனைத்துலக பெண்கள் தின விழா. கண்காட்சி – கருத்தரங்கு – பட்டிமன்றம் – மெல்லிசை, நடன அரங்கு – ஆவணப்படக்காட்சி.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்: அனைத்துலக பெண்கள் தின விழா  2017

அவுஸ்திரேலியா மெல்பனில் நடைபெறவுள்ள  அனைத்துலகப் பெண்கள் தினவிழாவில்,  ( அண்மையில் மெல்பனில் மறைந்த ) இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை முன்னாள் பணிப்பாளர் திருமதி பொன்மணி குலசிங்கம் அவர்களைப்பற்றிய நினைவுரை இடம்பெறும். அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வருடாந்தம் நடத்தும் அனைத்துலகப் பெண்கள் தினவிழா இம்முறை மெல்பனில் – பிரஸ்டன் நகர மண்டபத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி ( 11-03-2017) சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8 மணிவரையில் நடைபெறும்.

இவ்விழாவை மெல்பனில் வதியும்  கலை, இலக்கியம், கல்வி சார்ந்த சமூகப்பணியாளர்கள் மங்கல விளக்கேற்றி தொடக்கிவைப்பார்கள்.  திருமதி ஞானசக்தி நவரட்ணம் அவர்களின் தையல் நுண்கலை கைவினைக் கண்காட்சியுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும். இவ்விழாவில் இடம்பெறும் கருத்தரங்கில் மெல்பனில் வதியும் மூத்த இளம் தலைமுறையினர் பங்குபற்றும். திருமதி மங்களம் வாசன்  அவர்களின் தலைமையில் இடம்பெறும் கருத்தரங்கில், செல்வி மதுபாஷினி பாலசண்முகன் ” பாரதியும் பெண்விடுதலையும் ” என்ற தலைப்பிலும் செல்வி மோஷிகா பிரேமதாச  ” மறைந்த எழுத்தாளர் அருண். விஜயராணியின் சமூகம் சார்ந்த வாழ்வும் படைப்புலகமும்” என்னும் தலைப்பிலும் உரையாற்றுவர்.

அண்மையில் மெல்பனில் மறைந்த இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தமிழ்ச்சேவைப்பணிப்பாளர் திருமதி பொன்மணி குலசிங்கம் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் பற்றிய நினைவுரையை வானொலி ஊடகவியலாளர் திரு. பொன். குமாரலிங்கம் நிகழ்த்துவார்.

Continue Reading →

கவிஞர் அம்பியின் வாழ்வும் பணிகளும். புலம்பெயர்ந்து ஓடிடும் தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கும் மூத்த எழுத்தாளர்.

அம்பி மனைவியுடன்ஏறினால் கட்டில், இறங்கினால் சக்கரநாற்காலி. அத்தகைய ஒரு வாழ்க்கையை அவுஸ்திரேலியா சிட்னியில் கடந்துகொண்டிருக்கும் ஈழத்தின் மூத்த கவிஞர் அம்பி அவர்கள் அண்மையில் தனது 88 ஆவது  வயதைக் கடந்திருக்கிறார். எனினும்,  நினைவாற்றலுடன் தனது கடந்த கால வாழ்க்கைப் பயணத்தை நம்முடன் தொலைபேசி ஊடாக பகிர்ந்துகொண்டார். அன்பின் மறுபெயர் அம்பி என சில வருடங்களுக்கு முன்னர் மல்லிகை, ஞானம் அட்டைப்பட அதிதி கட்டுரையில் இவர் பற்றி எழுதியிருக்கின்றேன். நான் எழுதப்புகுந்த 1970 காலப்பகுதியிலிருந்து இவருடனான எனது இலக்கிய நட்புறவு குடும்ப நட்புறவாகவும் நெருங்கியமைக்கு அம்பியின் நல்லியல்புகளே அடிப்படை.

