அஞ்சலி: எழுத்தாளர் விதுரன் (இராசையா தங்கேஸ்வரன்) மறைவு!

“ஓ! மனிதர்களே நம்புங்கள்.
நான்,
பிரபஞ்சத்தில் ஒளி தேடுபவன்.
சிறந்த சித்தாந்தத்தின் புத்தன்.
இப்பூவுலகம் என் போதிமரம்.” – விதுரன் –

அஞ்சலி: எழுத்தாளர் விதுரன் (இராசையா தங்கேஸ்வரன்) மறைவு!இப்பொழுதுதான் முகநூலில் இராசையா தங்கேஸ்வரனின் மறைவுச் செய்தினை அறிந்து கொண்டேன். உண்மையில் மிகவும் அதிர்ச்சியாகவிருந்தது. இவர் முல்லைத்தீவு கற்சிலைமடுவைச் சேர்ந்தவர். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் இவர் ஒர் எழுத்தாளர் என்பது சிலரே அறிந்ததொன்று. விதுரன் என்னும் பெயரில் சில சிறுகதைகளையும், கவிதைகள் சிலவற்றையும் எழுதியிருக்கின்றார் (நானறிந்த வரையில்). மேலும் அதிகமாக எழுதினாரா என்பது தெரியவில்லை. இவரது சிறுகதையான நிஜதரிசனம் தேடல் (தேடக வெளியீடு) சஞ்சிகையின் பங்குனி 1994 இதழில் வெளியானது. இலங்கையிலிருந்து அகதியாக அமெரிக்கா வரும் தமிழ்ப்பெண்ணொருத்தியைக் கனடாவிலிருந்து சென்று அழைத்துவரும் தமிழ் இளைஞனைப்பற்றியது. அதில் இவர் பெண்ணுரிமை, தமிழர்தம் பெற்றோர் பார்த்துச் செய்யும் திருமணமுறை, புகலிடப்பெண்கள் நிலை, காதல், இணைந்து பழகும் டேட்டிங் என்று பல விடயங்களைச்சுற்றிக் கதையினை அமைத்திருப்பார். இவரது கவிதையான காணாமல் போன ஆடு தேடலின் மே 1997 இதழில் வெளியாகியுள்ளது. இவரைச் சந்திக்கும் தருணங்களில் மேலும் எழுதும்படி கூறுவேன். எழுதுவேன் என்று கூறுவார். மேலும் எழுதினாரா என்பது தெரியவில்லை.

ஒருமுறை இவருடன் சம்பாஷித்துக் கொண்டிருந்தபொழுது 1983 கலவரத்தைத்தொடர்ந்து சிறிது காலம் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் இணைந்திருந்ததாகவும், அதன் காரணமாகச் சிறிது காலம் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட இளைஞர்களொருவராக இலங்கைச் சிறையொன்றில் சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். நான் அவரது சிறை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்படி , பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர் அது பற்றி எதுவும் பின்னர் பதிவு செய்ததாகத் தெரியவில்லை.

பல வருடங்களுக்கு முன்னர் வன்னிச்சங்கம்(கனடா) மலர் வெளியிட்ட கொம்பறைக்கு ஆக்கம் நாடி அணுகியிருந்தார். கொடுத்ததாக ஞாபகம். அக்கட்டுரை கொம்பறை` மலரொன்றில் வெளியாகியிருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். அக்காலகட்டத்தில் வன்னியில் மாணவர்களுக்காக இலாப நோக்கற்ற அமைப்புக்காகச் சிறு தொகை கொடுத்தபோது நன்றி கூறிக் கடிதம் அனுப்பியிருந்தார். பின்னர் அவ்வப்போது மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்வதுண்டு. அண்மையில் கூட கண்புரை சத்திரசிகிச்சை பற்றிப் பதிவொன்றினையிட்டிருந்தபொது அச்சிகிச்சையினைத் தான் பல வருடங்களுக்கு முன்னர் செய்ததாகவும், அது பற்றிய அறிவுறுத்தல்களையும் முகநூலில் உள்பெட்டியில் தெரிவித்திருந்தார். அண்மையில் கூட ஜனவரி 23 எனது பிறந்தநாளினையிட்டு வாழ்த்துச் செய்தியினையும், பொங்கல் வாழ்த்துச் செய்தியினையும் அனுப்பியிருந்தார்.

