– அண்மையில் மறைந்த எழுத்தாளர் ‘கவிஞர் செழியன்’ அவர்களின் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியான சிறுகதைகள் இரண்டும், கட்டுரை ஒன்றும் அவரது நினைவாக இங்கு மீள்பிரசுரமாகின்றன. – பதிவுகள் –
பதிவுகள்.காம், ஜூலை 2005 இதழ் 67!
சிறுகதை: ஒரு சாண் மனிதன்! – செழியன் –
சாதாரணமாக ஒரு புகையிரத நிலையத்தில் நிகழ்வது போலத்தான் இது நடந்து வந்தது. ஏழு வித்தியாசங்கள் சொல்லலாம் என்றாலும் அதில் முக்கியமானது, இது அங்கு நடப்பது போல, இங்கு தினமும் நடைபெறுவதில்லை. வாரத்திற்கு ஒரு தடவை வருகின்ற புதன்கிழமைகளில் மட்டுமே நடக்கின்றது.
கண் இமைக்கும் நேரத்தில், மிக வேகமாக வருகின்ற புதையிரதத்தில் இருந்து, புகையிரத நிலைய அதிபரின் கைக்கு மாறுகின்ற அந்த வளையம் போல, கணநேரத்தில் இது கைமாறுகின்றது. பார்க்கின்ற போதெல்லாம், ஒரு கைதேர்ந்த சர்க்கஸ்காரர் நடத்துகின்ற அற்புதமான மாயாஜாலக் காட்சி போல எனக்குள் அதிசயத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அதிசயம் மட்டுமல்ல, யாராவது ஆசிரியர்கள் கண்டுவிட்டால் என்ன நடக்குமோ என்ற பெரும் பதைபதைப்பும், நடுக்கமும் எப்போதுமே எனக்குள் இருக்கும்.
புதன்கிழமைகளில் இரண்டாவதும், மூன்றாவதுமான தொடர் பாடமாக எமக்கு வருவது சுகாதாரம். இந்தப் பாடத்திற்காக பத்து- யு வகுப்பில் இருந்து பத்து- ஊ வகுப்புக்கு, எமது வகுப்பில் இருந்த பாதி மாணவர்கள் அணிவகுத்துச் செல்லவேண்டும். மிகுதி பாதிப்பேரும் பிரயோக கணிதத்திற்காக பெளதீக ஆய்வு கூடத்திற்குச் சென்று விடுவார்கள்.
இந்தப் புதன் கிழமை எப்போது வரும் என்று வகுப்பு முழுதும் காத்திருக்கும். சிலர் வெளிப்படையாக உணர்ச்சி வசப்பட்டுப் போய் நிற்பார்கள். இன்னும் சிலர் வெளியில் வேண்டா வெறுப்பாக இருப்பது போல காட்டிக் கொண்டு உள்@ர ஆசை ஆசையாக உமிழ்நீர் வடித்துக் கொண்டிருப்பார்கள்.
இதற்கு நியாயமான காரணம் ஒன்று இருந்தது. இது ஒன்றும் பெளதீக விதிகளைப் போல குழப்பமான, விளங்க முடியாத விடயம் ஒன்றும் கிடையாது. இந்தப் பாடநேரத்தின் போது மட்டும் தான் இருபது அழகான மாணவிகளுடன் நாம் ஒன்று சேர்ந்து ஒரே வகுப்பில் படிக்கின்ற வாய்ப்புக் கிடைத்து வந்தது. இத்தனைக்கும் இரு பாலாரும் சேர்ந்து படிக்கின்ற இந்துக் கல்லூரியாம் என்று இந்தக் கல்லூரிக்கு ஒரு மட்டமான பெயர்.
கொழும்பு நாலாம் குறுக்குத் தெருவில் இருக்கின்ற குறுகலான ஒரு சந்து போல இரண்டு அடி அகலமும், பன்னிரெண்டு அடி நீளத்துடன் இந்தக் கல்லூரியிலும் ஒரு சந்து இருக்கின்றது. புதன் கிழமைகளில் இதைக் கடந்துதான் நாம் செல்லவேண்டும்.