Save மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்றுகொண்டிருந்தபோது எமது முதலாவது வருடத்தில் ‘வெளிக்களக் கட்டடக்கலை’ (Field Architecture) என்றொரு பாடமுமிருந்தது. அப் பாடம் வார இறுதி நாள்களிலொன்றான சனிக்கிழமையில்தானிருக்கும். அப்பாடத்தின் நோக்கம் கட்டடக்கலை முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களைச் சென்று பார்ப்பது. எமது பல்கலைக்கழகம் கொழும்பு மாநகரிலுள்ள மொறட்டுவைப்பகுதியிலிருந்ததால் கொழும்பு மாநகரிலுள்ள கட்டடங்களையே சென்று பார்ப்பது. கட்டடக்கலைஞர்களின் கவனத்துக்குள்ளாகிய இல்லங்கள், பழம்பெரும் சரித்திரச்சின்னங்கள், நகரின் சுதந்திர சதுக்கம் போன்ற முக்கிய கட்டடங்கள் ஆகிய பல கட்டடங்களைச் சென்று பார்த்திருக்கின்றோம். அவ்விதம் சென்று பார்த்த எல்லாக்கட்டடங்களின் விபரங்களும் ஞாபகத்தில் இல்லாவிட்டாலும் சில கட்டடங்களுக்கான எமது விஜயங்கள் மட்டும் இன்னும் பசுமையாக ஞாபகத்திலுள்ளன.
இப்பாடத்துக்கு எமக்கு விரிவுரையாளராகவிருந்தவர் இன்று தெற்காசியாவின் முக்கிய கட்டடக் கலைஞர்களிலொருவராக அறியப்படும் கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரன் அவர்களே. புகழ்பெற்ற கட்டடக்கலைஞராக விளங்கிய ஜெஃப்ரி பாவாவின் (Geoffrey Bawa) மாணவர். இவரைபற்றி Anjalendran: Architect of Sri Lanka என்னுமொரு நூலினை டேவிட் ராப்சன் (David Robson) என்பவர் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அஞ்சலேந்திரனின் கட்டடக்கலைப்பங்கபபளிப்பு பற்றிப் பின்னர் விரிவாக எழுதும் எண்ணமுண்டு. யாழ் நகரிலுள்ள பல்வேறு காரணங்களுக்காகப் புகழ்பெற்ற அசோகா ஹொட்டலை வடிவமைத்தவர் இவரே. அக்ஹொட்டல் வடிவமைக்கப்பட்ட காலத்தில்தான் இவர் எங்களுக்கு விரிவுரையாளராகவிருந்தார். அதனால் எமது விடுமுறைக்காலத்தில் அக்ஹொட்டல் கட்டி முடிக்கப்பட்டிருந்த ஆரம்ப காலத்தில் அங்கு சென்று பார்த்திருக்கின்றோம். இவர் மிகவும் புகழ்பெற்ற தமிழ் அரசியல்வாதிகளிலொருவராக விளங்கிய ‘அடங்காத்தமிழன்’ என்று அறியப்பட்ட, முன்னாள் வவுனியாப் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த சுந்தரலிங்கம் அவர்களின் பேரன். எமக்கு இப்பாடமெடுத்துக்கொண்டிருந்ந காலத்தில் எப்பொழுதும் டெனிம்ஸ் பாண்ட் அணிந்து வருவார். இவர் சிறுவயதிலிருந்தே கொழும்பு வாசியாகவிருந்தவரென்று நினைக்கின்றேன்.