Continue Reading →

ஆய்வு: அகநானூற்றில் காட்டுயிரி வாழிடச் சூழலும் மனிதத் தலையீடும்

- முனைவர் இரா. சுதமதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி - 627008 -முன்னுரை
காட்டுயிரி என்பது வீட்டுப் பயன்பாடு சாராத அனைத்து வகையான தாவரங்கள், விலங்குகள், பறவைகள் போன்றவையாகும். காட்டுயிரிகளை, அவை வாழ்கின்ற இடங்களில் பாதுகாப்பாகவும் எவ்வித இடையூறின்றியும் வைத்துக் கொள்ள முயற்சிக்கின்ற போக்குச் ‘சூழல் பாதுகாப்பு’ எனப்படுகிறது. இத்தகையச் சூழல் பாதுகாப்பைப் பழந்தமிழர் காட்டுயிரிகளுக்குக் கொடுத்து வாழ்ந்ததைச் சங்க இலக்கியங்களில் பரவலாகக் காணலாம். ஆயினும் காட்டுயிரிகளின் வாழிடச் சூழல், மனிதர்களின் தலையீடு காரணமாகப் பெரும் விளைவுகளை எதிர்கொண்ட செய்திகளையும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவ்வாய்வுக் கட்டுரை சங்க இலக்கியங்களுள் ஒன்றான அகநானூற்றின் வழி காட்டுயிரிகளின் வாழிடச் சூழலில் மனிதத் தலையீடு குறித்து விரிவாக ஆராய முற்படுகிறது.

காட்டுயிரிகளும் வாழிடச் சூழலும்
மனிதர்களிடமிருந்து தனித்து வாழக்கூடிய காட்டுயிரிகளுக்கு அவற்றைச் சுற்றியிருக்கின்ற சூழலே பாதுகாப்பான வாழிடச் சூழலாகும். காட்டுயிரிகளான தாவரங்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவை வாழக்கூடிய தகுந்த சூழல் அமைப்புகள் காடுகளில் இருந்தே கிடைக்கின்றன.

“கோழிலை வாழைக் கோள்முதிர் பெருங்குலை
ஊழுறு தீம்கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரல் பலவின் சுளையொடு, ஊழ்படு
பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது
கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது
நறுவீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்”    (அகம்.2)

என்னும் பாடல்வரிகள் காட்டுயிரிகளின் வாழிடச் சூழலுக்கு மிகச் சிறந்த சான்றாகும். குறிஞ்சி நிலத்தில் வாழையின் பெரிய குலையிலுள்ள முதிர்ந்த இனிய கனியாலும் பலாவின் முற்றிய சுளையாலும் பாறையில் அமைந்த பெரிய சுனையில் உண்டான தேனை ஆண் குரங்கு உண்டு, அருகிலிருந்த மிளகுக் கொடி படர்ந்த சந்தன மரத்தில் ஏற மாட்டாது, அதன் நிழலிடத்து இருந்த மலர்ப்படுக்கையில் மகிழ்ந்து உறங்கியது என்னும் வருணனை, வளமையும் செழிப்பும் மிக்க காட்டுயிரிகளின் வாழிடச் சூழலை அழகுற எடுத்துரைப்பதாகும். தம் வாழிடத்தில் பாதுகாப்பை உணர்ந்து இனிது உறங்கும் குரங்கு, துய்ப்போர் இன்மையால் தாமாகவே பழுத்து உதிரும் பழ மரங்கள் எனும் இவை மனிதத் தலையீடு இல்லாத அழகிய வாழிடச் சூழலை உணர்த்தி நிற்கின்றன.

Continue Reading →

திருவள்ளுவரின் பிறப்பிடம் – ஓர் ஆய்வு

இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை:
தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களை நூலில் எந்த ஓரிடத்திலும் குறிப்பிடாமல் உலக மனித குலம் கொண்டும் கொடுத்தும் ஒற்றுமையாய் மனித நேயத்தோடு இணைந்து ஒரே குலமாக ஒருலகமாக வாழ ‘திருக்குறள்’ என்னும் உலகப் பொதுமறை அருளிய திருவள்ளுவர் தோன்றிய நாடு நமது செந்தமிழ் நாடு இதனையே

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ் நாடு”

என்று வியந்து பாராட்டுகிறார் பாரதியார்.

திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு
திருவள்ளுவரின் பிறப்பு பற்றியும், பெயர் பற்றியும், பிறந்து வாழ்ந்து மறைந்த இடம் பற்றியும் பல கட்டுக்கதைகள் உண்டு. திருவள்ளுவரின் தாய் தந்தையர் ‘ஆதிபகவன்’ என்பவர். சிலர் அதாவது ‘ஆதி’ என்ற பறையர் குலப்பெண்மணிக்கும் ‘பகவன்’ என்பவர்க்கும் பிறந்தார் என்பதாம் மற்றும் எதற்கெடுத்தாலும் எதிலும் சமஸ்கிருத பார்வையால் தேடிக் கொண்டிருப்போர்களின் ஆசைப்படி, சமஸ்கிருத வார்த்தையின் ‘வல்லப’ என்ற வடமொழி பெயரே தமிழில் வள்ளுவராக மாறியது என்று கனவு கண்டு சொல்வாரும் உளர்.

வள்ளுவர் நெசவாளர் தொழில் புரிந்தவர் என்ற வழக்கம் உள்ளது. அந்த மாதிரி திருக்குறள் ஆசிரியர் பெயரிலும,; சமயத்திலும், பிறப்பிலும் கூட பலதரப்பட்ட கற்பனையால் பின்னப்பட்ட செய்திகள் உலவினாலும் இதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை. வள்ளுவரின் மனைவி வாசுகி எனும் கற்புக்கரசியர் ஆவார். ‘இறும்பூது’ செயல் கற்பினாலும் நிகழலாம். இறைவன் அருளிய ஈவினாலும் நிகலாம். திருவள்ளுவருக்கு வாசுகி அருமையான வாழ்க்கைத் துணைவியாக இருந்திருக்க வேண்டும். வாசுகி அம்மையார் மறைவில்,

“அடிசிற்கு இனியாளே அன்புடையாளே
படிசொற் கடவாத பாவாய் அடிவருடிப்
பின் தூங்கி முன்எழும் பேதையே போதியோ
என் தூங்கும் என் கண் இரா”        (வ.வா.கு)

எனும் வள்ளுவரின் இரங்கற்பா உள்ளத்தை உருக்குவதாகும். மக்கள் எவரும் இருந்தாகத் தெரியவில்லை. திருவள்ளுவர் என்று குறிப்பிடப்படுபவர் யானை மீது அமர்ந்து நகரம் முழுவதும் விரைவி வந்து அரசக்கட்டளைகளை பறையறைந்து தெரிவிக்கும் பணியினை மேற்கொண்டார் என ‘மணிமேகலை’ சொல்கிறது.

