அஞ்சலி: கமலா தம்பிராஜா நினைவுகள்: மூத்த ஊடகவியலாளர் கமலா தம்பிராஜா நினைவுகள்! ஐ.ரி. என். தொலைக்காட்சி செய்திமஞ்சரியில் அவர் அன்று பெற்ற சன்மானம்!!??

வாழ்வின் அந்திம காலங்களில் தனித்துவிடப்படுபவர்கள், விடப்பட்டவர்கள் பற்றி அறிந்திருக்கின்றேன். அவ்வாறு தனித்தே வாழ்ந்திருக்கும் ஆளுமைகள் பற்றி பேசியும் எழுதியும் வந்திருக்கின்றேன். சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வீரகேசரி பிரசுரமாக ஒரு நாவல் வெளிவந்தது. ‘ நான் ஓர் அனாதை’ என்ற அந்த நாவலை எழுதியவர் கமலா தம்பிராஜா. கதை மறந்துவிட்டது! அவர் அந்தத்தலைப்பில் ஏன் எழுதினார்? என்பதற்காகவாவது மீண்டும் அதனைத்தேடி எடுத்துப்ப டிக்கவேண்டும்போலிருக்கிறது. நானறிந்தவரையில் சகோதரி கமலா, தனது தனிப்பட்ட வாழ்வின் பெரும்பொழுதுகளை தனிமையில் கழித்திருந்தாலும், அவர் சார்ந்திருந்த ஊடகத்துறையில் பலருக்கும் மத்தியில் இயங்கிக்கொண்டே இருந்தவர். கடந்த 7 ஆம் திகதி அவர் கனடாவில் டொரொன்டோவில் காலமானார் என்ற தகவல் கிடைத்ததும் உடனடியாக அதனை ஊர்ஜிதப்படுத்திக்கொள்வதற்காக கனடாவில் வதியும் வீரகேசரியின் முன்னாள் விளம்பர – விநியோக முகாமையாளர் திரு.து. சிவப்பிரகாசம் அவர்களைத்தொடர்புகொண்டேன். அதன்பின்னர், இலங்கையிலிருக்கும் ‘ கலைக்கேசரி’ ஆசிரியை திருமதி அன்னலட்சுமி இராசதுரை அவர்களுக்கும் செய்தி சொல்லி துயரத்தை பகிர்ந்தேன். வீரகேசரியிலிருந்து கமலா, தகவல் அமைச்சிற்குச்சென்ற பின்னர் அவ்வப்போது எங்கள் அலுவலகத்திற்கு வந்தால் நெடுநேரம் அன்னலட்சுமி அக்காவுடன்தான் பேசிக்கொண்டிருப்பார். வீரகேசரி பத்திரிகையில் செல்வி கமலா தம்பிராஜா 1970 களிலேயே ஊடகவியலாளராக தனது தொழிலை ஆரம்பித்தவர். அதன்பிறகு 1972 இல் நான் வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபராக அங்கு இணைந்தேன். அதனால் அவர் எனக்கு மூத்த ஊடகவியலாளர். 1977 இல் நான் அங்கு ஒப்புநோக்காளராக ( Proof Reader) வேலைக்குச்சேர்ந்த வேளையில் கமலா, தகவல் அமைச்சின் செய்தித்தொடர்பாளர் பணியில் இணைந்துவிட்டார். அவ்வப்போது வீரகேசரி அலுவலகம் வந்து தனது நண்பர்கள் சிநேகிதிகளுடன் உறவைப்பேணிக்கொண்டிருந்தார். கமலா யாழ்ப்பாணத்தில் பிரபல வேம்படி மகளிர் கல்லூரியில் தனது உயர்தர வகுப்பைத்தொடர்ந்த காலத்திலேயே எழுத்தாற்றல், பேச்சாற்றல் நிரம்பிய ஆளுமைமிக்க பெண்ணாக திகழ்ந்ததாக அவருடைய ஆசிரியை, தற்பொழுது சிட்னியில் வதியும் திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார். வேம்படி மகளிர் கல்லூரியிலிருந்து பேராதனை பல்கலைக்கழகத்திற்கு பிரவேசித்த கமலா, பட்டம் பெற்றதும் ஊடகவியலாளராகவே வீரகேசரியில் இணைந்தவர். அதனால் செய்தி எழுதுவது, வரும் செய்திகளை செம்மைப்படுத்துவது, மொழிபெயர்ப்பது முதலான துறைகளிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தி வந்திருப்பவர். சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். பின்னாளில் இலங்கை வானொலியில் இணைந்து நிகழ்ச்சிகள் தயாரித்தார். செய்திகளை வாசித்தார். இவ்வாறு அவர் பெற்றுக்கொண்ட அனுபவங்களே அவர்தேடிய மூலதனம். அதுவே அவரை தொலைக்காட்சியிலும் பிரவேசிக்கத்தூண்டியது. இலங்கையில் முதல் முதலில் 1979 இல் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் I.T.N. ( Independent Television Network) தொடங்கப்பட்டபோது செய்தி மஞ்சரியில் செய்திகளை தொகுத்துவழங்கினார். ரூபவாஹினி தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோது, அங்கும் தமிழ் செய்தியாளரானார். சிறுவர் நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்தார். ஈரானிய உயர் ஸ்தானிகராலயத்திலும் செய்தித் தொடர்பாளராகவும் சேவையாற்றியவர். இவையெல்லாம் அவர் நேசித்த – சார்ந்திருந்த ஊடகத்துறை பணிகள். 

1980 களின் பிற்பகுதியில் கனடாவுக்கு அவர் குடிபெயர்ந்த பின்னர் காணும் வாய்ப்பு இல்லாமல் போனது. அதற்கு முன்னர் 1976 இல் அவரை தமிழ்த்திரைப்படத்தில் கண்டோம். காவலூர் ராஜதுரையின் கதை வசனம், தயாரிப்பில் தர்மசேன பத்திராஜவின் இயக்கத்தில் வெளியான பொன்மணி திரைப்படத்தில் பொன்மணியின் அக்காவாக தோன்றினார். அதிலும் தனித்துவிடப்பட்ட பாத்திரமே அவருக்கு கிடைத்திருப்பது தற்செயல்தான். மூன்று சகோதரிகள் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது மகளாக சீதனம் தரக்கூடிய நிலையில்லாதமையால் திருமணம் தள்ளிப்போகும் பரிதாபத்திற்குரிய பாத்திரம். சங்கீதம் பயிலும் அந்தச்சகோதரி பாத்திரம், ” பாதையில் எத்தனை ராதைகள் பேதைகள்… காத்திருப்பார் கண்ணனை” என்ற பாடலுக்கு வீணையை மீட்டியவாறு வாயசைக்கும்.

Continue Reading →

”உலகத்தமிழ்” : படைப்புகள் வரவேற்கப்படுகின்றன

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை ”உலகத்தமிழ்” என்னும் மின்னிதழைத் தொடங்கவுள்ளது. அந்த இதழுக்காக உலகெங்கிலுமுள்ள பேராசிரியா்கள், ஆய்வு மாணவா்கள், தமிழறிஞா்கள், தமிழ் ஆா்வலா்களிடமிருந்து தரம்வாய்ந்த படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. …

Continue Reading →