சிட்னிக்கு சென்றால் அவருடன் சில மணிநேரங்கள் செலவிடுவதும் அவரது நனைவிடை தோய்தல் கதைகளை செவிமடுப்பதும்,  அவருடன் அமர்ந்து உணவு அருந்துவதும் எனது வழக்கம். நகைச்சுவையும் அங்கதமும் அவரது பேச்சில் இழையோடும். நினைத்து நினைத்து சிரிக்கத்தக்க பல கதைகளை அவர் எனக்கு சொல்லியிருக்கிறார்.

உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடுகின்றேன். அவர் மெல்பனுக்கு வரும் சமயங்களில் எமது இல்லத்தில் தங்குவார். ஒரு தடவை அவர் இரவு உணவுக்குப்பின்னர் எடுக்கும் மருந்தை ( மாத்திரை) கொண்டுவருவதற்கு மறந்துவிட்டார்.
( நாமிருவரும் நீரிழிவுடன் சொந்தம் கொண்டாடுபவர்கள்)

நல்லவேளையாக என்னிடம் அவர் எடுக்கும் மாத்திரையின் மற்றும் ஒரு வகை இருந்தது. பெற்றுக்கொண்டார்.

Continue Reading →

என் கற்பனைப் பேரன் தமிழ்-காளையனுக்கு மடல்: (சனத்தொகைப் பிரச்சினைகள் போன்றவை பற்றி)

-பேராசிரியர் கோபன் மகாதேவா -என் அன்புக்குரிய பேரன் தமிழ்-காளையனே, வணக்கம்!  உன் அழகுத் தேவதைத் தங்கை  தேன்மொழியாள் சுகமா? உன் வீட்டில் பெரிசு சிறிசாகப் பதின் மூன்று நபர்கள் வாழ்வதாகவும், எனவே உனக்கு நிம்மதியாய் இருந்து படிக்கவும் நித்திரை கொள்ளவும்   முடியாது இருப்பதாகவும், ஆதலால் பெற்றோர், பன்றிகள் போல் கண்-மண் தெரியாமல் பிள்ளைகள் பெறுவதை அரசினர் தடைசெய்ய வேண்டும்!  என்றும் கோபித்து எழுதியிருந்தாய்.  எமது சமுதாய, வறுமை, அரசியல் பிரச்சினைகளுக்கு எல்லாம் மூலமான காரணி சனத்தொகைப் பிரச்சினையே என சரியாகவே உணர்ந்துள்ளாய்.  எனவே இக்கட்டுரை உனக்கே வரைந்தது.   நான் சொல்வதைக் கவனமாகக் கேள்.

பேரா!  எம் இவ்வுலகம் சூரியனிலிருந்து 457-கோடி வருடங்களின் முன் வெடித்துப் பிறந்தது என்றும், அதில் 77-கோடி ஆண்டுகளின் பின் சிற்றுயிர்கள் தோன்றி இருக்கலாம் என்றும், 200,000-150,000 ஆண்டுகளின் முன்னரே எம் மூதாதையர் ஆகிய, நிமிர்ந்து நடக்கும் மனிதரின் இனம் ஆபிரிக்காவின் குரங்குகளிலிருந்து இயற்கையால் உருவாக்கப் பட்டு இருக்கலாம் என்றும், தமது அணு-மரபு-வழி விஞ்ஞானப் பரிசோதனைகளால், இன்றைய சிம்பன்சிக் குரங்குக்கும் எம்மின மனிதருக்கும் இடையில் 98.4 வீதம் ஒப்புமை இருப்பதாகத் தாம் கண்டு பிடித்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆபிரிக்காவில் ஒரு பகுதியினர் வாழ்ந்து வந்து தம்பாட்டில் விருத்தியடைய, மிச்சப் பகுதியினர் ஐரோப்பா, ஆசியா, மத்திய கிழக்கு, அமெரிக்கா முதலிய கண்டங்களுக்குக் கூட்டாக 125000 தொடக்கம் 60000 ஆண்டுகளின் முன் சென்று தாமும் தம் போக்கில் விருத்தி அடைந்தே இன்றைய மனிதஇனம் உருவாகியது என்றும், சமூகவரலாற்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 225 : சாத்திரியின் ‘ஆயுத எழுத்து’