Continue Reading →

சிறுகதை: வில்லுப்பாட்டுக்காரன்

பொன் குலேந்திரன்இலங்கையில் “உடப்பு “என்றவுடன் நம் நினைவில் வந்து நிற்பது தீக்குளிப்பு திருவிழா, வில்லுப்பாட்டு, கரகாட்டம். கும்மி, கரை வலை இழுக்கும்போது   மீனவர்கள் ஒத்து பாடும் அம்பா பாடலுமே . கரப்பந்தாட்டத்துக்கும் அக்கிராமம் பிரசித்தமானது.. தென்னிந்தியாவை முஸ்லீம்கள் ஆட்சிசெய்தபோது , 16ம் நூற்றாண்டில் மதுரை மங்கம்மாவுக்கும் இராமநாதபுரம் ராசாவுக்குமிடையே போர் மூண்ட நேரம் மதமாற்றத்துக்கு பயந்து 18 குடும்பங்கள் 12 வள்ளங்களில் புலம் பெயர்ந்து, நன்நீர் தேடி. கற்பிட்டி. உடப்பு ஆனவாசல் முதல் கலாஓய வரை குடியேறினர்  இவர்கள் வீரமிக்க திடகாத்திரமான மக்கள். மன்னாருக்கும் புத்தளத்துக்கும் இடைப்பட்ட பகுதி ஒரு காலத்தில் செழித்து திகழ்ந்தது. தென்னிந்தியாவில் இருந்து வந்து குடியேறிய இவர்கள் தங்கள் குல தெய்வம் ஸ்ரீ திரௌபதையம்மனுக்கு கோயில் அமைத்து வழிபட்டனர். மீன் பிடித்தலும் முத்துக்குளித்தலும் இவர்கள் தொழில் .. இக்கிராமத்தை  சுற்றி பௌத்தர்களும், கத்தொலிக்ர்களும், இஸ்லாமியர்களும்  வாழும் பல சிங்கள கிராமங்கள் உண்டு  , வடமேல் மாகாணத்தில், கொழும்பு புத்தளம் வீதியில் பத்துளு ஓயாச்சந்தியிலிருந்து வடமேற்காக 4 மைல் தூரத்தில் இந்து சமுத்திரத்தின் கரையோரத்தில் உடப்பு கிராமம் அமைந்துள்ளது. ஏறக்குறைய 4000 தமிழ் குடும்பங்கள் இவ்வூரில் வாழ்கின்றன. இங்கு வாழ்பவர்கள் பெரும்பாலானோர் இந்து மதத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள்.  இவ்வூரின் தெற்கே குறுமண்கழி என்ற கடலுடன் தொடர்பற்ற உப்புநீர் நிறைந்த அளமும் . கிழக்கே ஒல்லாந்தரின் வெட்டுவாய்க்காலும் , வடக்கே இவ்வூரார் வாழும் ஆண்டிமுனைக் கிராமமும் , மேற்கே இந்து சமுத்திரமும் காணப்படும். கொழும்பையும் புத்தளத்தையும்  இணைக்கும் நீர்பாதையாக ஒல்லாந்தரின் வெட்டுவாய்க்கால் அமைந்துள்ளது. முற்காலத்தில் சரியான பாதைபோக்குவரத்து இல்லாத காரணத்தால் இவ்வாய்க்கால் வர்த்தகப் பொருட்கள் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டது. ஊருக்கு ஒரு மைல் தூரத்தில் உள்ள ஆண்டிமுனையில், கடற்கரையோரத்துக்கு அன்மையில் நன்னீர் ஊற்றுகளும் குளிக்கும் கிணறுகளுமுண்டு. இவ்வூருக்கு அண்மையில் உள்ள பத்துளு ஓயாவென்ற ஆற்றின் முனையில் உள்ள மண்ணை நீக்க உடைப்பு ஏற்படுத்தி  ஆற்றின் வெள்ள நீர் கடலுக்குபாச்சுவதன் மூலம் புத்தளம் முதல் ஆனைவிழுந்தாவ பிரதேசங்கள் வரையுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்காமல் காப்பாற்றப்படகின்றன. ஆற்றின் முனையில் உள்ள உடைப்பே பின் மருவி உடப்பாகியதென்பது பலர் கருத்து.

பழந் தமிழரின் தொன்மையான கலைகளுள் வில்லுப்பாட்டு. இந்தக் கிராம மக்களின் பிரதான  இசைக் கலைகளில் ஓன்று  வில்லைப் பிரதான இசைக் கருவியாகவும்,உடுக்கை, குடம், தாளம், கட்டைஹார்மோனியம்  போன்றவற்றைத் துணைக் கருவிகளாகவும் கொண்டு இசைக்கப்படுவது வில்லுப்பாட்டு. அதோடு அக்கிராம பெண்கள் நாட்டுப் பாடல்கள் பாடுவதில்  சிறந்தவர்கள்.      பொதுவாகப் புராண இதிகாசக்  கதைகளும்  கட்டபொம்மன் கதை, காந்தி மகான் கதை, செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.கதை,பாரதி கதைகளும் வில்லுப் பாட்டாகப் பாடப் படுவதுண்டு. தெம்மாங்கு முதலான நாட்டுப்புறப் பாடல் மெட்டுக்களும் கூத்துப்  பாடல் மெட்டுக்களும் வில்லிசையிற் கையாளவதில் பெரியதம்பி  சோமஸ்கந்தர் உடப்பு கிராமத்தில்  புகழ் பெற்றவர். அவருக்கு ஆசான்  அவருடைய தந்தை  பெரியதம்பி.  கந்தர் என்று ஊர் வாசிகலாள் அழைக்கபடும் சோமஸ்கந்தர் அரச சேவையில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1950  இல் ஆசிரிய நியமனம் பெற்று  கொழும்பில் தங்கியிருந்து பணியாற்றிய காலத்தில் திரைப்படநடிகரும் வில்லிசையாளருமாகிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் தொடர்பு இவருக்குக் கிட்டியது. நாடக உத்திகளையும் வில்லிசை நுட்பங்களையும் கலைவாணிரிடமிருந்து கற்றுக்கொண்ட கோவில்களில் வில்லிசை நிகழ்ச்சியை நடத்தினார்

Continue Reading →