முன்னுரை
மனித இனம் தோன்றி நாகரிக வளர்ச்சி பெற்ற அன்றே நாட்டுப்புற இலக்கியங்களும் கலைகளும் தோன்றிவிட்டன என்று கூறலாம். நாட்டுப்புற மக்களின் பழக்க வழக்கங்களையும், பண்பாடுகளையும், நம்பிக்கைகளையும் இலக்கியங்களையும் ஆராயும் இயலே நாட்டுப்புறவியலாகும். ஒரு நாட்டின் வாழ்க்கை முறைகளையும், வரலாற்றின் குறைகளையும் நிரைகளையும் தெளிவாகக் காட்டுவன நாட்டுப்புற இலக்கியங்களே எனில் மிகையன்று. அவை மக்களின் பண்பாடு, பழக்க வழக்கம் வாழ்வில் நெறிமுறைகள் ஆகியவற்றை வெளிப்படையாக காட்டும் கண்ணாடி என்று கூறலாம்.
ஆய்வு பொருள்
திருவண்ணாமலை மலை மலைவாழ் மக்களில் ஒரு பிரிவினாக விளங்கும் இந்து மலை மலையாளி மக்களின் வாழ்வியல் முறைகளை ஆய்வதே இவ்வாய்வின் பொருள் ஆகும்.
ஆய்வு நோக்கம்
திரு+அண்ணாமலை = திருவண்ணாமலை என்றாயிற்று. இந்த மாவட்டத்திலிருந்து 80 கி.மீ தொலைவில் சவ்வாது மலை உள்ளது. சந்தனம், சவ்வாது போன்ற வாசனை பொருட்கள் அங்கு விளைந்த காரணத்தால் சவ்வாது மலை என்று பெயர் பெற்றது. இந்த சவ்வாது மலையில் மலையாளி எனும் சமூகத்தினர் தங்களது வாழ்வியல் சடங்கு முறைகளை மரபு வழுவாமல் தங்கள் முன்னோர்களின் வழியே பின்பற்றி செய்து வருகின்றனர். இதுவரை எவ்வித ஆய்வும் செய்யவில்லை. இவ்வாய்வே முதன் முறையாகும். அம்மக்களின் வாழ்வில் கடைபிடிக்கும் சடங்கு முறைகளை வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். பிற மலைவாழ் மக்களிடமிருந்து இவ்வினத்தினர் வேறுபடும் தன்மையைச் சுட்டிக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆய்வு மூலங்கள்
இக்கட்டுரையின் ஆய்விற்காக கள ஆய்வில் சேகரித்த தரவுகளே முதன்மை ஆதாரங்களாக விளங்குகின்றன.
ஆய்வுகளம்
தென் தமிழகத்தில் பரவலாக பழங்குடியினர் வசித்து வருகின்றனர். திருவண்ணாமலை மையமாகக் கொண்டு களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியிலுள்ள இந்து மலையாளி, மலையாளி இன மக்களின் சடங்குகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், அன்றாட வாழ்க்கை முறை ஆகியவற்றைச் சேகரிக்க இக்களஆய்வு துணைபுரிந்தன.
ஆய்வு எல்லை
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சவ்வாது மலை.