சாத்திரியின் 'ஆயுத எழுத்துசாத்திரிஅண்மையில் சாத்திரியின் ‘ஆயுத எழுத்து’ வாசித்தேன் அவ்வாசிப்பு பற்றிய என் கருத்துகளே இப்பதிவு. சாத்திரியின் ‘ஆயுத எழுத்து’ நூலின் முக்கியம் அது கூறும் தகவல்களில்தானுள்ளது.தமிழினியின் அபுனைவான ‘கூர்வாளின் நிழலில்’ நூலின் ஞாபகம் சாத்திரியின் புனைவான ‘ஆயுத எழுத்து’ நாவலை வாசிக்கும்போது எழுந்தது. தமிழினியின் அபுனைவு சுயசரிதையாக, தான் சார்ந்திருந்த அமைப்பின் மீதான சுய விமர்சனமென்றால், ‘ஆயுத்த எழுத்து’ தான் அமைப்பிலிருந்த அனுபவங்களின் அடிப்படையில் தன்அனுபவங்களை, தான் அறிந்த விபரங்களைக்கூறும் புனைவாகும். புனைவென்பதால் இந்நாவல் கூறும் விடயங்கள் சம்பந்தமாக யாரும் கேள்வி எழுப்பினால், ‘இது அனுபவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட நாவல்’ என்று கேள்வி கேட்டு தப்பிப்பதற்கு நிறையவே சாத்தியமுண்டு. தமிழினியின் ‘கூர்வாளின் நிழலில்’ ஆவணச்சிறப்பு மிக்கதாக, கவித்துவ மொழியில் ஆங்காங்கே மானுட உணர்வுகளை வெளிப்படுத்துவதாக, மானுட நேயம் மிக்கதாக, இலக்கியச்சிறப்பு மிக்கதாக அமைந்திருக்கும் அபுனைவுஎன்றால், சாத்திரியின் ‘ஆயுத எழுத்து’ம் தவிர்க்கப்படக்கூடியதல்ல. ஆவணச்சிறப்பு மிக்க புனைவான ‘ஆயுத எழுத்து’ நாவலில் ஆங்காங்கே அங்கதச்சுவை மிக்கதாக, மானுட உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும் பகுதிகளும் இருக்கத்தான் செய்கின்றன.


அங்கதச்சுவையுடன் ஆரம்பத்தில் ‘டெலி’ ஜெகன் பற்றிய பகுதி அமைந்திருக்கின்றது. அவ்விதமான அங்கதச்சுவை மிக்கதாகவே முழு நாவலும் அமைந்திருந்தால் ‘ஆயுத எழுத்து’ அற்புதமான, இலக்கியச்சிறப்பு மிக்கதொரு பிரதியாகவும் அமைந்திருக்குமென்பது என் தனிப்பட்ட கருத்து. உண்மையில் அங்கதச்சுவை மிக்கதாக ‘டெலி’ ஜெகன் பற்றிய பகுது இருப்பதால், நூலினை படித்து முடிந்தும் கூட, நூலில் கூறப்பட்ட முக்கியமான பல தகவல்களையும் விட ‘டெலி’ ஜெகனின் இயக்க நடவடிக்கைகள் பற்றிய விபரிப்புகளும், அவரது துயரகரமான முடிவும் நெஞ்சில் நிற்கவே செய்கின்றன. அவரது இயக்க நடவடிக்கைகளை ஆசிரியர் அங்கதச்சுவை மிக்கதாக விபரித்திருந்தாலும்,வாசிக்கும் ஒருவருக்கு ஜெகனின் தாய் மண் மீதான பற்றும், அதற்கான விடாப்பிடியான போராட்ட முன்னெடுப்புகளும் நெஞ்சில் படமென விரிகின்றன. அதுவே ஆசிரியரின் எழுத்துச்சிறப்பு. அதனால்தான் கூறுகின்றேன் சாத்திரி அந்த நடையிலேயே முழு நாவலையும் படைத்திருக்கலாமே என்று.

Continue Reading →