கே.எஸ்.சிவகுமாரனின் ‘பதிவுகள்’ இணைய இதழின் ஆரம்ப காலப்படைப்புகளை இங்கே வாசிக்கலாம்: http://www.geotamil.com/pathivukal/kss_writes.html
அ.ந.கந்தசாமி நினைவு தினம் பெப்ருவரி 14.
[ – – எழுத்தாளர் அ.ந.கந்தசாமியை அறிஞர் அ.ந.கந்தசாமி என்று அழைப்பர். இலக்கியத்தின் பல துறைகளிலும் தன் ஆளுமையினைப் பதித்தவர் அ.ந.க. ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை மிக்கவர். அவரது பன்முகப் புலமை காரணமாகவே அவர் அறிஞர் அ.ந.கந்தசாமி என்று அழைக்கப்பட்டார். அதனால்தான் கலாநிதி க.கைலாசபதி அவர்கள் தனது ‘ஒப்பியல் இலக்கணம்’ நூலினை அ.ந.க.வுக்குச் சமர்ப்பணம் செய்தார். ‘அ.ந.க. என்ற ஆய்வறிவாளர்’ என்னும் ‘தினக்குரலில்’ வெளியான இச்சிறு கட்டுரையில் புகழ்பெற்ற கலை, இலக்கியத்திறனாய்வாளரான கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் ‘அ.ந.க ஓர் அறிஞரே’ என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார். அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்த இக்கட்டுரை இன்னுமொரு வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் அ.நக.வுடனான தனது அனுபவங்களையும் பதிவு செய்திருக்கின்றார் என்பதுதான் அம்முக்கியத்துக்குக் காரணம். – . – பதிவுகள் -]
INTELLECTUAL என்றொரு ஆங்கில வார்த்தை உண்டு. அகராதியொன்றின் படி “” AN INTELLECTUAL IS ONE WHO THINKS AND ACTS PREDOMINANTLY TO SERVE THE PURSUIT OF KNOWLEDGE AND APPRECIATION OF FINE THINGS IN LITERATURE AND THE ARTS, AND IS LESS CONCERNED WITH THE MUNDANE AND MATERIAL ASPECTS OF LIFE’ தமிழிலே, இந்தப் பதத்திற்குக் கொடுக்கப்பட்ட அகராதியொன்றின் விளக்கம்: – ” அறிவுத் திறனுடையவர், ஆய்வறிவாளர், அறிஞர்’ மேலும் INTELLECTUALISM என்பதனை விளக்குகையில் அவ்வகராதி இவ்வாறு விளக்குகிறது. அறிவுத்திறம் வாய்ந்த ஆய்வுணர்வுக்குரிய அறிவுக்குகந்த அறிவுத்திறன் நோக்கிய ஒருவரின் ஆய்வறிவுக் கோட்பாடு எல்லா அறிவும் ஆய்வுத் திறத்தின் விளைவே எனுங்கொள்கை’. இவைதான் உண்மையான விளக்கம் என்றிருக்க ஈழத்து இதழியலாளர் பலரும் ஏனையோரும் தப்பும் தவறுமாக இன்டலெக்ஷ?வல் என்பதனை “”புத்திஜீவிகள்’ என்றே எழுதிவிடுகிறார்கள். அர்த்தம் தெரியாமல் ஆங்கிலமொழிப் பரிச்சயம் இல்லாததால் தமிழ் நாட்டுப் பத்திரிகையாளர் சிலர் “”புத்திஜீவிகள் என்று எழுதிவிட கண்மூடித்தனமாக நமது பத்திரிகையாளர்கள் சிலரும் “”புத்திஜீவிகள்’ என்றே எழுதிவிடுகின்றனர். தமிழ்நாட்டு வெகுசனங்களிடையே பிரபல்யம் பெறும் சொற்கள் சிலவற்றை நாமும் பின்பற்றுவது நமது தராதரத்தை கீழிறக்கி விடுவது போலாகிவிடும்.புத்தியை மாத்திரமே முதலாகக்கொண்டு ஜீவிப்பவர்கள் தான் “”புத்திஜீவிகள்’ ஆனால் அதுவல்ல INTELLECTUAL என்ற வார்த்தையின் உட்பொருள் “”ஆய்வறிவுடன் கூடிய அறிஞர்களே “” ஆய்வறிவாளர்’ ஆவர்.
அ.ந.க.
அமரர் அ.ந.கந்தசாமி நாம் பெருமைப்படக்கூடிய நமது மார்க்சியத் திறனாய்வாளர்/படைப்பாளி ஆவர். அவர் உண்மையிலேயே ஓர் ஆய்வறிவாளராவர்.
இற்றைக்கு 48 வருடங்களுக்கு முன்னர் அ.ந.கந்தசாமி அவர்களை முதன்முறையாக சந்தித்தேன். மறைந்துபோன தீவிர மார்க்சிய இலக்கியவாதியான எம்.எஸ்.எம். இக்பால், அ.ந.க.வை அறிமுகப்படுத்திவைத்தார். அந்நாட்களில் இப்பொழுது இல்லாமலே போய்விட்ட அன்றைய உள்ளூராட்சிச்சேவை அதிகாரசபையின் அலுவலகத்திலே நான் தமிழ் மொழிபெயர்ப்பாளராகத் தொழில் பார்த்து வந்தேன். அந்த அலுவலகம் கொழும்பு கோட்டை கபூர் கட்டிடத்தில் செயற்பட்டது.எனது அலுவலகத்திற்கு பக்கத்தில் எம்.எஸ்.எம். இக்பால் பணிபுரிந்த அலுவலகம் இருந்தது. அக் கட்டிடத்தின் மேல் மாடியிலே மறைந்துபோன “ரெயின்போ’ கனகரத்தினம் ஓர் அலுவலகத்தில் வரவேற்பாளராக பணிபுரிந்துவந்தார்.